காப்புரிமைத் தொகையாக தயாரிப்பாளர்களுக்குத் இளையராஜா வாங்கித் தந்த ரூ 28 லட்சம்!

ilayaraja733ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே ஒருவரைக் குறை கூறுவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகத்திலேயே யாருமில்லை. இதைச் சுட்டிக் காட்டத்தான் நேற்று முன்தினம் ‘மெத்தப் படித்த மூடர்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தனக்கு வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதத்தை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இன்று வரை வழங்கி வருகிறார் இளையராஜா என்பதையும், ஆனால் அவரை ஐபிஆர்எஸ் போன்ற ராயல்டி அமைப்புகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றன என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

இளையராஜாவின் பாடல் ஒலிக்காத இடங்கள் இல்லை. வானொலி, தொலைக்காட்சி, கச்சேரி மேடைகள், டிஸ்கோ பப்கள், நட்சத்திர விடுதிகளின் பார்களிலெல்லாம் ராஜாவின் பாடல்கள் வழிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்துமே வணிக ரீதியாக ஒலிபரப்பப்படுபவை. திருவிழா கச்சேரிகளை விடுங்கள்… பப்கள், நட்சத்திர பார்களில் நுழைவுக் கட்டணமே குறைந்தது ரூ 1000. சென்னையின் ரெசிடென்சி டவர்ஸ், கிரீன் பார்க் போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்குச் செல்பவர்களுக்கு இது புரியும்.

இங்கெல்லாம் இளையராஜா பாடல்களை மட்டுமே வாரத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் பாடுவார்கள். அதற்கு கூட்டம் நிரம்பி வழியும். இந்த மாதிரி வணிக நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்களுக்கு, அந்த பார்களின் அல்லது ஹோட்டல்களின் நிர்வாகம் காப்புரிமைத் தொகை செலுத்த வேண்டும். இப்படி வசூலாகிற பணம் எல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே போவதில்லை. படத்தின் தயாரிப்பாளர், பாடலாசிரியருக்கும் போகிறது.

இளையராஜா இன்று வரை, தனக்கு வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்குத் தந்து வருகிறார். இதனை நேற்று மேடையில் பகிரங்கமாகவே அறிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு. தயாரிப்பாளர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, இதுவரை இளையராஜா இசையமைத்த அனைத்துப் படங்களின் உரிமைகளும் அவருக்கே எழுதித் தரப்பட்டுவிட்டன.

அதனைத் தொடர்ந்து, காப்புரிமை விஷயத்தில் பிரச்சினை செய்து வந்த எச்எம்வி, எக்கோ உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்து, தனக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் பாக்கியை வசூலிக்கும் முயற்சியில் உள்ளார்.

இதுகுறித்து கலைப்புலி தாணு கூறுகையில், “70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் கேவி மகாதேவன், எம்எஸ்வி, இளையராஜா ஆகியோரின் பல ஆயிரக்கணக்கான பாடல்களை விற்று பெரும் லாபம் சம்பாதித்து வரும் எச்எம்வி, எக்கோ நிறுவனங்கள் மீது நாங்கள் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். இளையராஜாவும் தொடர்ந்துள்ளார். இவர்களிடமிருந்து வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கே என இளையராஜா அறிவித்துள்ளார்.

இந்த வழக்குக்கான நீதிமன்றச் செலவைக் கூட இளையராஜாதான் செலுத்தியுள்ளார். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இவ்வளவையும் செய்துள்ளார் அவர். இந்த வழக்கில் நாங்களும், இளையராஜாவும் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்படி வெற்றிப் பெறும்போது நிச்சயம் அறிவித்தபடி ரூ 50 கோடியைத் தயாரிப்பாளர்களுக்குத் தருவார் இளையராஜா.

ஆறு மாதங்களுக்கு முன்பு கூட தனக்கு வந்த காப்புரிமைத் தொகையிலிருந்து ரூ 28 லட்சத்தை தயாரிப்பாளர்களுக்குத் தந்தார் இளையராஜா. அதை தயாரிப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம்,” என்றார்.

காப்புரிமைத் தொகைக்காக கடந்த பல ஆண்டுகளாகப் போராடி வரும் இளையராஜா, அப்படிக் கிடைத்த தொகையை முறைப்படி தயாரிப்பாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்து வருவதை தயாரிப்பாளர் சங்கத் தலைவரே கூறிவிட்டார்.

சட்ட ரீதியான இளையராஜா முன்னெடுத்த ஒரு விஷயத்தை, தன் வீட்டுப் பிரச்சினையாக நினைத்து எஸ்பிபி ஃபேஸ்புக்கில் போட்டதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் என்ற பெயரில் பலரும் சமூக வெளியில் சண்டைப் போட்டுக் கொண்டு, இளையராஜா பற்றி பக்குவமின்றி தவறாக கருத்துப் பதிந்தும் வந்தனர்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன, தயாரிப்பாளர்களுக்கு எந்த அளவு இளையராஜா உதவி வருகிறார் என்பதையெல்லாம் தாமதமாகப் புரிந்து கொண்டு, முன்பு தாங்கள் சொன்ன கருத்துகளை நினைத்து வெட்கப்படும் நிலைக்கு வந்துள்ளனர் இளையராஜா எதிர்ப்பாளர்கள்.

tamil.filmibeat.com