கபாலிக்கு ஏன் இந்த வீண் விளம்பரம்?

kabaliAஇந்திய சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் படம் கபாலி. இப்படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுகிறது.

இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான்.

இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி இன்னொரு கோணத்தில் இந்த படத்திற்கு இத்தனை ப்ரோமோஷன் தேவையா? இது 2.0 படம் போல ஒரு பிரமாண்டமான டெக்கினிக்கலான படம் கூட இல்லை, வழக்கமான ஒரு கேங்ஸ்டர் கதை தான். சூப்பர்ஸ்டார் என்ற ஒரு பெயரே படத்திற்கான பெரிய விளம்பரம் தான்.

இவ்வளவு விளம்பரங்கள் செய்யப்படுவது படத்தில் உள்ள குறையை மூடி மறைப்பதற்காகவா. ஏனென்றால் ரஜினியின் முந்தைய படங்களான கோச்சடையானும், லிங்காவுக்கும் எதிர்பார்ப்பு இப்படித்தான் இருந்தது. 200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது.

ஆனால் படத்தில் கதை என்பது ஒன்றும் இல்லாததால் பெரிய நஷ்டமானது. இதில் இன்னொரு விஷயம் சொல்லவேண்டுமென்றால் லிங்கா நஷ்டமானதால் தான் கபாலியே உருவானது என்பது தெரிந்த கதை தான்.

லிங்கா நஷ்டத்தில் விநியோகஸ்தர்கள் செய்த பிரச்சனையில் இடையில் புகுந்து சமரசம் செய்வது போல் அந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு ரஜினியின் கால்ஷுட்டை வாங்கினார் தாணு.

இவருக்கு கால்ஷுட் கிடைத்த வேகத்தில் 2.0 படம் தொடங்குவதற்குள் ஒரு படம் எடுக்கவேண்டும் என்பதால் தான் பெரிய இயக்குனர்களுக்கு காத்திராமல் ரஞ்சித்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதை எப்படியும் பயன்படுத்திவிட வேண்டும் என்பதால் தான் தாணு ப்ரோமோஷனை இந்தளவு செய்துவருகிறார்.

என்ன செய்தாலும் படத்தில் விஷயம் இல்லை என்றால் லிங்கா கதிதான் கபாலிக்கும் என்பது நிதர்சனம்.

-http://news.lankasri.com