நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் இரட்டைவேடமா?, கேட்கிறார் சேவியர்

 

Dr-Xavier-Jeyakumarஇந்நாட்டில்  நிலவும்  அமைதி ஒற்றுமை நீடிக்க நாட்டு மக்கள் எல்லா வகையான மதத் தீவிரவாதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்ற துணைப் பிரதமரின் 2017 ம் ஆண்டு  உகாதி தினக் கொண்டாட்ட உரை கவர்ச்சியாக உள்ளது.

ஆனால், துணைப் பிரதமரின் உரை வஞ்சகமானது, நேர்மையற்றது என்பதனை மக்கள்  நன்கு அறிவர் என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

நாட்டில் மதத் தீவிரவாதத்தை நசுக்கும் எண்ணம் கொண்டிருந்தால் அதனை நாட்டு மக்கள் மட்டுமின்றி நாங்களும் ஆதரிப்போம். ஆனால், துணைப் பிரதமர் அக்கருத்தை வெளியிட்ட இடம் அவரின் நேர்மையைப் பிரதிபலிக்கவில்லை, அதாவது முழுக்க மலேசிய இந்து தெலுங்கு வம்சாவளியினர் நிறைந்திருந்த ஓர் இடத்தில்  கைத்தட்டல்களுக்காகக் கூறியிருக்கிறார் என்றே மலேசிய இந்தியர்கள் கருதுகிறார்கள் என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

டத்தோ ஸ்ரீ  டாக்டர்  அமாட் ஸாஹிட் இந்நாட்டின் துணைப் பிரதமர் மட்டுமல்ல, அவரே நாட்டின் உள்துறை அமைச்சர். இந்நாட்டில் ஒருவருக்குக் குடியுரிமை வழங்குவதும் நிராகரிப்பதும் மட்டுமின்றி  நிரந்திரத் தங்கும் உரிமையளிப்பதும் அவரின் தனி உரிமையாகும் என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான சேவியர்.

இந்நாட்டில் அடையாளப்பத்திரமின்மையால் இன்னலை எதிர்நோக்கியுள்ள 3 லட்சம் இந்தியர்களின் நலன் குறித்துத் தீர்மானிப்பதும் அவரின் முக்கியப் பணிகளில் ஒன்று. அப்படிப்பட்டப் பொறுப்பு மிக்க அமைச்சரின் கருத்து நேர்மையானதாக இருந்திருந்தால் ஓர் அந்நிய நாட்டு மதத் தீவிரவாதிக்கு, அதுவும் ஸக்கீர் நாய்க்கைக் கைது செய்ய அந்நிய நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தும், எப்படி அவருக்கு நிரந்தரத் தங்கும் அனுமதியை  இங்கு வழங்கினார் என்று கேள்வி எழுப்பினார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

இந்நாட்டுக் குடிமக்கள் சிரியாப் போரில் பங்கு கொள்வதைத் தடுக்க நாடு பெரும் பாடுபட்டு வரும் வேளையில், அதிதீவிரவாத மதப் போதனைகளால் மேலும் பல இளைஞர்கள் ஈர்க்கப்படுவதைத் தடுக்க நமது போலீஸ் படை முயன்றுவரும் வேளையில், தீவிரவாதத்தைத் தூண்டி விட்டவர், அதற்கு நிதி உதவி செய்ய உதவியவர் என்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஸக்கீர் நாய்க்கிற்கு அவசரமாக நிரந்தர வசிப்பிடத் தகுதியை மலேசியா வழங்க வேண்டிய கட்டாயம் என்ன என்பதை  அமாட் ஸாஹிட் விளக்க வேண்டும்.

இப்போது உள்துறை அமைச்சின் கொள்கை, ”படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயிலாக” உள்ளது. உள்நாட்டினர் மதத் தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுக் கொண்டே,  வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது வேடிக்கையாக உள்ளது.

நமது பிரதமரும் அதையே மேற்கொண்டார்! இந்தியாவில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்க ஒத்துழைப்பதற்குக் கையெழுத்திட்டுக் கொண்டே, அங்குத் தேடப்படும் குற்றவாளிக்கு இங்கு  அடைக்கலம் தந்துள்ளார். இது மலேசியப் பிரதமர் நஜிப்பின்  நகைப்பிற்குரிய இரட்டை வேடத்தை உலகுக்கு அம்பலப் படுத்தியுள்ளது.

அதனால், இந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் நஜிப் நம்பகமற்ற ஒரு மனிதர் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளது.   மலேசியா ஸக்கீர் நாய்க்கிற்கு வழங்கியுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர் தகுதி இந்நாட்டின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்புவதாக விளங்குவதை மலேசியர்கள் பலர் குறைபட்டுக் கொள்ளும் வேளையில், துணைப் பிரதரும் அதே பாணியான இரட்டை வேடத்தைப் போடுவது இந்நாட்டின் தலைமைத்துவம் எவ்வளவு கேவலமானது என்பதைக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட தலைமைத்துவம் நாட்டுக்கு ஆபத்தானது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ளத் தவறக்கூடாது என்று எச்சரித்தார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.