‘இளையராஜா இசை மூலம் கோடிகளில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு ராயல்டி தர மறுப்பதேன்?’

ilayarசென்னை: இளையராஜாவின் இசை- பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு சட்டப்படி சேர வேண்டிய ராயல்டியைத் தர மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்பிபி 50 நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களைப் பாட அனுமதி பெற வேண்டும், ராயல்டி தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரபரப்பான விவாதங்கள் இணைய வெளியில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் பிரதீப் அளித்துள்ள விளக்கம்:

“பாடகர்கள் பல நிகழ்ச்சிகளில் பாடி வருவாயைக் குவிக்கிறார்கள். ஆனால் இசையமைப்பாளர்களுக்கு ஒத்த ரூபாய் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை (இளையராஜா காப்பிரைட்) சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இளையராஜா இரு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அவற்றில் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னார். இனி மேடைகளில் தனது பாடல்களைப் பாட முறையான அனுமதி பெற வேண்டும், ராயல்டி தரவேண்டும் என்று கூறினார். இப்போது எதுவும் புதிதாக நடந்து விடவில்லை.

அனுப்பப்பட்ட லீகல் நோட்டீசை வைத்து வேண்டுமென்றே ஒரு பரபரப்பைக் கிளப்பியுள்ளார் எஸ்பிபி.

35 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் பாடல்கள், இசையை உருவாக்கிய ஒரு மேதைக்கு உரிய காப்புரிமைத் தொகையை இன்று வரை யாரும் தராமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசை, பாடல்களை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் பல ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராக்களை ராஜா சார் எதுவுமே கேட்கவில்லை. அவர்களுக்கு இலவசமாகவே அனுமதி கொடுத்துவிட்டார்.

ஆனால் அவர் பாடல்களை, படைப்புகளை வைத்து கோடிகளில் பணம் பார்க்கும் நிறுவனங்களிடம் சட்டப்படி உரிமை கோருகிறோம்.

எஸ்பிபி சார் இலவசமாக கச்சேரி நடத்தவில்லை. இந்த கச்சேரிகள் மூலம் பல கோடி ரூபாயை பாடகர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வருவதில்லை.

இந்தப் பாடல்கள் இளையராஜாவின் உழைப்பு, படைப்பு. எஸ்பிபி 50 உலக சுற்றுப் பயணத்தை அவர் தொடங்குவதற்கு முன் முறையாக இளையராஜாவிடம் அனுமதி பெற்றிருக்கலாமே. இருவரும் நண்பர்கள்.

கடந்த ஆகஸ்டில் இந்தப் பயணத்தை எஸ்பிபி தொடங்குவதற்கு முன் இளையராஜாவிடம் பேசி அனுமதி பெற்றிருக்கலாம்.

இந்த கச்சேரிகளில் வசூலாகும் பணத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை பங்காகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. பாடப்படும் பாடல்களுக்கு முறையான அனுமதியும், அதற்கு உரித்தான ராயல்டியை மட்டும்தான் தரச் சொல்கிறோம்.

ஆனால் ராயல்டியாக ஒற்றை ரூபாய்க் கூடத் தர யாரும் விரும்புவதில்லை. அவரது இசையை, படைப்பை ஓசியில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் மக்களின் நினைப்பாக உள்ளது!”

tamil.filmibeat.com