சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துவக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.அவசர சட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்களின் போராட்டத்திற்கு ஒரு பலன் கிடைக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று பலனை பெற விளையும் நிலையில், கமல் சில டிவிட்டுகளை வெளியிட்டுள்ளார்.
“நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்”
இது மக்களின் இயக்கம். நட்சத்திரங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு மட்டுமே தரலாம். போராட்டத்தை திருடிவிடக்கூடாது என்பதே எனது அபிப்ராயம்.
தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் டிவி சேனல்களை நடத்தி செய்திகளை திரிப்பதை நினைவில் கொள்ளுங்கள். இணையதளம் வாயிலாக உங்கள் அறிவை பெறுங்கள். அகிம்சை வழியில் போராடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
ஒத்துழையாமை இயக்க அறிக்கை வரைவு மெட்ராசில் 1930ல் உருவாக்கப்பட்டது. இப்போது மீண்டும் 2017ல் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் நம்மை பார்க்கிறது. தமிழர்கள், இந்தியாவை பெருமிதப்பட செய்துள்ளீர்கள். உங்கள் நோக்கத்தில் உறுதியோடு இருங்கள். இவ்வாறு டிவிட்டுகளில் கமல் தெரிவித்துள்ளார்.