வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின், கடைசி நாளில் துரோகிகள் பட்டியலில் தமிழ் சினிமாவின் ஆதி, ஆர்ஜே பாலாஜி போன்றவர்கள் இடம்பிடித்துவிட்டார்கள். இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் பன்னீர் செல்வம் ஆதியை ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவராக சான்றிதழ் அளித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவர் மத்தியில்.
காரணம் எந்த ஒரு தலைவரின் தூண்டலுமின்றி, தன்னிச்சையாக மெரீனாவிலும் அலங்காநல்லூரிலும் கூடி போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இந்தப் பெருமையை தனிநபர்கள் சிலருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது தமிழக அரசு என்ற மன நிலை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக ‘ஆதியை ஒட்டுமொத்த மாணவர்கள், இளைஞர்களின் பிரதிநிதி போலக் காட்டுவதை ஏற்க முடியாது. ஆதி அரசின் கையாள். போராட்டத்தை கலைக்க அரசால் அனுப்பப்பட்டவர்தான் ஆதி… பெப்சி, கோக் பானங்களின் அறிவிக்கப்படாத தூதுவர்’ என சமூக வலைத் தளங்களில் மாணவர் குழுக்கள் பரப்பி வருகின்றனர்.
இதனால் ஆதிக்கு திரையுலகிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்து, இயக்கி வருகிறார். சுந்தர் சி தயாரிப்பு இது. ஆனால் படம் வெளியானால் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும், ஆதி பணியாற்றும் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பரப்பி வருகின்றனர். இதனால் ஆதியை இசையமைப்பாளராக, நடிகராக ஒப்பந்தம் செய்வதை தயாரிப்பாளர்கள் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.