விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை… டெல்லியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்

farmer-protest4டெல்லி: விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 11 நாள்களாக போராட்டத்தில் ஈடுபடும் வரும் விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பினார்.

விவசாயக் கடன் தள்ளுபடி, தென்னிந்திய நதிகளை இணைப்பது, விளை பொருளுக்கு லாபரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 11 நாள்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர்.

முதல் 5 நாள்களுக்கு மத்திய அரசு பிரதிநிதிகளோ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளோ யாரும் விவசாயிகளை சந்திக்கவில்லை. ஆனால் டெல்லியில் உள்ள தமிழ் அமைப்புகள் வெயிலில் தங்கியிருந்த அவர்களுக்கு கொட்டகை அமைத்தும் உணவு அளித்தும் வந்தனர்.

கனிமொழி சந்திப்பு

இந்நிலையில் விவசாயிகளின் 6-ஆவது நாள் போராட்டத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் விவசாயிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று அவர் தெரிவித்தார்.

அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

விவசாயிகளை கனிமொழி சந்தித்த அடுத்த நாளே அதிமுக எம்.பி.க்கள் தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் சந்தித்து பேசினர். பின்னர் அவர்களை போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட எம்.பி.க்கள் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

ஜேட்லி உறுதி

விவசாய பிரதிநிதிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படு்ம என்று உறுதியளித்தார். இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

பேரிடி

இந்நிலையில் வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடியை ஒதுக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசோ வெறும் ரூ.1,748 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். வறட்சி குறித்து மத்தியக் குழு ஆய்வு செய்து சேதமதிப்பை ரூ.2096 கோடி என்று அறிக்கை அளித்துள்ள நிலையில் அதைவிட குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர்கள் சந்திப்பு

இந்த நிலையில் 11-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை இன்று நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால், கார்த்தி, இயக்குநர் பாண்டியராஜ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் கோரிக்கை அடங்கிய மனுவை விவசாயிகள் அளித்தனர்.

அழுகுரல் கேட்கவில்லையா

அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், விவசாயிகளின் அழுகுரல் மத்திய அரசுக்கு கேட்காதது ஏன். விவசாயம் நலிவடைந்து வருவதால் அவர்களது மகன்கள் விவசாயத்தை பார்க்காமல் வேறு தொழிலுக்கு சென்றுவிடுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

கடன் ரத்து

இவர்களது பயிர்க் கடன்களை இந்த ஆண்டு ரத்து செய்துவிட்டால், அடுத்த ஆண்டு வறட்சி, வெள்ளம் ஏற்படும் போது பாதிக்கும் விவசாயிகளுக்கு என்ன செய்வது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்திக்கவுள்ளோம் என்றார் அவர்.

tamil.oneindia.com