– கி.சீலதாஸ், மே 7, 2017.
ஒரு நாட்டில் பிறந்தவருக்கு அம்மண்ணின் உரிமை இருக்கிறது என்ற கோட்பாடு சில நாடுகளில் மட்டும் பேணப்படுகிறது. அப்படிப்பட்ட உரிமையை அனுபவிக்க நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கோட்பாட்டை குடியுரிமைக்கான பிறப்புரிமை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த உரிமையைப் பெரும்பான்மையான உலகநாடுகள் மறுத்து வருவதும் கண்கூடு. மலேசியாவில் பெற்றோரில் ஒருவர் இந்நாட்டுக் குடியுரிமை பெற்றிருந்தால் அவருக்குப் பிறக்கும் குழந்தைகள் மலேசிய குடியுரிமையை இயல்பாகவே பெறுவர்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி இந்தியர்களின் மலேசியக் குடியுரிமை விஷயத்தில் சலுகை காட்டப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார். அரசமைப்புச் சட்டமும் குடியுரிமைச் சட்டமும் மலேசியக் குடியுரிமை பெறுவதற்கு எத்தகைய நிபந்தனைகளைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன. குடியுரிமைக் குறித்து சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நிறைவு செய்பவர் மலேசியக் குடியுரிமைப் பெற தகுதியுடையவராவார். எனவே, மலேசிய குடியுரிமை வழங்குவதற்குத் தனிச்சலுகை ஏதும் தேவையில்லை என்றே சொல்லலாம்.
துணைப் பிரதமர் கூறுவது சட்டத்தின் உண்மையான வியாக்கினமாக இருக்க முடியாது. குடியுரிமைக்குத் தகுதி இருக்கும்பொழுது அதை வழங்காமல் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமளிப்பது மனித நேயத்துக்குப் புறம்பான நடவடிக்கையாகும். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட நடவடிக்கை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றாலும் தகும். மலேசியாவின் குடியுரிமை பெற்றவர்கள் மலேசிய தினத்தன்று சட்டப்படி மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மலேசியக் குடியுரிமை பெறுகின்றனர். அதுதான் சட்டம். இதை அமலாக்கம் செய்வதில் எந்தத் தடங்களும் இருக்கக்கூடாது. இது சலுகை கோருவதாக நினைத்து செயல்படுவது தவறு. மலேசியக் குடிமகனுக்குப் பிறந்த குழந்தைகள் சட்டப்படி மலேசியர்கள். பிறந்த குழந்தைகளின் பிறப்பு விவரங்களைப் பதிவு செய்யாது விட்டது தவறு. அது நிவர்த்தி செய்யக் கூடிய தவறு. நிவர்த்தி செய்வதை முடக்குவதுதான் மிகப்பெரிய தவறு.
காலங்காலமாக இங்கே வாழ்ந்தவர்கள் அல்லது இந்த நாட்டில் பிறந்தவர்கள் போன்றோருக்குக் குடியுரிமை வழங்காது தாமதப்படுத்துவது, இழுக்கடிப்பது, போன்ற நடவடிக்கைகள் அதிகார துஷ்பிரயோகம் என்றே கருதப்படும். அதே சமயத்தில், இந்த நாட்டோடு யாதொரு தொடர்பும் இல்லாதவர்களும், இந்த நாட்டின் வளமைக்கும், முன்னேற்றத்திற்கும், செழிப்புக்கும், பாதுகாப்புக்கும் எவ்விதத்திலும் உதவிக்கரம் நீட்டாதவர்களுக்கு இந்த நாட்டு அரசு வலியே சென்று மலேசியக் குடியுரிமை வழங்குவது மனித நேயச்செயல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மெச்சத்தக்கதாகும். அப்படிப்பட்டவர்கள் தனிச்சலுகைக்கு உட்பட்டவர்கள். இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் குடியுரிமைக்குத் தகுதி பெற்றவர்கள். அவர்களுக்குச் சலுகை காட்டப்படமாட்டாது என்று சொல்வது அதிகாரத் துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அதே வேளையில், இந்த நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்களுக்கு அவர்களின் தகுதியை மதித்து குடியுரிமை வழங்குவதுதான் நியாயம். இந்த உண்மையை துணைப் பிரதமர் உணர்வது நல்லது.
தம் சொந்தக் குடிமக்களை மதிக்காத அரசு, குடிமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முற்படாத அரசு, நியாயமாக நடந்து கொள்கிறது என்று சொல்ல முடியாது. அவ்வாறு நடந்து கொள்ளும் அரசு உண்மையிலேயே ஓரவஞ்சனையோடு நடந்து கொள்கிறது என்ற பழிச் சொல்லுக்குக் காரணமாகிவிடும். இந்த நாட்டில் இது போன்ற நடவடிக்கைகள் கடுமையான சமுதாயப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன, அதைத் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் சமுதாயப் பிரச்சனைகளுக்கு குறைவிருக்காது என்பதையும் அரசு, அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் யாவும் உணர வேண்டும்.
இந்த நூற்றாண்டின் மிக பெரிய தமாஷ் ….
பரம்பரையாக இந்த மண்ணில் வசிப்பவர்களுக்கு ..பிரஜாவுரிமை இல்லை ..பலஸ்தீனா மக்களுக்கு பல அரபு நாடுகளில் இந்த அநியாயம் நடக்கின்றது ..கேவலம்