ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பிய பெங்களூர் கோர்ட்

rajini34பெங்களூர்: பாலாபிஷேகம் என்ற பெயரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் லிட்டர் கணக்கில் பாலை வீணடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுபவர் ரஜினிகாந்த். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அவரது ரசிகர்கள் திருவிழா போல பேனர், கட்-அவுட் என்று கொண்டாடித் தீர்ப்பர். மேலும் லிட்டர் கணக்கிலான பாலையும் ரஜினியின் பேனர்களுக்கு ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். இந்நிலையில் இந்த செயலுக்கு தடைவிதிக்கக் கோரி, பெங்களூர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

அதில் “நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளியாகும்போது, அவரது ரசிகர்கள் பாலை ரஜினியின் பேனர்களுக்கு ஊற்றுகிறார்கள். இதனால் பல லிட்டர் அளவிலான பால் வீணடிக்கப்படுகிறது. இதனை தடை செய்யவேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார். இந்த பொதுநல வழக்கை இன்று விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. ரஜினி தற்போது கபாலி, 2.ஓ போன்ற படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com