ரஜினி கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் கூடாது.. ரஜினி ரசிகர் மன்றத்திற்கு பால் முகவர்கள் கோரிக்கை!

kabaliAசென்னை: கபாலி பட வெளியீட்டைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் கட் அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் தயாராகி வருவதாகவும், இதற்காக பெருமளவிலான பாலை அவர்கள் திருட முயற்சி செய்து வருவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலைவரான சு.ஆ. பொன்னுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து இன்று புகார் மனு ஒன்றை பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதுகுறித்து பொன்னுசாமி தனது அறிக்கையில் கூறுகையில், ஜூலை 22ம் தேதி உலகமெங்கும் கபாலி படம் வெளியாகின்ற நாளன்று நடிகர் ரஜினியின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுக்க கோரியும், அவரது ரசிகர்களை ரத்த தானம், உடலுறுப்பு தானம் மற்றும் மது, சிகரெட் போன்ற போதை வஸ்துகளுக்கெதிரான விழிப்புணர்வு முகாம் நடத்தி இந்த சமூகத்திற்கு நற்பணிகளை செய்திட வலியுறுத்த கோரியும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ராகவேந்திரா திருமண மண்டப அலுவலகத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயணா மற்றும் சுதாகர் ஆகியோரை சந்தித்து எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை வழங்கினோம்.

எங்களது சங்கத்தின் மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாகிகள் நடிகர் ரஜினி அவர்கள் ஏற்கனவே ரசிகர்களை பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எங்களது மனுவின் சாராம்சத்தை அமெரிக்காவில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து ரசிகர்களை கேட்டு கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com