திரைப்பட காமெடி நடிகரும் துக்ளக் ஆசிரியருமான 82 வயதான சோ ராமசாமி டிசம்பர் 7ம் தேதியான இன்று அதிகாலை 4 மணிக்கு காலமானார். (82), கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாகவே இருந்து வந்தார்.
அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மூட்டுவலி, சுவாச பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி உட்பட பல அரசியல் தலைவர்கள் பார்த்து நலம் விசாரித்து வந்தனர். ஜெயலலிதாவின் நல்ல நண்பராகவும், அரசியல் ஆலோசகராகவும் விளங்கினார். ஜெயலலிதா நேற்று முன்தினம் டிசம்பர் 5ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோ என்ற ஒற்றை எழுத்துப் பெயரோடு காமெடி நடிகராக தமிழக மக்களுக்கு திரைப்படங்களில் முதலில் அறிமுகமானவர். அவருடைய காமெடியில் நையாண்டி கலந்த கூரான விமர்சனம் பளிச்சிடும்.
அதுவே அவர் ஒரு வக்கீல், சிறந்த அரசியல் நையாண்டி விமர்சகர், நல்ல கற்பனை வளம் உள்ள எழுத்தாளர், ’துக்ளக்’ பத்திரிகையின் ஆசிரியர் போன்ற பன்முக பின்புலத்தை புரிந்துகொள்ள வைக்கும்.
எந்த தொழிலிலும் தவறு செய்பவர்கள்தான் மாட்டிக்கொள்வார்கள். ஆனால், வக்கீல் தவறு செய்தால் கட்சிக்காரர்கள்தான் மாட்டிக்கொள்வார்கள் அதனால் இதை தேர்ந்தெடுத்தேன் என்று நகைச்சுவையாக சொல்வார்.
பத்திரிகை, சினிமா, அவர் சார்ந்த சமூகம் இவற்றின் அடிப்படையில் அவருக்கு மேல்மட்ட தொடர்புகள் அதிகம். அதன் காரணமாகவே தேர்தல் சமயத்தில் கட்சிகளுக்குள் கூட்டணி அமைவதற்கு நல்லிணக்க தூதுவராகவும் இவர் செயல்படுவார்.
இவர் ஒளிவிளக்கு, நிறைகுடம், மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தங்கப்பதக்கம், பொம்மலாட்டம், குருசிஷ்யன், மனிதன் உட்பட 200 படங்களில் நடித்திருக்கிறார்.
முகமது பின் துக்ளக், உண்மையே உன் விலைஎன்ன, Mr.சம்பத், யாருக்கும் வெட்கமில்லை, சம்போ சிவ சம்போ போன்ற 4 படங்களை இயக்கி இருக்கிறார்.
நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், போட்டா போட்டி போன்ற 14 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய இந்துமகா சமுத்திரம் நூல் பல பாகங்களாக வெளிவந்தது, மகாபாரதம் பேசுகிறது, வால்மீகி ராமாயணம் போன்ற ஆன்மீக நூல்கள் உட்பட, எங்கே பிராமணன், வாஷிங்டனில் நல்லதம்பி, ஏன் கூடாது, போன்ற 25க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
கொள்கை அடிப்படையில் திராவிட கட்சிகளோடு முரண்பட்டிருப்பார். நையாண்டியான விமர்சனங்களால் அவர்களை கடுமையாக வெறுப்படைய செய்தாலும் அநாகரீகமான விமர்சனங்கள் எப்போதும் இருந்ததில்லை.
அவர் முகமது பின் துக்ளக் படம் எடுத்தபோது, முஸ்லிம்களை அந்த படத்துக்கு எதிராக சோவுக்கு ஆகாத சில அரசியல்வாதிகள் தூண்டிவிட்டனர். அதை புரிந்துகொண்ட சோ, முஸ்லிம் மார்க்கத்தை புகழும்படியான ஒரு பாடலை (Title Song) சேர்த்து கோபத்தோடு வந்த முஸ்லிம்களை குளிர வைத்தார்.
அவர் அதிகமாக விமர்சன யுத்தம் செய்தது திமுகவோடுதான் என்றாலும், அதன் தலைமையோடு தனிப்பட்ட முறையில் நட்பையே கடைப்பிடித்து வந்தார் என்பதற்கு, கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து இவரை மருத்துவமனையில் பார்த்ததே சாட்சி.
அதே நேரத்தில் அதிமுக, பாஜ கட்சிகளோடு ஒரு அபிமானம் உள்ளவர் போல இருந்தாலும் அவர்கள் எல்லை கடக்கும்போது அதை சொல்லிச் சாடவும் முரண்படவும் தயங்கியதில்லை.
துக்ளக்கில் ஒரு வாசகர், உலகிலேயே நீங்கள்தான் பெரிய அறிவாளி என்று நான் சொல்கிறேன், நீங்கள்தான் பெரிய முட்டாள் என்று என் நண்பன் சொல்கிறான் இதில் எது சரி? என்ற கேள்வியை எழுப்பினார்..
சென்னை மைலாப்பூரில் 1934 அக்டோபர் 5 ல் பிறந்த இவர், 1999 -2005 வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அரசியல் தலைவர்களோடும் ஊடக, சினிமா தொடர்பிலும் முக்கியமானவராக தனது கவுரவம் குறையாமல் இதுவரை இவர் வாழ்ந்த விதமே ஒரு தனித்துவம்தான்.
-http://www.cineulagam.com