தில்லுக்கு துட்டு விமர்சனம்

dhillukku-dhuttoநடிகர்கள்: சந்தானம், ஷனாயா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கருணாஸ் ஒளிப்பதிவு: தீபக்குமார் பதி

இசை: எஸ் தமன்

தயாரிப்பு: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

இயக்கம்: ராம்பாலா

லொள்ளுசபா ராம்பாலா தன் ஆரம்ப ஹீரோவான சந்தானத்துடன் வெள்ளித் திரையில் கைகோர்த்திருக்கிறார் முதல் முறையாக. அய்யய்யோ பேய்ப் படமா என எல்லோரும் தெறித்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அத்தனைப் பேரையும் இழுத்து உட்காரவைத்து, இந்தாங்க இன்னொரு பேயையும் பாத்துட்டு முடிவு பண்ணுங்க என்று சொல்லியிருக்கிறார்கள் ராம்பாலாவும் சந்தானமும்.

சந்தானம் ஒரு தில்லான நார்த் மெட்ராஸ் வெட்டிப் பையன். ஹீரோயின் சனாயா சேட்டு வீட்டுப் பொண்ணு. இருவரும் பால்ய சினேகிதர்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகு வித்தியாசமாக சந்தித்துக் கொள்கிறார்கள். ஏகத்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. சேட்டு வீட்டில் எதிர்ப்பு. ஆனால் மகளின் பிடிவாதத்தால், வேறு முடிவு எடுக்கிறார் சேட்டு. மர்டர் ஸ்பெஷலிஸ்ட் ராஜேந்திரனைச் சந்தித்து ஐடியா கேட்கிறார். திருமணம் செய்து வைப்பதாகக் கூறி மலையில் உள்ள ஒரு பேய் பங்களாவுக்கு அழைத்து வந்து சந்தானத்தை போட்டுத் தள்ள ஐடியா கொடுக்கிறார்.

ஓவர் டு பேய் பங்களா… அங்கு என்னென்ன கலாட்டாக்கள் நடக்கின்றன, சந்தானம் காதல் நிறைவேறியதா, பேய் பங்களாவில் பேய் இருந்ததா? இதெல்லாம் மீதிக் கதை. பேய்ப் படங்களைப் பார்த்து சுத்தமாக பயமே போய்விட்ட நிலையில், இந்தப் படம் லேசாக பயமுறுத்தல், ப்ளஸ் ஏக சிரிப்பை வரவழைக்கிறது. பேய்க் கதையை இப்படியும் ஒரு கோணத்தில் யோசித்ததற்காக இயக்குநரைப் பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்தது சந்தானம். ஒரு ஹீரோவாக அவர் சரியான ரூட்டைப் பிடித்துவிட்டார். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலுமே நின்று விளையாடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் இன்றைய முன்னணி ஹீரோக்களைவிட பர்ஃபெக்ட் டைமிங். அந்த கார் பார்க்கிங் சண்டைக் காட்சி ஒன்று போதுமே. கெட்டப் மாற்றம் மட்டுமல்ல, பாடி லாங்குவேஜிலும் ஏக மாற்றங்கள். அவரது கடுமையான மெனக்கெடலுக்கு உரிய பலன் கிடைத்திருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம். அவரும் அதைப் புரிந்து நடித்திருக்கிறார். ‘மாசம் பொறந்து இருவது நாளாச்சு.. ஒரு கொலை கூட பண்ணல.. மன்த்லி டார்கெட்டை அச்சீவ் பண்ண வேணாமா?’ என டைமிங்காக வசனம் பேசுவதாகட்டும், நிஜப் பேயே வந்து கதவைச் சாத்தும்போது, அது புரியாமல் அந்தக் கதவோடு மல்லுக்கட்டுவதாகட்டும்… வயிற்றைப் பதம் பார்க்கின்றன இவர் வரும் காட்சிகள்.

நாயகி சனாயாவுக்கு படத்தில் முக்கிய அசைன்மென்ட், ‘எந்தக் காட்சியாக இருந்தாலும் முந்தானை ஒரு பக்கம் முழுசா விலகியே இருக்கட்டும்’ என்பது போலும். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனந்த ராஜ், கருணாஸ் இருவருமே கலக்கியிருக்கிறார்கள் அவரவர் வேடங்களில். ‘கொஞ்சம் காமெடி பண்ணினா வில்லன்கறதையே மறந்துடறீங்க…’, ‘ஏன்டா, நாங்கள்லாம் சீரியஸா வசனமே பேசக் கூடாதா?’ என்று கேட்டு கலகலக்க வைக்கிறார் ஆனந்த ராஜ். இப்படி பாஸிடிவ் சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன படத்தில். பேய் விஷயத்தில் வித்தியாசமாக யோசித்தவர்கள், க்ளைமாக்ஸை மட்டும் திபெத் பேயோட்டி, முருகன் வேல், ஆத்மாவை உடம்பிலிருந்து வெளியேற்றுவது என சீரியஸாக சொதப்பியிருக்கிறார்கள்.

தமனின் பாடல்களில் ஒன்றே ஒன்று தேறுகிறது. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை சில காட்சிகளில் பலே. ஆனால் இடைவேளைக்குப் பிறகு இரைச்சல். ஒளிப்பதிவு ஓகே. தில்லுக்கு துட்டு தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. சினிமா என்பது மூன்று மணிநேரப் பொழுதுபோக்கு. அதை ஒழுங்காகத் தந்தால் போதும் என்ற நினைப்புடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் ராம்பாலா. தான் நினைத்ததை 90 சதவீதம் சரியாகவே திரையில் கொண்டுவந்திருக்கிறார். அதுவே பெரிய வெற்றிதானே!

http://tamil.filmibeat.com