அரசியல் சர்ச்சை கருத்தால் மிரட்டலா?: அரவிந்தசாமி பதில்

தமிழக அரசியல் நிலவரம் குறித்து நடிகர் அரவிந்தசாமி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். எம்.எல்.ஏ.க்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனைகள் சொல்லியும் கருத்து வெளியிடுகிறார்.

கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சசிகலா சென்று இருந்த நிலையில், “நினைவுபடுத்துகிறேன். அவரவர் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்காக பணியாற்றுபவர்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார்.

கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, “தனியார் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பாக காவல் துறையினர் இருக்கலாம். ஆனால் பத்திரிகையாளர்களையும், பொதுமக்களையும் தடுப்பவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

“இப்படி அரசியல் கருத்து வெளியிட்டு வருகிறீர்களே.., எதிர்பாராத வகையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை மிரட்ட வாய்ப்பு உள்ளதே” என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த அரவிந்தசாமி, “அதுபற்றி எனக்கு தெரியும். ஆனால் நான் சட்டபூர்வமாகவே கேள்வி எழுப்புகிறேன். இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவில்லை. 46 வயதாகி விட்டது. என் மூளையில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுகிற நேரம் இது” என்று கூறியுள்ளார்.

-http://cinema.maalaimalar.com