புலமை இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு பாடல் எழுதுவது அதிகரித்துவிட்டது என்றார் திரைப்பட பாடலாசிரியர் சினேகன்.
நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் “எதிர்கொள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கதாநாயகன் சினேகன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்த் திரைப்படங்களில் நான் இதுவரை 2,500 பாடல்கள் எழுதியுள்ளேன். 7 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவது பிடித்துள்ளதா? அல்லது கதாநாயகனாக நடிப்பது பிடித்துள்ளதா? என்று கேட்டால் பாடல் எழுதுவதுதான். பாடல் எழுதும்போது அதற்கு நான் தான் முதலாளி. கதைக்கு ஏற்ப என் சிந்தனையில் உதிக்கும் வார்த்தைகளை பாடலாக எழுதும் சுதந்திரம் இருக்கும். ஆனால், நடிக்கும்போது இயக்குநரின் உத்தரவுகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டு நடிக்க வேண்டியிருக்கும். தற்போது புது, புது பாடலாசிரியர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகின்றனர். தற்போது புதிதாக பாடல் எழுத வரும் சில கவிஞர்களுக்கு தமிழ்ப் புலமை என்பது இல்லை. தமிழ் இலக்கியம் தெரியாமல் தமிழ்த் திரைப்படத்துக்கு பாடல்கள் எழுத வருபவர்கள்தான் அதிகமாக உள்ளனர். இது வேதனை அளிப்பதாக உள்ளது என்றார் சினேகன்.
-http://www.dinamani.com