சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் எங்கிருந்த சுடப்பட்டன…யார் யாரெல்லாம் அந்தக் காட்சித் திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை ஷார்ப் கட்டிங்கோடு அம்பலப் படுத்தியிருக்கிறார்கள்.
சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு பிடித்தமான எடிட்டரோ அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்கிற அளவுக்கு அப்படியொரு நேர்த்தி! மங்காத்தா படத்தில் அர்ஜுன் வருகிற ஆக்சன் காட்சி, தெய்வதிருமகன் படத்தில் இரண்டு காட்சி, இருமுகன் விக்ரம், துப்பாக்கி விஜய், ஆரம்பம் அஜித் தொடங்கி ஆயிரத்து ஐநூறு கோடி வசூலை வாரிக்குவித்த பாகுபலியும் பழியாகியிருப்பது கற்பனை வறட்சியின் உச்சம்!
இதில் உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? வில்ஸ்மித், மெல் கிப்சன் போன்ற டாப் டைரக்டர்களின் படங்களிலிருந்துதான் பெரும்பாலான காட்சிகளை சுட்டிருக்கிறார்கள்! தவிர, லாங் ஷாட், மிட் ஷாட், குளோஸ் அப் என ஷாட் பை ஷாட் திருடிப் படமாக்குவதெல்லாம் ஒரு பொழப்பா? இயக்குநர்கள்தான் இப்படி கற்பனை வறட்சியால் திருடுகிறார்கள் என்றால் உச்சத்தில் இருக்கும் ஹீரோக்கள் எப்படி இதுபோன்ற காட்சிகளில் கூச்சம் இல்லாமல் நடிக்க ஒப்புகொள்கிறார்கள்?
கடந்த ஆறு மாதத்தில் நான் கேட்ட கதைகளில் குறைந்த பட்சம் ஒரு பத்துக் கதையாவது சிறப்பானது என அடையாளம் காட்ட முடியும். அப்படித் திறமையான படைப்பாளிகள் சாலிகிராமம் டீ கடைகளிலும் கோடம்பாக்கத்து தெருக்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு அலைவது எவ்வளவு பெரிய சாபம்!?
இப்போது உச்சத்திலிருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவரும் ஆரம்ப காலங்களில் யாரோ ஒரு அறிமுக இயக்குநர் கொடுத்த ஹிட்டால் வளர்ந்தவர்கள்தானே! அதற்கு ஈடு செய்யும் விதமாக இளம் இயக்குனர்களுக்கு மூன்று படங்களுக்கு ஒருமுறையாவது வாய்ப்புக் கொடுப்பதுதானே உங்களை வார்த்துவிட்ட இயக்குநர்களுக்கும், சினிமாவுக்கும் செய்கின்ற நன்றியாக இருக்கும்?
சரி… இவை எல்லாவற்றையும் மறந்திடுவோம்! இந்த மீம்ஸ் பார்ட்டிகள் உங்கள் ஹீரோயிசத்தை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி பட்டவர்த்தனமாக சந்தி சிரிக்க வைக்கிறார்களே…இதைப் பார்க்கும் உங்கள் ரசிகனின் மனநிலை எப்படியிருக்கும்? துப்பாக்கி படத்தில் அந்த வில்லன் இடைவேளைக்கு முன் பேசுகிற ஆங்கில டயலாக் கூட அப்படியே ஹாலிவுட் படத்திலிருந்து தூக்கி வைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்!
கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் ஒரு கதாசிரியரிடம் கூச்சப்படாமல் கதை வாங்கிப் பண்ணினால் என்ன குறைந்து விடும்! துருவங்கள் பதினாறு படம் இயக்கிய தம்பி கார்த்திக் நரேன், ராஜேஷ் குமார் நாவலை வாங்கி படமாக எடுத்து எல்லோருடைய பாராட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் ஆளாகவில்லையா!
கதையோ காட்சியோ உங்களால் யோசிக்க முடியவில்லை என்றால் காலத்திற்கும் இதுபோல் நடந்து கொள்வது நல்லாவா இருக்கு!? இன்று உலகமே கொண்டாடும் இயக்குநர் ராஜமௌலியும் ‘காட்சித் திருடர்தான்’! ஆனால், இதுவரை அவரது படங்களுக்கு வெளியிலிருந்தான் கதை வாங்கிருக்கிறார் என்பது, இந்சத காப்பிகேட் முன்னணி இயக்குநர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நீங்கள் செய்கிற அத்தனையும் யாரோ சிலரால் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணம்தான் இப்போது சொன்னவை அதனையும். இனிமேலாவது உங்கள் மீதும் உங்கள் படைப்பின் மீதும் சாதாரண ரசிகன் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப் பாருங்கள்!
இந்த லட்சணத்தில் திருட்டு விசிடி பற்றி வேறு அவ்வப்போது பேசி காமெடி பண்ணுகிறீர்கள்! நமக்குத் தெரிந்த வாழ்கையை விட்டு விலகிப்போய் கதை பண்ணவும் படம் எடுக்கவும் முயற்சிக்கும்போது இப்படியான அவமானங்கள் வந்து சேரும் என்பதற்கு இது ஒரு பாடம்!
– வீ கே சுந்தர்
கற்பனை வற்றிப்போனால் அடுத்தவன் கற்பனையை திருடும் கலாசாரம் வளரவே செய்யும் !
பாகுபலி (முதல் பாகம்) வெளிவந்தபோதே நான் சொன்னேன்…ராஜ்மௌலி நம்ம ஊர் தேவர் மகன் படத்தை அப்படியே 90% சுட்டுவிட்டார் என்று. எவன் கேட்டான். ஏழை பேச்சு என்றைக்காவது அம்மபலம் ஏறியது உண்டா?