திருட்டு விசிடியை முற்றிலும் ஒழிப்போம்!- மத்திய அமைச்சர் வெங்கையா

venkaiahசென்னை: திரைத்துறையின் வளர்ச்சிக்கு சாபக்கேடாக திருட்டு வி.சி.டி.க்கள் இரும்புக் கரம் கொண்டு தடுக்கப்படும் என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், அவர் பேசுகையில், “இந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு திருட்டு வி.சி.டி.க்கள் தயாரிப்பு- விற்பனை பெரும் சாபக்கேடாக உள்ளது. இவற்றால் திரைத்துறை கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

மிகவும் பலமான ஊடகமான திரைப்படங்களில், இளைஞர்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான காட்சிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். ஆபாசம், இரட்டை அர்த்த வசனம், வன்முறை ஆகியன இல்லாத படங்கள் வெளிவர வேண்டும்.

நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடக் கூடிய படங்களை எடுக்கக் கூடாது. இன, மத,மொழி நல்லிணக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய படங்களைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வரக் கூடாது.

திரைப்படங்கள் மக்களின் வலிகளைப் போக்கும் வலி நிவாரணியாக இருக்க வேண்டும். மாறாக, வலி கொடுப்பதாக இருக்கக் கூடாது. இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். திரைப்படத்துறைக்கு பெரும் சவாலாக உள்ள திருட்டு விசிடியைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என்றார்.

tamil.oneindia.com