உணவுக்காக கெஞ்சி கடைசியில் உயிரைவிட்ட நகைச்சுவை நடிகர்

loosu mohanசினிமா கலைஞர்களின் வாழ்க்கையும் மற்ற மனிதர்களை போன்றே தான் இருக்கும். இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி எல்லாம் கலந்தே தான் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானதே.

பல கலைஞர்கள் இருந்தாலும் சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது.

அது போல தான் நகைச்சுவை நடிகர் லூசு மோகனின் வாழ்க்கையும். எம்.ஜி.ஆர் திரைக்கு வந்த நேரத்தில் தான் இவரும் தனக்கே உரிய ஸ்டைலோடு வாய்ப்பு தேடியவர்.

பல முயற்சிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வந்தவர் ஓலைக்குடிசையில் தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார்.

பேருந்தில் பயணம் செய்து ஷூட்டிங் போன பிறகு மீண்டும் நடந்தே வீட்டிற்கு திரும்பி வருவாராம்.

தன் நடிப்பால், தனக்கே உரிய பாணியால் பின் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பிரபலமாக ஆரம்பித்தார்.

1980 களில் இயக்குனர் சுந்தர்ராஜன், ராம நாராயணன் ஆகியோர் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தார்கள்.

1983 இல் ராம நாராயணன் இயக்கத்தில் பிரபு, சில்க் ஸ்மிதா, பிரமீளா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த சூரக்கோட்டை சிங்க குட்டி படம் லூசு மோகனுக்கென்று தனி ட்ரெண்டை உருவாக்கியது.

அதிலும் இவர் பாடிய கண்ணம்மா கண்ணும் எம்மாம் பெரிய கண்ணு என்னும் பாடல் இவரை மிக பிரபலப்படுத்தியது. மேலும் அவர் வாழ்வில் மிக பொன்னான காலம் 1990 முதல் 1999 வரையான கால கட்டங்கள் தான்.

அதிகமான படம், கை நிறைய வருமானம், செல்வாக்கு, புகழ் என குடிசையில் இருந்து லூசு மோகன் கோபுரத்திற்கு வந்தார்.

தன்னுடைய வருமானத்தில் தன் பிள்ளைக்கு வீடு, வாகனம் என அனைத்தையும் வாங்கி திருமணமும் செய்து வைத்தார்.

வாங்கிய சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயரில் வைத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு எல்லாம் கொடுத்து பின் அவதிப்பட்டார் .

கால சக்கரம் மீண்டும் அவரை வறுமைக்கு கொண்டு செல்ல படங்கள் இல்லை, வருமானமும் இல்லை.

பசித்த வயிறுக்கு சோறு போட பிள்ளைகளும் முன்வரவில்லை. இளமை இருந்தால் மீண்டும் அதே துள்ளலோடு நடித்து சம்பாதித்திருப்பார்.

முதுமை அவருக்கு முட்டுக்கட்டை போட கையில் பணமில்லை, வயிற்றிக்கு ஆகாரமில்லாமல் எனக்கு தினமும் இரண்டு இட்லி கொடுங்கள் என பிள்ளைகளிடம் கெஞ்சினாராம்.

1944 ல் தன்னுடைய 16 வயதில் ஹரிச்சந்திரா படத்தில் பி.யு.சின்னப்பாவுக்கு மகனாக நடித்தார். பின் 1979 ல் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக அவர் 2002 ம் ஆண்டு வந்த அழகி படத்தில் நடித்தார். உடல் நிலை சரியில்லாமல் 2012 செப்டம்பர் மாதம் தன்னுடைய 84 வது வயதில் காலமானார்.

1000 படங்களுக்கு மேல் நடித்து கடைசியில் கேட்பாரற்று கிடந்த இவரின் கொடுமை யாருக்கும் வரக்கூடாது.

-http://www.cineulagam.com