சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுவதற்கு மாணவர்களுக்கு நடிகர் கமலஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்த திட்டத்தை கைவிடக் கோரி நெடுவாசல் மக்கள் கடந்த 10 தினங்களாக போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்தது போல் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு மாணவர்கள், தமிழ் அமைப்புகள், திரைப்படத் துறையினர் ஆகியோர் ஆதரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தன் டிவிட்டர் பக்கத்தில் சமுக நல கருத்துகளை கமல் டிவிட் போட்டு வருகிறார். அந்த வகையில நெடுவாசல் போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் கமல் டிவிட்டரில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இயற்கை வளத்தை அழிப்பதா?
பூமியின் இயற்கை வளத்தையும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் தற்போது பெருவருமானம் தந்தாலும், வருங்காலத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கருத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் டிவிட்டியுள்ளார்.
பேராசைக்காரர்களுக்கு அல்ல
இயற்கை வளங்களை ஓட்டுமொத்த மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கொடுக்க முடியும். தனிநபரின் பேராசைகளுக்கு கொடுக்க முடியாது என்பது காந்திஜியின் பொன்மொழிகளாகும். இயற்கை வளங்களை அழித்து செயல்படுத்தப்படும் எந்த திட்டங்களும் தமிழகத்துக்கு தேவையில்லை.
அமைதியாக போராடுங்கள்
மாணவர்கள் அமைதியுடன் விவசாயிகளுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் குரல் கொடுங்கள், அங்கே சென்று போராடினால் பெரியவர்கள் உங்களை தங்களுக்ககு இணையாக எப்படி மதிப்பளிக்கிறார்கள் என்பதை பாருங்கள்.
புதுவை முதல்வருக்கு பாராட்டு
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொருத்தவரை புதுவை முதல்வர் நாராயணசாமியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அவருக்கு மிகுப் பெரிய சல்யூட் என்று கமல் டிவிட்டிள்ளார்.