கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி முன்மாதிரி என அடிக்கடி சொல்வதுண்டு. தந்தையின் மடியில் படுக்கலாம், கோபித்துக்கொள்ளலாம். திட்டலாம். ஆனால், முன்மாதிரி ஆளுமையைத் தள்ளி நின்று கவனித்தபடியே இருக்கவேண்டும். அவர்கள் செயல்களை கவனிப்பதன் மூலமே கற்றல் நடக்கும்.
அவதூறு உண்டாக்கும் வேதனை
எனக்கு அந்த அவதூறு குறித்து ஏதும் தெரியுமா எனக்கேட்ட அழைப்புகள் அவை. எனக்கு மிக அணுக்கமாக இருந்த நண்பர்கள் உட்பட பலரும் அவரது நேர்மை குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும் சந்தேகங்களை எழுப்பியதுண்டு. என்னால் அவர்களை எப்போதும் பரிதாபமாகவே பார்க்க முடிந்தது. சேவை செய்வதாகச் சொல்லிக்கொள்பவர், வாழ்வில் ஏதோ பறிகொடுத்தவர்கள் போல போலி முகத்துடன் பவனிவரும் சூழலில் தளராத உற்சாகத்துடன் ஓர் இளைஞனைப் போன்ற அவரது துள்ளல், வெந்ததைத் தின்று வேளை வந்தால் போகும் அவநம்பிக்கைவாதிகளுக்கு உவக்காது.
எப்போதும் சமூகத்தின் முன் தான் எதையெல்லாம் இழந்தேன் என்ற புகார்களுடனும் போலியான கோபத்துடனும் தன்னிச்சையாய் ஏற்படுத்திக்கொள்ளும் சோகத்துடனும் உலா வந்து ‘சமூக அந்தஸ்தை’ பெற்றுக்கொண்டவர்களுக்கு அவரது முன்னெடுப்புகளின் தொடர் வெற்றிகளுக்குப்பின் உள்ள உழைப்பை வாழ்நாள் முழுவதும் அறிந்துகொள்ள முடியாது.
விழிப்புணர்வு இருக்கணும்
மலேசிய இலக்கிய – அரசியலில் தனி இடம் பிடித்த ‘செம்பருத்தி’ இதழ் வழக்கறிஞர் பசுபதியின் முயற்சியில் வந்துகொண்டிருந்த காலம். நான் 20 வயதில் செம்பருத்தி இதழ்களை என் கல்லூரி மாணவர்களுக்காக வாங்க அவரைச் சந்தித்தபோது அலுவலகத்தில் அமரவைத்து அவர் முதலில் பேசிய வார்த்தை, “வருங்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் போறிங்க. சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியணும். நீங்க புரட்சிகரமா எழுதணுமுன்னு சொல்லமாட்டேன். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய விழிப்புணர்வு இருக்கணும்…” எனக்கூறி சில துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தார். அதில் உள்ள கருத்துகள் குறித்து சக நண்பர்களிடம் விவாதிக்கச் சொன்னார்.
என்னிடம் இலக்கியம் தவிர அப்போது அரசியல் விழிப்புணர்வு குறித்து யாரும் பேசியதில்லை. எழுத்தாளனுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் எனக்கூட அப்போது எனக்குத் தெரியாது. நான் தூரத்தில் இருந்தே பசுபதியை ரசிக்க ஆரம்பித்த தினங்கள் அவை. சுய இலாபத்திற்காகவும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்காகவும் எளிதாகக் கையாள வேண்டிய பிரச்னையை கையிலெடுத்து ஆரவாரம் பண்ணும் கூட்டத்திற்கு மத்தியில் அவர் முன்வைக்கும் கருத்துகளும் செயல்திட்டங்களும் ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தையே எனக்கு உதாரணம் காட்டியது.
‘மை ஸ்கில்ஸ்’ – சமூக மாற்றத்துக்கான அமைப்பு
ஒரு தமிழ்ப்பள்ளி ஆசிரியரானவுடன், தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்களுக்குள் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது ஏற்படும் திடீர் மாற்றங்களை நேரடியாகவே கண்டுள்ளேன். பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட (PASS) அவர் தமிழ் அறவாரியத்தின் தலைவரானபின் விரிவாக அறிமுகம் கண்டு பரவலானது. திறன்பெற்ற மாணவர்களுக்காக என்றே நடத்தப்பட்ட 21 நாள் ஆங்கில முகாம் திட்டத்தை பின் தங்கிய மாணவர்களுக்கானதாகவும் அவர் தலைமையில் மாற்றியமைத்தார். ‘மை ஸ்கில்ஸ்’ தோன்றுவதற்கு முன்பே EWRF அமைப்பின் செயல்பாட்டை மெதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நகர்த்தினார்.
இறுதியில் ‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியத்தை முழுமையான சமூக மாற்றத்துக்கான ஓர் அமைப்பாகக் கட்டமைத்தும் வருகிறார். இவை அனைத்தையும் நான் வியந்தபடி பார்க்கிறேன். சமூகத்தில் நலிந்த ஒரு பகுதியை கவனிப்பதும் அதை நோக்கி தனது செயல்பாடுகளை நகர்த்துவதும் ஒரு தேர்ந்த தலைமைத்துவத்தின் தன்மை. சமூகத்தில் ஏற்கனவே வெற்றிபெற்றவர்களை அல்லது வெற்றிப்பெறப்போபவர்களை முன்னமே அனுமானித்து தங்களின் உற்பத்தி என பீற்றிக்கொள்ளும் அரசியல் ,சமூகம் மற்றும் கல்வி இயக்கங்களுக்கு மத்தியில் தோல்வி அடைந்தவர்களை நோக்கி நீளும் கரங்கள் உன்னதமானவை. அவரது இந்த சமூக அக்கறை அரசியல் காரணங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் தோன்றிய திடீர் மனநிலை இல்லை.
செய்ய விரும்புவதை நேரடியாக செய்கிறேன்
பத்து ஆராங்கில் ஒரு கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து ஆரம்ப காலக்கல்வி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி; பிரிக்பில்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தில் தங்கி ஆறாம் படிவ உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து; தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று; லண்டனில் சட்டக்கல்வியை முடித்த ஒருவர் மிக சாவகாசமாகவே தன் எஞ்சிய வாழ்வை வசதியாக நகர்த்தலாம். ஆனால் பசுபதியின் ஆளுமை அது அல்ல. வல்லினத்திற்காக அவரை நேர்காணல் செய்தபோது, “நான் இடைநிலைப்பள்ளி படிக்கும்போது என் ஆசிரியர்கள் எங்களுக்கு இலவசமாக வகுப்புகள் நடத்துவார்கள். பாடப் புத்தகங்களையும் பணம் கொடுத்து வாங்கும் சூழல்தான் அப்போது இருந்தது. எங்கள் ஆசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆசிரியர் கையேடுகளை எங்களுக்குக் கொடுத்துப் படிக்க வைத்தார்கள். முன்னாள் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களின் பயன்படுத்தாதப் பக்கத்தை அப்புறப்படுத்தி,புதிய முகப்போடு எங்களுக்குப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். நாங்கள் கேட்காமலேயே எங்களின் வறுமை நிலையையும் எங்கள் தேவைகளையும் எங்கள் ஆசிரியர்கள் அறிந்து செய்த உதவிகள் ‘சேவை’ எனும் அர்த்தத்தை எனக்குப் போதித்தன.
இதைத் தவிர்த்து நான் கன்னியாஸ்திரிகளிடம் ஆங்கிலம் கற்றது, மேற்கல்விக்கு அரசாங்கத்திடம் உபகாரச் சம்பளம் பெற்றது என என் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும், சமுதாயமும் சமுதாய இயக்கங்களும்தான் உதவின. மீண்டும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே வேரூன்றி விட்டது. எனக்கு உதவிய இயக்கங்கள் பிரதிபலனை எதிர்பார்க்காதவை. எனவே, நான் செய்ய விரும்புவதை நேரடியாக என் சமுதாயத்திற்கே செய்கிறேன்.” என்றார்.
அவரது அந்தக் குரல் பதிவை பலமுறை கேட்டிருக்கிறேன். உண்மையின் குரல் அது. உண்மையின் குரலுக்குள் ஒரு இசை உண்டு. அதை அறிய விரும்புபவர்களுக்கே அது கேட்கும். நானறிந்து தனது முப்பது ஆண்டுகால பொதுவாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக 300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்றவர் பசுபதி. அப்பள்ளிகளின் சிக்கலை அறிந்தவர்.
தமிழ்ப்பள்ளிகளில் மலாய்மொழி வளர ‘KUNTUM’ போன்ற இதழ்களை மாதம் தோறும் 500 பிரதிகளைத் தன் சொந்தச் செலவில் வாங்கி தமிழ்ப்பள்ளிகளுக்குக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், தமிழ்ப்பள்ளியைப் பற்றி அவர் தவறாகப் பேசுகிறார் என்ற அவதூறுக்கு அவர் முன்னெடுப்புகளில் பலன் பெற்ற எந்தப்பள்ளியும் எதிர்ப்புச்சொல்லத் தயாராக இல்லாதது வருத்தம்.
அவதூறு செய்யும் மலேசிய நண்பன்
மலேசிய நண்பன் நாளிதழ் தொடர்ந்து அவர் குறித்து இச்சூழலில் அவர் தரப்பு நியாயத்தையும் வெளியிடுவதே பத்திரிகை தர்மம். மலேசிய நண்பன் அதை விரும்பவில்லை. அப்பத்திரிகைத் தரப்பு காட்ட விரும்புவது ஒருபக்க உண்மையை. மொத்த உண்மையில் அவர்கள் விரும்பும் பகுதி. அதன் மூலம் ஒரு சலசலப்பு. அதன் மூலம் மற்ற பத்திரிகைகளில் இல்லாத தனித்துவமான செய்தி. அதன் மூலம் விற்பனை.
இந்நிலையில் வழக்கறிஞர் பசுபதி தன் தரப்பில் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்ட சில விடயங்களை இங்கே சுருக்கமாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
அவ்வறிக்கையின் வழி தமிழ்ப்பள்ளி குண்டர் கும்பல் கலாச்சாரத்தைப் பெருக்கும் இடமாக உள்ளதாக நான் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை என மறுத்துள்ளார். மாறாக, தமிழ்ப்பள்ளியில் அல்லது தேசியப்பள்ளியில் படித்தாலும் சமூக-பொருளாதார தரத்தில் பின் தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்குத் தவறான அறிமுகம் கிடைக்கும்போது எளிதில் சமூக விரோதியாகிவிடும் வாய்ப்புகள் இருப்பதை தான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இக்கருத்தைச் சொல்ல பசுபதிக்கு எல்லாத் தகுதியும் உள்ளது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காகச் செலவழித்து, அதன் பின்னணியில் உருவாகும் கைவிடப்பட்ட மாணவர்களை அரவணைக்க ‘மை ஸ்கில்ஸ்’ எனும் கல்லூரியை நடத்தும் ஒருவர் இச்சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் குண்டர் கும்பல் சிக்கலை அடையாளம் கண்டு அதனை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதைக் கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
பத்திரிகைத்துறைக்கு அவமானம்
இன்றுவரை, 150க்கும் மேற்பட்ட இலவச கிரிமினல் வழக்குகளை நடத்திய வழக்கறிஞரான அவர், தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட சமூக-பொருளாதார பின்புலம் மிக முக்கியக் காரணமாக அமைகின்றது என்ற அவரது கருத்தில் உள்ள அனுபவத்தில் கண்ட உண்மையை ஆராயாமல் அதை திரித்துக்கூறுதல் என்பது பத்திரிகைத்துறைக்கு அவமானம்.
தமிழ்ப்பள்ளி குறித்து ஒரு கருத்தைச் சொன்னால் பொங்கி எழுபவர்கள் அனைவரும் வறுமையான பின்புலத்தைக் கொண்டிருக்கும் ஏழை இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பில் என்றாவது விரிவான விவாதம் செய்துள்ளோமா என சிந்தனை செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
பசுபதி தன் அறிக்கையில், 40% மாணவர்கள் தமிழ்ப்பள்ளிச் சூழலிலேயே நிராகரிக்க / புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால், இடைநிலைப் பள்ளிகளில் இவர்களது எதிர்காலம் நிச்சயம் இருண்டுவிடும் என்கிறார். எனவே பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் போன்றவை இம்மாணவர்களின் அடைவுகளை பின்தொடர்ந்து கவனித்துவர வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைப்பதோடு, முதலாம் ஆண்டு படிக்க மாணவர்கள் நுழையும் காலம் தொட்டே நாம் இவ்வேலைகளைச் செய்ய வேண்டும் என அச்சந்திப்பில் அவர் கூறிய எவையும் அச்சில் ஏறாதது ஆச்சரியம்.
“SPM தேர்வை அடைவதற்கு முன்பதாகவே 20% இந்திய மாணவர்கள் பள்ளிகளிலிருந்து நீக்கப்படுவது அனைவரும் அறிந்த விபரம். இவர்களில் பெரும்பாலானவர்கள் குண்டர் கும்பலில் இணையும் அபாயமும் அதிகமாகவே உள்ளது. அதனால், தமிழ்ப்பள்ளிகளைக் கடந்து நாம் நமது சேவையை விரிவாக்க வேண்டியுள்ளது” என்ற அவரது கூற்றை நான் ஒரு நல்ல தலைவரின் குரலாகவே பார்க்கிறேன்.
எல்லாவற்றையும் மீறி தனது ஒரே மகளையும் தமிழ்ப்பள்ளியில் சேர்த்து தனது சகோதரர்களும் தமிழ்ப்பள்ளியில் படிப்பதை உறுதி செய்து சொல்லுக்கும் செயலுக்கும் ஏற்ப நடக்கும் ஒருவரின் ஆளுமையை அவதூறுகள் அழித்துவிட முடியும் எனத்தோன்றவில்லை. அரசு புள்ளிவிபரத்தில் மொத்த குண்டர் கும்பலில் 70% நாம் என்ற உண்மைக்கு முகம் கொடுக்கவும் அதை மாற்ற எள்ளளவும் முனையாமல் வக்கற்றிருக்கும் நாம், அப்பணியை தன் தலையாய நோக்கமாக நிறைவேற்றும் ஒருவரின் பேச்சில் உள்ள அக்கறையின் வெளிபாட்டைக் குறைக்கூறலாகக் கற்பிதம் செய்யும் செயலுக்கு ‘இயலாமையில் குரைப்பு’ என படிமம் கொடுக்கலாம்.
நன்றி – வல்லினம் http://vallinam.com.my/version2/?p=3146
நல்ல பதிவு.
பசுபதியை நன்கு புரிந்து கொண்டவர்கள் அவர் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் துரோகம் இழைப்பார் அல்லது தீய நோக்கோடு செயல் படுபவார் என்று கனவிலும் நினைக்க மாட்டார்கள். தமிழ்ப் பள்ளியில் பயின்று தன் பிள்ளையையும் தமிழ்ப் பள்யிளில் பயிலவைத்து தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும் பாடுபட்ட ஒரு மனிதருக்கு , தமிழ் பள்ளிகளை வேறருக்கும் கோடரிக் காம்பு என்று பட்டம் கொடுப்பது காழ்ப்புணர்ச்சிதான் அன்றி வேறொன்றுறுமில்லை.ஒருவர் மீது, தகாத வார்த்தைகளை பிரயோகிக்குகும் முன் , அந்த வார்தைகளுக்கு அவர் தகுதியானர்தானா என்பதை ஆராயாமல் செய்வது அறிவிலித்தனம். பத்திரிகை துறையில் முன்ணனி வகிக்கும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பசுபதியை ஒரு எதிரி போல் விமர்சிப்பது பத்திரிக்கை தர்மமாகாது.பசுபதியைப் போன்ற ஒரு போராளியை எதிர்மறை விமர்சனங்களால் வீழ்த்த முயற்சிப்பது வீண் வேலை. தேச நிந்தனை சட்டம் அவர் மீது பாயவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவர் சொன்ன கருத்து இருப்பதாகக் கூறப்படுவது நகைபுக்குறியது.இவர் சொன்ன கருத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப இருந்த பெற்றோர்கள் வேறு பள்ளிகளுக்கு அனுப்பக் கூடும் எனற கருத்து மெய்யாகுமானால் அதற்கு காரணம் பசுபதி அல்ல , அதனை தவறாக புரிந்து கொண்டு அதற்கு வேறு வியக்கியானம் கண்டு பிடுத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணிய விஷமவாதிகளும் அதற்கு துணை போன குறிப்பிட்ட சில பத்திரிகைகளுமே காரணம்.
தரம் குறைந்த பத்திரிகை நிருபர் என்று நிறுமணம் ,
இனி நண்பன் பத்திரிகை வாங்க
மாட்டேன் , வாசிக்க மாட்டேன் ….!
உண்மையான சேவையாளனை சில புல்லுருவிகள் குறைகூறுவது எதற்கு? தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை மற்றவனுக்கு இருக்கண்ணும் போகட்டும் என்னும் நோக்கத்துடன் சிலர் அவதூறுகளை பத்திரிகை வாயிலாக அள்ளிவிடுகிறார்கள்.பொது மக்கள் ஒருவருடைய சேவையை அறிந்த பின்னரே அவரைப்பற்றி கருத்துரைத்தல் நல்லது.இளைஞர்கள் பாதை தறிப்போகாமல் இருக்க சமூகத்தலைவர்கள் உண்மையான சேவை மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
இது உங்களின் கருத்து திரு. நவீன் அவர்களே அதுவும் அளவிடாத மதிப்பு அவரின் மேல் வைத்து உள்ளீர்கள் படிக்கும் போது தெரிகிறது வரவேற்கிறேன் நல்லது , அனால் விவேகானநந்த அசிரிமம் தொட்டு அவர் வாயை திறக்க வில்லையே நிங்களும் அதை தொட்டு எளுதவிலையே பருவாயில்லை இருப்பினும் நண்பன் பத்திரிகை என்ன சொல்கிறது என்று பார்ப்போமே. நம் தமிழ் பள்ளி பிள்ளைகளுக்கு யார் நல்லது செய்தலும் வரவேற்போமே தவறு ஏதும் இல்லை.
தமிழ் திரைப்பட கதை போல் இருக்கிறது– மற்றவர்களை மட்டம் தட்ட கதை ஜோடித்து எப்படி எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கமுடியுமோ அப்படித்தான் எண்ண முடிகிறது. நான் நண்பனை தூக்கி எரிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது– இறந்து விட்ட ஆசிரியர் பின் நண்பன் நண்பனாக இருக்க வில்லை. இப்போது மலேசிய பத்திரிக்கைகளை தொடுவது கூட கிடையாது. நம்மவர்களுக்கு காழ்ப்பு உணர்ச்சி அதிகம்.
மலேசிய நண்பன் தனக்கு பிடிக்காத சிலரை பற்றிய பொய்யான செய்திகளை வெளியிட்டு விளம்பரம் தேடுவதை தொழிலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திரு.பசுபதி அவர்கள் எனக்கு தெரிந்த வரைக்கும் தமிழுக்கு நிறைவாக செய்து வரும் நல்ல மனிதர். அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அவர்களுக்கு அந்த பத்திரிக்கையை வாங்கி நாம் ஆதரவு தரக்கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
ம.நவீன் அவர்களே ! என் இளமை காலம் தொட்டு நண்பன் பத்திரிக்கை வாங்கி படித்து வருகிறேன், கடந்த சில மாதங்களாக அப்பத்திரிக்கையில் பசுபதி அவர்களுக்கு பாதகமான அறிக்கைகள் வந்தவண்ணம் இருப்பதை நானும் அறிவேன் . நீங்கள் சொல்வது போல் அவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்றால், நண்பன் பத்திரிக்கையின் விமர்சனம் கண்டிக்கத்தக்கதே ! எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக விஷயத்தில் சாமிவேலுவின் முகத்திரையை கிழித்துபோட்ட தைரியம் நண்பன் பத்திரிக்கையை தவிர அந்த தைரியம் வேறு யாருக்கு வரும் !!! வழக்கறிஞர் பசுபதி போன்றவர்களை ஒரு பத்திரிக்கை அனாவசியமாக விமர்சிக்க முடிகிறதென்றால் அதில் எங்கோ சிறிதாவது உண்மை இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நண்பன் பத்திரிகை மேல் மானம் நஷ்டம் வழக்கு போட வேண்டும்
பாவம்! முதலாளிக்குத் தமிழ் தெரியாது! பத்திரிகை விற்பனை குறையும் போது இது போனற ‘கிக்’ கான செய்தி அவர்களுக்குத் தேவைப் படுகிறது! இது விற்பனையைக் கூட்டும் யுக்தி! விற்பனை குறைந்தால் சம்பளத்தைக் குறைப்பார்கள். அவர்களுக்கு குரைப்பதற்கு இப்போதைக்கு பசுபதி அகப்பட்டிருக்கிறார்! நான் பத்திரிகை வாங்கும் இடத்தில் ‘நண்பனை’ உள்ளே தள்ளி முன்னே நான் வாங்கும் பத்திரிக்கையை வைக்கிறார்கள்! பொது நலன் அறியாதவர்கள் எல்லாம் பத்திரிகைக்கு வந்தால் இது தான் நடக்கும்!
ம இ கா காரர்கள் போல் நடிக்க தெரியாத நல்ல மனிதர் பசுபதி . இங்குதான் பிரச்சனையே ……!
கடைகளை l நன்கு கவனித்து பாருங்கள் அந்த பத்திரிக்கையை மட்டும் மேல வைத்து விர்ப்பார்கள் ,மற்ற பத்திரிக்கைகளை கீழே ஒளி வைத்து விற்கும் அந்த கும்பல் எங்கள் அய்யாவை குறை சொல்ல அருகதியற்றவர்கள்
நன்றி கெட்டவர்கள். தமிழ் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரும் பாடுபட்டவர். மூடும் தருவாயில் உள்ள தமிழ் பள்ளிகளை காப்பாற்றிய பெருமை ஐயா சேதுபதிக்கு உண்டு,
இப்படி குறைகளை அள்ளிவீசினால் ஒரு நல்ல சமூக சேவையாளரை இழக்க சமுதாயம் தயாராக வேண்டும் .அவரை குறைசொல்லுபவர்கள் அவரின் சேவையை சீர்த்தூக்கி பார்க்கவேண்டும் . மலிவு விளம்பரம் தேடும் ஆசாமிகள் ?
எனவே திரு.பசுபதி அவர்கள் சொன்னது பிழை இல்லை, அப்படித்தானே ? நல்லா ஆடறீங்கடா நாடகம் ……
தாயினும் மிஞ்சிய தயாபரம் நம் பசுபதி