திரைப்படத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும் – இலங்கைக்கு செல்ல வேண்டாம்…! ரஜினிக்கு எச்சரிக்கை

rajinikanth-kabaliஇலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்” என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை 350 கோடி ரூபா செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் 22 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார்.

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது.

குறித்த வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி, எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து தொல். திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம்.

லைக்காவுடனான தனது நட்பை திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நடிகர் ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

இலங்கைக்கு செல்லும் விவகாரம்: ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரஜினி செல்ல வேண்டாம் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போது நடைபெறுகிற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுக்கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்கிற செய்திக்குறிப்பு லைகா நிறுவனத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது.

தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

சிங்கள அரசுக்குத் துணைபோகும் பா.ஜ.க-வின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.

ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

லைகா நிறுவனம், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த, எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள், உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது.

கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

-http://news.lankasri.com