மத்திய அரசின் அறிக்கையால் சினிமாவை நம்பியிருக்கும் கலைஞர்களுக்கு பேராபத்து- ஆர் கே செல்வமணி

selvamaniநேற்று மத்திய அரசு அறிவித்த ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் ஜி.எஸ்.டி திட்டத்தின்மூலம் திரையுலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்க டிக்கெட்டுகளின்மீது 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பதால், டிக்கெட்டுகளின் விலை 150 ரூபாய்க்கு உயர்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒன்லைன் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 200 கிட்ட வரும் என்று நிலைமை உருவாகியுள்ளது.

இது பற்றி இயக்குனரும் மற்றும் ஃபெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இன்று நாளிதழ்களைப் படித்தவுடன் திரையுலகைச் சேர்ந்தவனாகிய எனக்கு பயம் ஏற்பட்டது. திரையரங்குகளில் டிக்கெட் மீது உச்சகட்ட வரியான 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதைக்கண்டு பயப்படுவதா அல்லது கோபப்படுவதா எனப் புரியவில்லை. ஏற்கெனவே ஆன்லைன் பைரசி, திருட்டு விசிடி, திருட்டுத்தனமாக கேபிள்களில் ஒளிபரப்பப்படுவது, திரையரங்கங்கள் இடிக்கப்படுவது என பல்வேறு ஆபத்துகளில் திரையுலகம் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்போது உச்சகட்ட வரியாக 28% ஜி.எஸ்.டி என்ற பேராபத்து, திரையுலகை அடியோடு சாய்க்கின்ற முயற்சியாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திரையுலகுக்கு எந்த பாதுகாப்பும் வழங்காத மத்திய அரசு, அதன்மீது உச்சகட்ட வரி விதித்துள்ளது. இது திரையுலகம் மீது பகைக்கொண்டு, அதை மண்ணாக அழிக்கின்ற முயற்சியே என எண்ணத் தோன்றுகிறது. Online Piracy-யிலிருந்து பாதுகாக்காத மத்திய அரசு, திருட்டு VCD-க்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றாத மத்திய அரசு, வரிவிதிக்கும்போது மட்டும் உச்சகட்ட வரி விதித்துள்ளது ஏன் என்று புரியவில்லை. கோடானு கோடி மக்களுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் வழங்கும் கலைத் துறைக்கு கவலையையும் துயரத்தையும் ஏன் மத்திய அரசு பரிசளிக்க விரும்புகிறது? அரசாங்கத்தின் இந்த முடிவை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏதோ சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மட்டும் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். எப்போதும் இவர்களைப்போல உயர்நிலையில் இருப்பவர்கள் நூற்றுக்கும் குறைவே ஆகும். தினம் தினம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வயிற்றுக்கும், வாய்க்கும் இடையே போராட்டத்தில் அல்லாடிக் கொண்டிருப்பவர்கள் 95% மேலானவர்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

-cineulagam.com