பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களின் படங்களில் கதாநாயகிகளின் பாத்திரங்கள் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாவும் சுயசிந்தனையோடு முடிவெடுப்பவர்களாகவும்தான் காட்டுவார்கள். இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் பெண்கள் படம் பார்க்க வருவது குறைவு. இன்று பெண்கள் தனியாகவோ, குழுக்களாகவோ சென்று சினிமா பார்த்து வருவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் காட்டப்படுவதோ லூஸுப் பெண்களாக…சினிமாவில்தானே காட்டுகிறார்கள் என்று இதனை எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா எந்த அளவுக்கு சமூகத்தை பிரதிபலிக்கிறதோ அதை விட அதிகமாக சமூகம் சினிமாவை பிரதிபலிக்கு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஏன் தமிழ் சினிமாவில் பெண்களை லூஸுகளாகவே காட்டுகிறார்கள்? பாலசந்தருக்கு பின்னர் தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தவர் இயக்குநர் வசந்த் சாய் தான்.
அவரிடம் இதுகுறித்து பேசினோம். “சமத்துவ சிந்தனைகளோடே வளர்க்கப்பட்டவன் நான். சிறுவயதில் என் கண் எதிரிலேயே நிறைய பெண்கள் நசுக்கப்பட்டதையும் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்பட்டதையும் பார்த்திருக்கிறேன். அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
அப்போது திருமணம் செய்துவிட்டு தள்ளிவைப்பது என்ற ஒரு மோசமான நடைமுறை இருந்தது. என் அம்மாவிடம் அதுகுறித்து புரியாமல் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன். புரிய வரும்போது அது என்னை அதிகமாக பாதித்தது. கேபி சாரிடம் என்னை சேரத் தூண்டியதே இந்த பாதிப்பாகத்தான் இருக்கும். அவரது ‘அவள் ஒரு தொடர்கதை, அவர்கள்’ போன்ற படங்களை பார்த்து விட்டுத்தான் அவரிடம் சேர ஆசைப்பட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படம் சத்யஜித்ரேயின் சாருலதாதான். ரிஷிகேஷ் முகர்ஜி, ஷாம் பெனகல் என்று என்னை கவர்ந்த இயக்குனர்கள் அத்தனை பேருமே பெண் கதாபாத்திரங்களை அருமையாக படைத்தவர்கள்.
நான் படம் எடுக்க வந்தபின்பு முடிந்த அளவுக்கு பெண் கதாபாத்திரங்களில் தனி கவனம் செலுத்துகிறேன். என் அம்மாவை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஏதாவது ஒரு புத்தகத்துடன்தான் காட்சி தருவார். அந்த அளவுக்கு வாசிப்பு பழக்கம் அப்போதே என் அம்மாவுக்கு இருந்தது. எனவே நான் அதிகம் படித்த்தும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்தான். பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதை என் படங்களில் காட்டுகிறேன்.
என்னுடைய படங்களில் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே… படம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய படம். இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒரு படம். காதலை வெளிப்படுத்த என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை காதலை மறுக்கவும் இருக்கிறது என்பதுதான் அந்த படத்தின் மையக்கரு. ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் அவரை பழி வாங்குவதோ, தற்கொலை செய்துகொள்வதோ தீர்வு இல்லை என்பதை சொன்ன படம் அது. இன்றைய சினிமாவில் காட்டப்படுவது போல பெண்கள் என்றாலே தப்பு, ஏமாற்றக்கூடியவர்கள் போன்ற தவறான கருத்துகள் என் படங்களில் இடம்பெறவே பெறாது.
சினிமா இயக்குநர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. இப்போது இருக்கும் இயக்குனர்களில் பெரும்பாலானோர் பெண் கதாபாத்திரங்களை படைப்பதே இல்லை. கிளாமருக்காகவும் பாடல் காட்சிகளுக்காகவுமே ஹீரோயின்களை பட்த்தில் சேர்க்கிறார்கள். பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்படுவது இல்லை என்றே சொல்லலாம்.
பெண் கதாபாத்திரங்களை எந்த இடத்திலுமே வீக்கர் செக்ஸாக காட்ட மாட்டேன். ரிதம் படத்தில் ஒரு காட்சி. அர்ஜுனின் கேரக்டர் பெண்களை மதிக்கும் விதமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். அவர் ஒரு காட்சியில் ட்ரெய்னில் நின்றுகொண்டு பயணிக்கும் மீனாவுக்கு தான் எழுந்துகொண்டு சீட் தருவார். மீனா ஏன்? என்று கேட்பார். நீங்க நிக்கிறீங்களே…பாவம் என்பார் அர்ஜுன். நிக்கிறதுல என்ன பாவம்? என்று பதிலுக்கு கேட்பார் மீனா. பெண்களை வீக்கர் செக்ஸ் என்று நினைக்கும் ஆண்களுக்கான டயலாக் அது. பெண்களை பரிதாபமாகப் பார்ப்பதை நிறுத்தினாலே போதும். இப்போது நான் எடுத்துக்கொண்டிருக்கும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படமும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும், பெண்ணியம் பேசும் ஒரு படம்தான்.”
கூட்டிக் கழித்து பார்க்கும்போது ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒன்றிரண்டு இயக்குநர்கள் பெண்களைச் சித்தரிப்பதில் அக்கறை காட்டினாலும் இது ஆணாதிக்க துறைதான். என்னதான் சிந்தித்தாலும் ஒரு பெண்ணின் உணர்வுகளை சரியாகவும் துல்லியமாகவும் ஒரு ஆண் படைப்பான் என எதிர்பார்ப்பதை விட பெண்கள் அதிகம் இந்த துறைக்கு வரவேண்டும். – ஆர்ஜி
சின்னத்திரையில் இன்னும் மோசமான சூழ்நிலை! பொங்கி எழுந்தால் தான் இவர்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவர முடியும்!