ஒரு ஹீரோ மீது பிரியத்தோடு ஆரம்பிக்கப்படும் ரசிக மன்றம் என்பது வெட்டிவேலை என கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இன்றைய சூழலில் ரசிகர் மன்றம் என்பது தமிழ்நாட்டிலேயே மிகுந்த லாபம் தரும் பிசினஸ், அரசியலுக்கு செல்லும் குறுக்கு வழியும் கூட… இதை பற்றி இன்னும் ஆராய்ந்தோம்.
“இன்னிக்கு இருக்கும் ரசிகர் மன்றங்கள்ல ரவுடிகள் தான் அதிகம்.
நல்ல லாபம் தர்ற பிசினஸ்.
அரசியலுக்கு போறதுக்கான குறுக்கு வழின்னு இருக்கும்போது அதுல என்ன அப்துல் கலாமா இருப்பாரு? அதைப் பத்தி நான் சொல்லி என்னை போட்டு தள்ளுறதுக்கா? நான் வேணா சொல்றேன்.
ஆனா பேர் போடாம எழுதிக்குங்க தம்பி” என்றபடியே சொல்ல ஆரம்பித்தார் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த அந்த நல்ல மனிதர். “ரசிகர் மன்றங்கள் பாப்புலரானதே 1977-1978 களில் தான்.
அப்போதுதான் எம்ஜிஆர் தனியாகக் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்திருக்கிறார். அமைச்சராக பதவியேற்பவர்களின் பட்டியல் ஒரு பத்திரிகையில் வருகிறது. முதல் நபர் பெயர் முசிறிபுத்தன்.
இவர் முசிறியில் நின்று வென்றவர். அதற்கு முந்தைய தகுதி எம்ஜிஆர் ரசிக மன்ற தலைவர். அவருடைய செயல்பாடுகள் என்னென்ன என்று கேட்டால் தலைவரின் இந்தப் படத்தை இத்தனை தடவை பார்த்தேன் என நாலைந்து படங்களை பட்டியலிட்டிருந்தார். அவ்வளவுதான். அடுத்த அமைச்சர், ராகவானந்தம் என்பவரும் தலைவர் ரசிக மன்றத்தில் இருந்து வந்ததாக சிலம்பத்தோடு போஸ் கொடுத்திருந்தார். இதுதான் தொடக்கப் புள்ளி.
இதனை பார்த்தவர்களுக்குத்தான் ரசிக மன்றங்களின் முக்கியத்துவம் தெரிந்தது. எப்படி உருவானது ரசிகர் மன்றங்கள்? முன்பெல்லாம் நடிகர்கள் தங்களது பிறந்தநாளுக்கு விளம்பரம் கொடுப்பார்கள்.
அதற்கு அந்த குறிப்பிட்ட நடிகர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் பட தயாரிப்பாளர்களை பயன்படுத்திக்கொள்வார்கள். முக்கால்வாசி நடிகர்கள் தங்களது டிரைவர்களைத்தான் தங்களது ரசிக மன்ற தலைவராக நியமித்துக் கொள்வார்கள். ஒரு நடிகன் எல்லாவற்றையும் இழந்தாலும் கூட கடைசியில் தங்களது லோக்கல் தொடர்புக்கு மிஞ்சியிருப்பது டிரைவர் மட்டும் தான். அந்த டிரைவர் சேர்ப்பதுதான் நடிகருக்கான ரசிகர் கூட்டம். அதுதான் ரசிகர் மன்றமாக உருவெடுக்கிறது. செல்வாக்கு 1996ல் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்த நேரம்.
தேர்தலின் போதும் தேர்தலுக்கு பிறகும் ரஜினி ரசிகர் மன்றத்தினரின் செல்வாக்கு உயர ஆரம்பித்தது. இதைப் பார்த்த மற்ற ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் அரசியல் ஆசை பிறக்கிறது. லோக்கலில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவது முதல் பிறந்த நாளுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை அதிகாரம் நீள்கிறது. கூட்டம் சேர சேர கட்டப் பஞ்சாயத்தும் தொடங்குகிறது.
ரசிக மன்ற பொறுப்பு என்பது வெட்டிவேலை என்பது மாறி சமூக அந்தஸ்து என்பது போன்ற தோற்றம் உருவாகிறது. பொய்க் கணக்கு அந்தஸ்து ஓகே… சம்பாத்தியம்? அதற்குத்தான் தியேட்டர் ஃபர்ஸ்ட் ஷோ உதவுகிறது. முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது என்பது நிறைய பேர் விரும்பும் விஷயம். அதனைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்குகிறார்கள் மன்றத்தினர்.
ஹீரோக்களும் தனக்கு பின்னால் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காகவும், எதிர்கால(?) நலனுக்காகவும் ரசிகர் மன்றத்தினரை வளர்க்க ஆரம்பிக்கிறார்கள்.
ரசிகர் மன்றத்துக்கு அங்கீகார எண், அவர்களுக்கு லெட்டர்பேடு என விரிகிறது. தலைவர்கள் அந்தந்த மன்றத்துக்கு தனக்கு வேண்டிய ஆட்களை பொறுப்புகளில் நியமித்துக் கொள்கிறார்கள். மன்றங்கள் பெருகுகின்றன. எல்லா ஹீரோக்களுமே தனக்கு இத்தனை ஆயிரம் மன்றங்கள், இத்தனை லட்சம் ரசிகர்கள் என சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
இதனை எல்லாம் கணக்கு எடுத்தால் தமிழ்நாட்டு மக்கள் தொகையைத் தாண்டும். எம்ஜிஆர் சாதிக்கட்சி தலைவர்களை அழைத்து கணக்கு கேட்ட கதைதான். இதற்கு காரணம் ஒரே ரசிகரே நான்கைந்து ஹீரோக்களின் ரசிக மன்றத்தில் இருப்பதுதான். எனவே எல்லாமே பொய்க்கணக்கு. பிசினஸ் முதல் ரசிகர் மன்றத்தில் பொறுப்புகளில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இப்போது அதில் இருக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்கள் பெயரைச் சொல்லி இப்போது இருப்பவர்கள் தியேட்டர்களில் டிக்கெட் வாங்கிப் போவார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் ரசிக மன்றத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் பிளாக் டிக்கெட் விற்பவர்களுடன் தொடர்பு இருக்கும். மாவட்ட தலைமை தான் ரசிக மன்ற ஷோ என்ற பெயரில் தியேட்டர் விலைக்கு டிக்கெட்களை வாங்கி பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பது. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களின் டிக்கெட் முதல் இரண்டு நாட்களுக்கு 400, 500 என விற்பதற்கு இதுதான் காரணம்.
இதில் மாவட்ட தலைமை எப்படியும் லட்சக்கணக்கில் பணத்தை பார்த்துவிடுவார்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வந்த பின்னரும் இது தொடர்கிறது. ஹீரோக்களின் தயவால் டிக்கெட் மொத்தமாக லாக் செய்யப்பட்டு மன்றத்தினருக்கு வழங்கப்படுகிறது. அரசியல் அரசியலுக்கு நல்லது செய்தும் உள்ளே வரலாம், கெட்டது செய்தும் உள்ளே வரலாம். ரசிகர் மன்றங்கள் இவை இரண்டுக்குமே வாய்ப்புகளை வாரி வழங்குகின்றன. ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஆங்காங்கே விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். ஒரு பிரபலத்தின் பெயரைச் சொன்னால் நிச்சயம் கூட்டம் கூடும்.
அந்த கூட்டத்தை வைத்து தான் அடுத்து அரசியலுக்கு நுழைவார்கள் ரசிக மன்றத்தினர். இது அவர்களிடையே போட்டி, பொறாமையை உண்டக்குகிறது. ரசிக மன்றங்கள் உள்ளேயே அரசியல் நுழைகிறது. ரசிகர் மன்றங்கள்தான் தனது வெற்றிக்கு காரணம் என்று ஹீரோக்கள் நினைப்பது மாயை. அப்படி பார்த்தால் ஹீரோக்களின் எல்லா படங்களுமே பெரிய வெற்றியை பெற்றிருக்குமே?” என்ற ஒரு நியாயமான கேள்வியோடு முடித்தார். தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், “ரசிக மன்றத்தால் தியேட்டர்காரர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. கெட்ட பெயர்தான் மிஞ்சுகிறது. தியேட்டர்காரர்களிடம் மிரட்டி மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு அவற்றை பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள்.
மக்களுக்கு இதனால் எந்த நலனும் கிடையாது. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது குறைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம்,” என்று வேதனைபட்டு கொண்டார். ரசிகர் மன்றத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒருவரிடம் பேசினோம். “தியேட்டர்காரர்களே போலி ரசிக மன்றங்களை உருவாக்கி ஷோ எடுத்து பிளாக்கில் டிக்கெட் விற்பதுதான் இப்போது பெருமளவு நடக்கிறது. இப்போதெல்லாம் ஷோ எடுக்கவே மன்றத்தினர் பயப்படுகிறார்கள். தியேட்டர்காரர்களே எங்களுக்கு 200 அல்லது 300 ரூபாய் விலை வைத்துதான் கொடுக்கிறார்கள்.
சென்னையில் பிரபலமான அந்த தியேட்டர் ரஜினி படமென்றால் ரூ 500-க்கு கவுன்ட்டரிலேயே விற்கிறது. இதில் ஷோ எடுத்து நடத்தினால் நஷ்டம்தான் பட வேண்டும். ஆர்ச் கட்ட வேண்டும், தோரணம், கட்டவுட் என ஏகப்பட்ட செலவுகள் இருக்கின்றன. ரசிகர் ஷோ என்று சொல்லிக்கொண்டு தியேட்டர்காரர்களே நடத்தி லாபம் பார்க்கிறார்கள்”. ஆக, இவர்கள் சொல்வதைக் கேட்டால் ரசிகர்களுக்கும் லாபம் இல்லை, தியேட்டர்காரர்களுக்கும் லாபம் இல்லை, ஹீரோவுக்கும் லாபம் இருப்பதாக தெரியவில்லை. பின்னே எதற்கு இந்த ரசிகர் மன்றங்கள்? எப்போது ரசிகர்கள் ஒரு நடிகரைப் பார்த்து ‘என்னால் தான் நீ இந்த இடத்தில் இருக்கிறாய்…’ என்று சொல்லும் அளவு வந்துவிட்டாலே நடிகர்கள் ரசிகர்களை அடக்குவது அவசியம்.
இல்லாவிட்டால் அது குறிப்பிட்ட நடிகருக்கு கெடுதலாகத்தான் முடியும். திரையுலகில் அதிக ரசிகர் மன்றங்கள் இருப்பது ரஜினிக்குத்தான். தொன்னூறுகளிலேயே கிட்டத்தட்ட 40 ஆயிரம் மன்றங்களுக்கு மேல் இருந்தன. அப்போது திடீரென ஒரு முடிவு எடுத்தார் ரஜினி. புதிய மன்றங்கள் திறக்க அனுமதி கிடையாது என்று அறிவித்துவிட்டார். இன்று வரை புதிய மன்றங்களுக்கு அனுமதி கிடையாது.
காரணம், பிழைப்பு, தொழிலை விட்டுவிட்டு ரசிகர்கள் இதே வேலையாகக் கிடைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததுதான். ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை அவர் பெரிதாக ஊக்குவிப்பதும் இல்லை. பிறந்த இரண்டு வயதான குழந்தையிலிருந்து வயோதிகர் வரை, ஆண் பெண் பேதமின்றி அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மன்றங்களுக்கு மீண்டும் அனுமதி கொடுக்க ஆரம்பித்திருந்தால் லட்சத்தை எப்போதோ தாண்டியிருக்கும். பல முறை, பல ஆயிரம் ரசிகர்கள் கேட்டும் மீண்டும் மன்றங்கள் தொடங்க அனுமதி மறுத்துவிட்டார்.
ஆனால் ரசிகர்களோ, ஆன்லைனில் தாங்களே வித விதமான பெயர்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்கள் எனத் தொடங்கி பல நல்ல காரியங்களையும் செய்து வருகின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை அஜித் மங்காத்தா ஷூட்டிங்கில் இருந்தபோது நடந்த சம்பவம். ஸ்பாட்களை தேடிக்கண்டு பிடித்து அஜித்தைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர் கூட்டம் மொய்க்கும். ஷூட்டிங்குகளுக்கு பாதுகாப்பு தருபவர்களுக்கு தான் பெரிய தலைவலியாக இருக்கும். இது தொடர்ந்துகொண்டே இருந்தபோது தகவல் அஜித்துக்கு தெரிய வர அவரே வந்து ரசிகர்களை சந்தித்தார். சந்தித்தபோது அஜித் கேட்ட முதல் கேள்வி “நீங்கள்லாம் எங்கே வேலை செய்யறீங்க?” என்பதுதான்.
ஆளாளுக்கு ஒவ்வொரு வேலையாக சொன்னார்கள். “அதேபோல் எனக்கும் இது என்னுடைய வேலை பார்க்கும் இடம். இதனால் எத்தனையோ பேர் வேலை பாதிக்கப்படுகிறது. தயாரிப்பாளருக்கும் நஷ்டம் வரும்,” என்று பொறுமையாக எடுத்து சொன்னார் அஜித். அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் “நாங்க இல்லைன்னா நீங்க இந்த இடத்துக்கு வந்திருக்க முடியுமா?” என்று கேட்க, அஜித் அவரை பற்றி விசாரிக்க அவர் ரசிக மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது. அடுத்த நாளே ரசிக மன்றங்களைக் கலைப்பதாக முடிவெடுக்கிறார் அஜித்.
இன்றும் அஜித் சொல்வது இதுதான்: “நான் கலைத்தது ரசிக மன்றங்களைத்தான். ரசிகர்களை அல்ல. உண்மையான ரசிகர்கள் இதனை புரிந்துகொள்வார்கள்.” இப்போதும் ரஜினி படங்கள் வெளியானால் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவில்லை. மன்றங்களைக் கலைத்த அஜீத்துக்கும் இதேதான். படம் வெளியாகி முடித்த பிறகு இந்த ரசிகர்கள் அவரவர் வேலைகளைப் பார்க்கப் போய்விடுகிறார்கள். எதிர்கால நலனைப் பற்றி யோசிக்காமல், சுயநலம் பார்க்காமல் ரஜினி, அஜித் போன்றவர்கள் அன்று எடுத்த முடிவை மற்ற ஹீரோக்களும் பின்பற்றுவார்களா? – க.ராஜீவ் காந்தி