புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று இயக்குனர் கௌதமன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரேகார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியர் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் நடைமுறை வழக்கப்படியே கையெழுத்திடப்பட்டதாகவும், மக்களின் கருத்தின் அடிப்படையிலேயே திட்டம் முழுவதம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும் திட்டத்தை செயல்படுத்த மும்முரமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களுக்கு ஆதரவு
32வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை நேரில் சந்தித்தார் இயக்குனர் கௌதமன். ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணத்தில் அதிகாரிகள் யாரேனும் இங்கு கால் வைத்தால் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
ஆட்சிக்காக இணக்கம்
மண்வளம், நீர்வளம் மட்டுமின்றி விவசாயத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டம். வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருவதாக கௌதமன் குற்றஞ்சாட்டினார்.
தேர்தலில் பதிலடி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தேர்தலின் போது தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
அதிரடி கௌதமன்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலி மற்றும் பூட்டு போட்டு பூட்டி பெரும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று விடுதலையானவர் இயக்குனர் கௌதமன். தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வரும் அதிகாரிகளை விரட்டியடிப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.