அட கருமமே… இப்போதைய ஹீரோக்கள் கைத்தட்டல் வாங்குவதன் ரகசியம் இதானா?

theatre3அண்மையில் ஒரு நாள் மாலை போடிநாயக்கனூரில் ஒரு சினிமா தியேட்டர். ஒரு வாரிசு நடிகர் நடித்து வெளியான படம். படம் ஆரம்பித்து சுமார் 20 நிமிடங்கள் இருக்கும் என்பதால் இருட்டிலேயே சீட் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தோம்.

ஹீரோ வரும் ஸீன்களுக்கு எல்லாம் செம கைதட்டல்கள், விசில் சத்தம். அட..இந்த ஊரில் அதுவும் படம் ரிலீஸாகி சுமார் 10 நாட்கள் கழித்தும் இத்தனை ரெஸ்பான்ஸா…? என்று வியந்து போனேன்.   இடைவேளை விட்டார்கள். முன்னும் பின்னும் பார்த்தால் மொத்தமே 20 பேர் கூட இல்லை. பிறகெப்படி இவ்வளவு சத்தம்? வியப்போடு, தியேட்டர்களில் ஆடியோ சிஸ்டம் நிறுவி பழுது பார்ப்பவரான அழகுராஜா என்பவரிடம் பேசினோம். “தம்பி இப்பல்லாம் எந்த ஹீரோவுமே ஆடியன்ஸை நம்புறது இல்லை. விசில், கிளாப்ஸ் சத்தமெல்லாம் படம் கொடுக்கும்போதே சிடில கொடுத்துடுவாங்க. படத்தோட அதையும் ஓட்டணும். இந்த நடைமுறை வந்து சுமார் ஆறு மாசம் ஆகுது.

தியேட்டர்களில் டிஜிடல் ஒளிபரப்பு என்றால் சி.டி பென் ட்ரைவ் மீடியாவிலும், அனலாக் ஃபிலிம் ஒளிபரப்பு என்றால் அதனுடனேயே தேவையான ஒலிகளை தரவேற்றி கொடுத்துடறாங்க. பெரிய ஹீரோக்கள்ல சிலரோட படங்களுக்கு ரெகுலரா வந்துடும். சில இளம் ஹீரோக்கள் இப்பத்தான் இந்த ஃபார்முலாவை யூஸ் பண்றாங்க.

முன்னெல்லாம் எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் போட்டி போட்டுட்டு ரசிகர்கள் வருவாங்க.அடுத்தது ரஜினிக்கு அப்படி ஒரு நிலை இருந்தது. இன்னமும் ரஜினி படம்னா இந்த கிளாப்ஸ்லாம் எதுவுமே தேவையில்லை. கபாலி படத்துக்கெல்லாம் இன்னிக்கு வரைக்கும் கூட்டம் வருது. தானாகவே கிளாப்ஸ் கிடைக்குது. இதெல்லாம் இப்ப உள்ள ஹீரோக்களுக்கு எப்ப புரியப் போகுதோ தெரியலை,” என அலுத்துக்கொண்டார்.

சென்னை திரும்பியதும் இதுபற்றி பேச சென்னையின் பிரபல தியேட்டர் ஆபரேட்டர்களை தொடர்புகொண்டோம். அவர்கள் எவருமே பேச முன்வரவில்லை. ஆனால் இதனை மறுக்கவும் அவர்கள் முன்வரவில்லை. படம் ரிலீஸ் ஆன மறுநாளே சக்சஸ் மீட் என வைத்து தங்களை தாங்களே கொண்டாடிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு அந்த போடிநாயக்கனூர் தியேட்டர் ஆபரேட்டர் அட்வைஸ் எப்போது புரியும்? சினிமாவுக்குள் பவர்ஸ்டார்கள் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே மொத்த சினிமாவும் ரசிகர்களை மட்டுமல்ல சினிமாவையே சினிமாவை வைத்து ஏமாற்றலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இது போன்ற அல்பத்தனமான விஷயங்கள் மற்றவர்களை மட்டுமல்ல, தங்கள் தலையில் தாமே மண் அள்ளிப் போட்டுக் கொள்ளுவதற்கு சமம் என்பதை என்பதை சினிமாக்காரர்கள் உணர்வார்களா?

tamil.filmibeat.com