சென்னை: மக்கள் வேலைக்குப் போவதா… அதைவிட்டுவிட்டு வங்கி வாசலில் பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நிற்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி மக்கள் பிரச்சினைகளில் யாருக்கும் தயங்காமல் தன் கருத்தைச் சொல்லி வருபவர்.
ஈழப் பிரச்சினை, மூவர் தூக்கு விவகாரம் என அனைத்திலுமே தன் கருத்தைச் சொல்லத் தயங்கியதில்லை. மோடியின் பண ஒழிப்புத் திட்டத்தால் ஏழை மக்கள், வேலைக்குச் செல்வோர் படும் அவதிகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. “சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே வங்கிகள், ஏடிஎம் முன்பாக இவ்வளவு நீண்ட வரிசைகள் காணப்படும்போது, கிராமங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
வங்கிளில் காத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தினமும் வேலைக்குப் போய் கூலி வாங்கி சாப்பிடுபவர்கள்தான். வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற நிலையில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்துக்கொண்டிருந்தால், அவர்கள் வேலைக்கு செல்வதா, வேண்டாமா? என்னுடைய குழந்தைக்கு திடீரென் உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். அதற்கான முன்னேற்பாட்டைச் செய்யாமல் 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்திருக்கக் கூடாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் சகோதரா