“வணக்கம், அன்புடன் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் நாட்டின் இன்றைய நிலை தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்ற முதுமொழிக்கு ஒப்ப நடந்து வருகிறது. நாட்டின் 60 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இந்த ஹேவிளம்பி சித்திரை புத்தாண்டை வரவேற்கின்றனர்”, என்றார் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
நாட்டின் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள ஊழல், வஞ்சம், சூழ்ச்சி மிக்க ஓர் அசாதாரண நிலையால் மக்கள் வாழ்விலும் எங்கும் எதிலும் ஏமாற்றுத்தனம், அடாவடித்தனம், ஓங்கி நிற்கிறது. அதனால் மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து கொலை, கொள்ளை, ஏமாற்று, அபகரிப்பு எனக் குற்றச்செயல்களில் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை முற்றாக மாற்றும் ஒரு நன்னாள் வராதா என்ற மக்களின் ஏக்கத்திற்கு விடையளிக்கும் நன்னாளாக அடுத்து வரும் ஹேவிளம்பி சித்திரை புத்தாண்டு விளங்க வேண்டும் என்று இறைவனைப் பிராத்திப்போம் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் பெருகி, மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மலேசியா சுதந்திரத்தின் போது ஆசியாவின் நான்கு பொருளாதாரச் சிங்கங்களில் ஒன்றாக வர்ணிக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியின் பயனால், இன்று ஊழலின் தலைமைப்பீடமாக, உலகளவில் ஊழலின் அவலச் சின்னமாக உருவெடுத்துள்ளதைக் காண எந்த மலேசியனுக்கும் மகிழ்ச்சி இருக்காது. நாட்டு பற்றுமிக்க இந்நாட்டுத் தமிழர்கள் ஆனந்தமாக இவ்வாண்டைக் கொண்டாட முடியாது என்பதனை நான் அறிவேன்.
எத்தனைத் தலைவர்கள் மாறினாலும் அம்னோவின் பிரித்தாலும் கொள்கைகள் மாறாது. இன மற்றும் சமய ரீதியாக மக்களைப் பிரித்தாளுபவர்கள் ஒருபோதும் வெற்றிகரமான பல்லின மலேசியாவுக்கு வழிவிட மாட்டார்கள் என்பது மட்டும் தெளிவு. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஷரியா நீதிமன்றச் சட்டம் 355 பற்றிய திருத்த மசோதாவை தாக்கல் செய்ததும்பாரிசானின் அரசியல்யுக்தியின் ஒரு பகுதியே என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
அதே வேளையில், எல்லோருக்கும் இலவச உயர் கல்வி, பிடிபிடிஎன் கல்விக்கடன் நீக்கம், மலிவான வாகனங்கள், வாங்கும் சக்திகேற்ற வீடுகள், மலிவான எரிபொருள், தாய்மொழிக்கல்வி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆகியவை அடங்கிய ஒற்றுமையான முன்னேற்றகரமான, சுபிட்சமான மலேசியாவை உருவாக்க நமது பங்களிப்பை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்.
அதற்கு முக்கியத் தேவை நேர்மை, தூய்மை, வெளிப்படையான, திறமையான ஆட்சி முறையாகும். சிலாங்கூரில் மக்கள் கூட்டணியின் நேர்மையான ஆட்சிமுறை மக்களைக் கவர்ந்துள்ளது. மாநிலத்தின் வளம் மக்களுக்கே என்ற ‘’மைஸ்’’ திட்டத்தின் வழி சிலாங்கூரில் பல கோடி வெள்ளிகள் மக்கள் நலன் திட்டங்களுக்குப் பயன்படுத்துப்பட்டு வருகிறது.
அதே வேளையில், மத்தியப் பாரிசான் அரசு, சிக்கனம் என்ற பெயரில் ஏழை மக்கள் வயிற்றில் அடித்து வருகிறது. மக்கள் பயன்படுத்தும் மாவு, அரிசி, சீனி, எரிபொருள் போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை மீட்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவ உதவிகளைக்கூட வெகுவாகக் குறைத்து விட்டது. அதே நேரத்தில் ஜிஎஸ்டி போன்ற புதிய வரிகளையும், மின்சாரம், டோல் போன்றவற்றுக்கான கட்டணங்களையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு சிலாங்கூரின் நிதி கையிருப்பு 40 கோடி வெள்ளியாக இருந்த போது இம்மாநிலத்தைப் பக்காத்தான் வெற்றி கொண்டது, இன்று அதன் கையிருப்பு 400 கோடியாக உயர்வுகண்டுள்ளது. பல மக்கள் நலன் திட்டங்களுக்கும் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறது.
பக்காத்தான் ஆட்சியில் நாடு திவாலாகிவிடும் என்ற பாரிசானின் வாதத்தை இந்தச் சாதனைகள் அடிப்படையற்றதாக்கி விட்டது. பக்காத்தான் ஆட்சியில் மாநிலத்தின் வளம் பெருகி, மக்களுக்கு அதிக நன்மைகளும் கிட்டியுள்ளதைப் பல்வேறு திட்டங்கள் காட்டுகின்றன.
பாரிசான் அரசாங்கம் அது தொடர்ந்து சந்தித்துவரும் பொருளாதாரத் தோல்வியால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் புறந்தள்ளி அவர்களைப் பலவாராக வஞ்சித்து வருகிறது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
ஒரே கட்சியின் அதன் தலைவர்கள் மற்றும் அவர்கள் குடும்ப நன்மைக்காக, குறுகிய அரசியல் வாழ்வுக்காகத் திட்டங்கள் போடாமல், அடுத்த தலைமுறையின் சுகமான வாழ்வுக்குத் திட்டமிடும் பரந்த மனமுடைய ஒரு அரசு மக்களுக்குத் தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு நாம் ஏற்படுத்தும் மாற்றம் அடுத்த தலைமுறையினர் தலைநிமிர்ந்து நிற்க நாம் செய்யும் மாற்றமாக இருக்க வேண்டும், மலரும் ஹேவிளம்பி சித்திரை புத்தாண்டு நம் வாழ்வில் நம்பிக்கை ஒளி வீசும் புத்தாண்டாக மலர இறைவன் அருளட்டும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
யாவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இது தமிழ் புத்தாண்டா இல்லை ஹிந்து புத்தாண்டா? தெரிந்தவர்கள் சொல்லலாமே!
இனிய தமிழர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் !
இது இந்து மதத்தவர்கள் கொண்டாடும் புத்தாண்டு.
தமிழர் இனத்தவர்களின் புத்தாண்டு தை முதல் நாளே.
“இது இந்து மதத்தவர்கள் கொண்டாடும் புத்தாண்டு.
தமிழர் இனத்தவர்களின் புத்தாண்டு தை முதல் நாளே.
” என்று அனந்திடமில் எழுதியுளீர்கள். எப்படி என்று விளக்குமாய்யா ?