காவல்துறையின் சிவப்புநிற கட்டிடங்களுக்குள்ளே சிதறிக் கிடக்கும் மனிதாபிமானத்தை, சிந்தாமல் சிதையாமல் கேள்விக்குள்ளாக்கி இருக்கும் படம், ‘விசாரணை’. வெகுஜன ரசனை என்று சொல்லிக்கொண்டு இன்னும் குத்துப் பாட்டுக்களையும் ஒரே அடியில் பத்துபேர் சாகும் ஆக்ஷனையும் தந்து கொண்டிருக்கும் சினிமாவில், ‘விசாரணை’ ஓர் ஆக்ரோஷ அம்பு. ‘எல்லாரும் அந்தப் படத்தைப் பாருங்க’ என்று நீதித்துறையில் இருக்கும் பலரே, விசாரணைக்கு விளம்பரம் செய்வது, படத்துக்கு வெனிஸில் கிடைத்த விருதை விட, பெரிது. எப்படி சாத்தியமானது? இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசினோம்.
‘ஒரு படைப்பாளியை விட, அவன் படைப்புதான் பெருசு’ன்னு சொல்வார் எழுத்தாளர் சி.மோகன். இந்தப் படம் அப்படியொரு அடையாளத்தைக் கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன். இதை எப்படி எடுத்தீங்கன்னு கேட்டா, இப்படியொரு படத்தை எடுக்கும் தைரியமும் ஆளுமையும் எனக்கு இருக்கான்னே தெரியலை. ஏன்னா, இது நான் எடுக்கிற படம் இல்லை. ‘விசாரணை’ என்னை வைத்து தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட படம்னுதான் சொல்வேன்.
‘விசாரணை’யின் கையில், நான் ஒரு கருவி. பாலுமகேந்திரா சார், ‘ஒரு படம் நல்லா வரணும்னா, அது உன்னை கருவியா வச்சு அது தன்னைத்தானே உருவாக்கிக்கும்’னு சொல்வார். அந்த அடிப் படையில இதுல இருக்கிற உண்மையும் நேர்மையும் மக்கள்ட்ட போய் சரியா சேரணும்னு அதுவே உருவாக்கிக் கொண்ட படம்னு நினைக்கிறேன். இது நான் எடுக்கிற படமே இல்லை. இது எனக்கு அமைஞ்ச படம்’ என்கிறார் வெற்றிமாறன்.
எல்லாருக்கும் ‘விசாரணை’ போய் சேரும்னு நினைச்சீங்களா?
பிப்ரவரி 5-ம் தேதி படம் ரிலீஸ் ஆச்சு. நம் பார்வையில, வழக்கமான வெகுஜன பார்வையாளனுக்கு, சினிமாவுல தேவைகள்னு ஒண்ணு இருக்குமில்லையா, அது குறைவா இருக்கிற படம், விசாரணை. இது நல்ல படம் அப்படிங்கறதுல மாற்றுக் கருத்து இல்லை. அவன் எப்படி ஏத்துக்கிறான் அப்படிங்கற சந்தேகம் இருந்தது. அந்த மனநிலையில தியேட்டர்களுக்கு போய் பார்த்தா, சென்னை, செங்கல்பட்டு மாதிரியான நகரங்கள்ல கைதட்டல், ஆரவாரம் கிடைச்சது. படத்துல எங்கெல்லாம் தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த முடியுதோ, அங்கெல்லாம் கைதட்டுறாங்க.
படம் முடிஞ்சு போகும் போது, கனத்த இதயத்தோட மவுனமா எழுந்து போனாங்க. அது எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. இப்படியொரு வரவேற்பை நான் எதிர்பார்க்கலை. இந்தப் படத்தை வெகுஜன பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்ட விதம் என் கற்பனைக்கு எட்டாததா இருக்கு. அதுக்கு காரணம் என்னனா, ஏதோ ஒரு விதத்துல அவனுக்கு இந்த சமூக அமைப்பு கொடுக்கிற அழுத்தத்தை இந்தப் படத்துல அவன் உணர்றான். படத்துல வர்றவங்களை அவனோட பிரதிநிதியா பார்க்கிறான்னு நினைக்கிறேன். அதே நேரம் இந்தப் படத்தை ரொம்ப ரசிக்கிறாங்க அப்படிங்கறதை விட, மதிக்கிறாங்கன்னு தெரியுது. படம் பார்த்த அத்தனை பேரும் மற்றவங்க கிட்ட, படத்தைப் பார்க்க சொல்றாங்க.
உங்களோட சக இயக்குனர்கள், ரிலீசுக்கு முன்னாலயே பாராட்டுகளை தெரிவிச்சாங்களே?
ஆமா. வெனிஸ் விருதுக்குப் பிறகு நிறைய பாராட்டுகள். படம் பார்த்த எல்லாருமே பாராட்டினாங்க. அவங்க பாராட்டுவாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, மக்கள் எப்படி பார்ப்பாங்கன்னு தெரியலை. இப்ப, படத்தை அவங்க கொண்டாடின விதம், பெரிய விஷயம். இந்தப் படம் ரசிகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பெரிய தைரியத்தைக் கொடுத்திருக்கு. அடுத்தாப்ல இதுபோல, நல்ல படம் எடுத்தா, ரசிகர்கள் ஏத்துக்குவாங்க அப்படிங்கற நம்பிக்கையை கொடுத்திருக்கு.
பெண்கள் வரவேற்பு எப்படி இருக்கு?
படத்துக்கு பெண்கள் வரமாட்டாங்கன்னு முதல்ல சொன்னாங்க. நாங்களும் அப்படித்தான் நினைச்சோம். இளகிய மனம் கொண்டவர்களுக்கான படமா, இது இருக்காதுன்னு நினைச்சோம். ஆனா, அவங்களும் அதிகமா பார்க்க வர்றாங்க. படத்தின் கேரக்டர்களோட கஷ்டத்தை தங்களோட கஷ்டங்களா பார்த்துப் பகிர்ந்துட்டுப் போறாங்க. இன்னைக்கு இருக்கிற சமூகச் சூழலின் பிரதிநிதியாகத்தான் இந்தப் படத்தையும் படத்தின் கதாபாத்திரத்தையும் பார்க்கிறாங்க.
படத்தோட இரண்டாம் பகுதியை ‘லாக்கப்’ நாவல்ல இருந்து எடுக்கலையே?
எழுத்தாளர் சந்திரகுமார், தன்னோட சிறை அனுபவங்களை இரண்டு நாவலா எழுதி இருக்கார். ஒண்ணு, ‘லாக்கப்’. இன்னொன்னு, ‘கட்டுதளையினூடே காற்று’. இந்த நாவல், சிறையில அவங்க அனுபவிக்கிற கஷ்டங்களைச் சொல்லிப் போகும். அவரே இரண்டு வேறு வேறு புத்தகங்களாத்தான் எழுதியிருக்கார். அதனால நாங்களும் மாத்திக்கலாம்னு நினைச்சோம். திரும்பவும் ஜெயில் அடி, உதைன்னு வச்சா, நிறைவா இருக்கும்னு தோணலை. தவிர்த்துட்டோம். உண்மைச் சம்பவங்களை வச்சு ஆரம்பிக்கப்பட்ட கதை இது. இரண்டாம் பாதியையும் அப்படியே தொடர்ந்தா என்னன்னு தோணுச்சு. உருவாக்கினோம்.
உண்மைச் சம்பவங்களை படம் பண்ணுவது கஷ்டமாயில்லையா?
அது எளிமையா, எளிமை இல்லையா அப்படிங்கற விஷயம் வேண்டாம். அந்த மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. வேதனைப் பட்டிருக்காங்க. அதை மக்கள்ட்ட பகிர்ந்துக்கணும்னு எனக்கு தோணுச்சு. படத்துல நடிச்ச, தினேஷ், ‘ஷாட்ல அடிக்கும் போது எனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ‘ஷாட் ஓகே. கட்’டுன்னு சொன்னா, நான் வெளியில சுதந்திரமா வந்திரலாம். ஆனா, நிஜமாகவே அனுபவிச்ச ஆட்கள் இருக்காங்கன்னு நினைச்சதும் எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு நடிச்சு முடிக்கணும்னு தோணுச்சு’ன்னு பேட்டிகள்ல சொன்னார். அதே மாதிரி எல்லாருக்குமான இன்வால்மென்ட் இருக்கில்லையா, அது இந்த மாதிரி படங்கள் பண்ணும்போது எல்லார்கிட்டயும் அதிகமா இருக்கு.
‘விசாரணை’க்கு கிடைச்சிருக்கிற வணிகரீதியான வெற்றியை எப்படி பார்க்குறீங்க?
இது ஒரே ஒரு விஷயத்தைத்தான் உணர்த்துது. மிக தேர்ந்த, உயர்ந்த ரசிப்புத்தன்மையும் நுண்ணிய கலா ரசனையும் பரந்த மனப்பான்மையும் உடைய வெகுஜன ரசிகன் உலகத்துலயே யார்னா, அது தமிழ் ரசிகன் தான். விசாரணை அதை எனக்கு உணர்த்தியிருக்கு.
-http://cinema.dinakaran.com