பிரிமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தியுள்ளது ரஜினியின் கபாலி திரைப்படம்.
கபாலி படம் ‘பூமியை அதிர வைக்கும்’ ஓபனிங்குடன் நேற்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர் அல்லாதோரும் ரஜினியின் புது முயற்சி… ரஞ்சித்தின் வித்தியாசமான படம் என்று பாராட்டி வருகின்றனர்.
ஊடகத்தில் இந்தப் படத்துக்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் சிலர் படம் குறித்து எதிர்மறைக் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் சினிமா ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. படத்துக்கு குவியும் கூட்டமும் வசூலும் அதை நிரூபிக்கின்றன.
உலக அளவில் வசூலில் பெரும் சாதனைப் படைத்த பாகுபலியின் ஆரம்ப வசூலை முதல் நாளிலேயே கபாலி முறியடித்துள்ளது.
முதல் நாளில் உலக அளவில் அதிகபட்சமாக ரூ 55 கோடியை பாகுபலி குவித்திருந்தது. கிட்டத்தட்ட இதைவிட இரண்டு மடங்கு வசூலை அதாவது ரூ 104 கோடிகளை வசூலித்து ரஜினிதான் என்றும் இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்துள்ளது கபாலி.
வட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வெளியான படம் பாகுபலி. அந்தப் படம் 300 திரைகளில் திரையிடப்பட்டது. ஆனால் கபாலி 430 அரங்குகளில் வெளியாகி அதிர வைத்தது. அதேபோல ரிலீசுக்கு முந்தைய பிரிமியர் காட்சிகளில் 1.4 மில்லியன் டாலர் வசூலித்திருந்தது பாகுபலி. அதையும் கபாலி உடைத்துவிட்டது. இனி வேறு எந்தப் படமும் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு 2.3 மில்லியன்கள் வசூலித்துள்ளது.