சென்னை: பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவ #SaveShakti என்ற அமைப்பை துவங்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
கேரளாவில் பிரபல மலையாள நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்டார். இதை அடுத்து பிரபல டிவி சேனலின் தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்தார்.
ட்விட்டரில் தெரிவித்ததோடு அவர் நின்றுவிடவில்லை.
#SaveShakti
பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவ சேவ் சக்தி #SaveShakti என்ற அமைப்பை துவங்கியுள்ளார் வரலட்சுமி சரத்குமார். மகளிர் தினமான 8ம் தேதி ராஜரத்தினம் அரங்கில் கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்.
தமிழக அரசு
கையெழுத்து இயக்கம் முடிந்த பிறகு வரலட்சுமி தமிழக அரசிடம் மனு ஒன்றை அளிக்கிறார். பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம், பாலியல் வழக்கில் 6 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளார் வரலட்சுமி.
பயம்
பாலியல் புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தால் பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிப்பார்கள். தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதால் தவறு செய்யும் ஆண்களுக்கும் பயம் வரும் என வரலட்சுமி கூறியுள்ளார்.
நடிகைகள்
ஃபெப்சி அமைப்பின் கீழ் 24 சங்கங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கு என்று தனியான எந்த யூனியனும் இலலை. இந்நிலையில் நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவிக்க புதிய அமைப்பை துவங்க உள்ளதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார்.