“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”

ரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள்.

செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில் சென்று பார்ப்பது கடினம். ஆகவே, இப்படி உபசரிப்பு நடத்தி எல்லாரையும் சந்திக்க முடியும். தலைவர்கள் தங்களுக்கு வேண்டியதைச் சொல்வார்கள். கேட்பவர்கள் கேட்கலாம். இல்லையென்றால், சாப்பிட்டு விட்டு போக வேண்டியதுதான்.

மாணிக்கம்: முந்தி எல்லாம் ரோடு போடுவானுங்க, பைப்போடுவானுங்க. இப்ப அதுக்கெல்லாம் முந்தி சோறு போடுரானுங்க. இன்னும் கொஞ்ச நாளில்ல, வீட்டுக்கே சோறு வந்திடும். ஓட்டை அவங்களே போட்டுக்குவானுங்க.

வசந்தி: நாங்க நாலு பேர் வந்திருக்கிறோம். இது சும்மா ஒரு அவுட்டிங் மாதிரிதான். இவங்க பரவாயில்லை. நமக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கிறாங்க. அந்தக் கட்சிகாரர்கள் நம்மை மனிசனாகவே மதிக்கிறதில்லை. அடேயப்பா, என்ன சோ காட்டுராங்க. ஆனால், பொதுவாக ஜனங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறது, காசு கொடுக்கிறது, இன்னும் அது இதெல்லாம் கிடைக்கும்னு சொல்றது சரியில்லை. இது என் கருத்து.

கோவிந்தன்: இதெல்லாம் தப்பு, தப்பு. தப்பு என்று சொல்கிற நான் ஏன் இங்கே இருக்கிறேன்? நான் பாரிசான்காரர்களின் உபசரிப்புக்கும் போய் இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத்தான். எல்லா உபசரிப்புகளிலும் பெரிய புள்ளிகளுக்கு தனி உபசரிப்பு. நமக்கெல்லாம் வேற மாதிரியான உபசரிப்பு. அது அவங்க ஆட்சியில் பெரிய புள்ளிகளைக் கவனித்துக்கொள்வதை  காட்டுகின்றன. இவங்களுக்கும் அவங்களின் வியாதி புடிச்சிருக்கு. நான் இந்தக் கட்சிதான்.  இதெல்லாம் வேண்டானுதான் நினைக்கிறேன்.

ஆனால், இப்ப ஜனங்கள் இதை எதிர்பார்க்கிறாங்களே. எது எப்படியோ, இந்த வியாதியைப் பரவ விடக்கூடாது.

ராயன்: கட்சி உறுப்பினர்கள் கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு இதுபோன்ற உபசரிப்பு வாய்ப்பளிக்கிறது. மந்திரி புசார் இங்கே இருக்கிறார். பார்க்க முடிகிறது. பேச முடிகிறது. இது இல்லை என்றால், இது சாத்தியமில்லை. இந்த உபசரிப்பு ஒரு நாகரீகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், சில உபசரிப்புகளில் மக்கள் நடந்துகொள்ளும் முறை, நடத்தப்படும் முறை அருவருப்பாக இருக்கிறது.

ஹரி: Festivals provide opportunities for people of all creeds to come together. But, when party politics enters the arena of festivals, people do not come together; they become more divided along party lines. Look here. It is obvious. Who are the people here? It is the same with the others.

Lots of people are eager to organise this kind of political party sponsored celebrations. This gives them the chance to make quick bucks. This is, to put it plainly, another front for corrupt practices. It will be good for all if this new culture is nibbed in the bud.

ராமச்சந்திரன்: கஷ்டப்பட்டு உழைக்கிறோம். ஒரு நாளைக்காவது பலரைப் பார்த்து, பேசி, சந்தோசமாக இருக்க இது மாதிரியான விருந்து நல்லது. நம்ம பணத்தை எடுத்து நமக்கு விருந்து வைக்கிறாங்க. நம்ம பணமாக இருந்தாலும், செட்டியார் எதையும் சும்மா செய்வாரா?

இப்படி பெரிசா செய்கிற விருந்திலே ஒரு சின்ன விசயம் மிஸ் ஆகுதுன்னு சிலர் வருத்தப்படுராங்க. சிரிக்காதிங்க. “தண்ணி” அறவே இல்லையாம்.

போரப் போக்கைப் பார்த்தால், அடுத்தடுத்த ஆண்டுளே அதற்கும் பிரத்தியோக ஏற்பாடு செய்வாங்கன்னும் நம்பலாம். இன்றைக்கு விருந்து உபசரிப்பு ஜோர்.

சூசன் சியு: (தமிழில் பேசினார்) என் கணவர் காலத்திலிருந்து நான் எதிர்க்கட்சி ஆதரவாளர். இன்று சிலாங்கூரில் நம்ம கட்சி ஆட்சியில் இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி. மலேசியாவை நம்ம கட்சி ஆளனும். அது என் ஆசை. அதை எப்படி செய்வது?

நான் இங்கே சாப்பிட வரவில்லை. எப்போதுமே செய்தது இல்லை. எம்சியே பெரிய விருந்தெல்லாம் வைப்பாங்க. நோ,நோ. அந்தப் பழக்கமே என்னிடம் இல்லை. இந்த மாதிரியான விருந்திலே வஞ்சக எண்ணம் இருக்கிறது. என்னுடைய ஓட்டுக்கு இந்த விருந்துச் சாப்பாடு அவங்க கொடுக்கிற விலை. இது தவறு. யார் செய்தாலும் இது தவறு.

பேப்பரில் பாருங்கள். பாரிசான் அடிக்கிற கொள்ளையை. பினாங்கில் லிம்மும் சிலாங்கூரில் காலிட்டும் அப்படி செய்யவில்லை. இதுதான் நமக்கு வேண்டும். சோறும் கறியும் போட்டு நம்மை கேவலப்படுத்தக் கூடாது.

இப்ப மணி என்ன? இந்த சின்னப் பிள்ளைகள் தட்டை கையில் பிடிச்சுக்கிட்டு சோற்றுக்காக நிக்கிறாங்க. இது சரியா? பெரியவங்க, படிச்சவங்க அவர்களுடைய பிள்ளைகளை இப்படி நிற்க வைப்பாங்களா?

லிம் செய்வதையும் காலிட் செய்வதையும் மக்களுக்கு கூட்டம் போட்டு சொல்லிச் சொல்லி அவங்க கண்களை திறக்கனும். விருந்து கண்ணைத் திறக்காது.

அறிவுச் சோறு போடுங்க; அரிசிச் சோறு வேண்டாம்.

காந்திமதி: விருந்து சிறப்பாக இருக்கிறது. எல்லா இனத்தினர்களும் இப்படி கூடியிருந்து தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது.

சிரித்து மகிழ்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், உங்களுடைய கேள்வி சுருக்குன்னு குத்திடிச்சு. ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ. பண்டிகை பொதுவானது. சிலாங்கூரை ஆளும் பக்கத்தானும் எதிர்க்கட்சியான பாரிசானும் கூட்டாக இந்த தீபாவளி உபசரிப்பை மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மின் தலைமையில் நடத்தி இருந்தால்…சிந்திக்கிறேன்…அடேயப்பா, எவ்வளவு பெரிய விருந்தாக இருந்திருக்கும். ஒரு சில மணி நேரத்திற்காவது  கட்சி சார்பான பகைமை அடங்கியிருக்கும். அரசியல் நாகரீகம் ஓரிரு நிமிடங்களுக்காவது தலைதூக்கி இருக்கும்.

I will continue to think about it. But, to the poor people of all the races festivals have become a great burden. Won’t you agree with me?

சரவணன்: இந்த உபசரிப்பு எல்லா மக்களுக்கும் இல்லை. எல்லாரையும் கூப்பிட்டாலும் வரமாட்டாங்க. பாரிசான் சப்போட்டர்ஸ் அங்கே போவாங்க. பக்கத்தான், இங்கே வருவாங்க. இப்ப எல்லாம் இரண்டாச்சு. பக்கத்தான் தீபாவளி, பாரிசான் தீபாவளி. இனிமே எல்லாமே அப்படித்தான். நாங்கள் ரொம்ப சிரமப்பட்டு சிலாங்கூரை பிடிச்சோம். அந்த உதவிக்கு தலைவர்கள் பெருநாள்கள் மூலமாக கட்சி ஆதரவாளர்களுக்கு நன்றி சொல்ல இந்த விருந்தை நடத்துகிறார்கள். ஊக்கம் கொடுக்கிறார்கள். அடுத்த தீபாவளியும் நம்முடையதுதான்.

ஜெயக்குமார்: இப்போதெல்லாம் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏதாவது கொடுத்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்பது தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது என்று சொல்லலாம். அதில் பெருநாள் உபசரிப்புகளும் அடங்கும். ஆதரவு கொடுப்பதற்கும் ஆதரவு பெறுவதற்கும் பாலமாக இருப்பது ஊழல். அதன் மீதுதான் மலேசியர்கள் இப்போது பயணிக்கிறார்கள்.

ஈப்போவில் நேதாஜி பேசினார். பெருங்கூட்டம் கூடியிருந்தது. இந்தியர்களும் சீனர்களும் மலாய்க்காரர்களும் கூடியிருந்தனர்.

நேதாஜி பணமோ பரிசுகளோ கொடுப்பேன் என்று கூறவில்லை. கூடியிருந்தவர்களில் எவரும் அப்படி எதனையும் எதிர்பார்க்கவில்லை. எதையும் கேட்க வேண்டும் என்று எவரும் நினைக்கவும் இல்லை.

ஆனால், நேதாஜி அங்கு கூடியிருந்த மக்களிடம் “உங்கள் இரத்ததைத் தாருங்கள்” என்று கேட்டார்.

அக்கணமே எழுந்தது ஒருமித்த குரல்,”தருகிறோம்” என்று நூற்றுக்கணக்கான மக்கள் குரல் கொடுத்தனர். அவன்தான் தலைவன். அங்கு அன்று கூடியிருந்தவர்தான் சுயநலமற்ற பெருமக்கள்.

இப்போதெல்லாம் தலைவர்களும் மக்களும் போட்டி போட்டுக்கொண்டு பொதுச் சொத்தை கொள்ளையடிக்கின்றனர்.

எனக்கு இப்போது வயது 89. என் பேரன் என்னிடம் சமீபத்தில் கூறினான், “தாத்தா, வீரம் பற்றி இப்போது பேசினால் எடுபடாது. வியூகம் வேண்டும். கிடைப்பதை எடுத்துக்கொள்ள வேண்டும்; போட்டதை சாப்பிட வேண்டும். பின்னர் காலை வாரிவிட வேண்டும்.”

நான் அதிர்ச்சி அடையவில்லை. அதைத்தானே நாம் தினம் பார்க்கிறோம். ஆனால் நான் கூறினேன், “விஜயா, அது வியூகம் அல்ல. அது உன் தன்மானத்தை அடகு வைப்பதாகும். அது உன் மனைவியை அடமானம் வைப்பதற்கு ஒப்பாகும்.”

விரிட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்த அவன் என் கையைப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் நின்றான். அவனை ஏதோ உறுத்தத் தொடங்கிருக்கிறது என்று நினைக்கிறேன். அவன் இன்று இங்கு வரவில்லை. வீட்டிலிருக்கிறான்.

TAGS: