சிந்தனை செய் மனமே: கோபம் இதயங்களைப் பிளக்கிறது; அன்பு, இணைக்கிறது!

 

  – கி.சீலதாஸ்.  ஜூன் 2, 2017.      

siladassஇருவர்  கோபமடைந்தால்   இருவருமே  உரக்கப்  பேசுவார்கள்.  இது  சகஜம்.  இதைப்  பற்றி  என்  நண்பரிடம்  கேட்டபோது  அவர்  படித்த  ஒரு  கதையைச்  சொன்னார்.  ஒரு  ஞானி   தம்  சீடர்களிடம், “இருவர்  கோபமடைந்தால்  ஒருவரையொருவர்  உரக்கத்  திட்டுவார்கள்.   அது  ஏன்?”,  என  வினவினார்.

சீடர்கள்  சிறிது  நேரம்  சிந்தித்தனர்.  பிறகு,  “நாம்  அமைதியை  இழந்துவிட்டால்  கத்துவது  இயல்பு”,  என்பது  ஒரு   சீடனின்  பதில். “அது  சரிதான்.  ஆனால்  மற்றவர்  பக்கத்திலேயே  இருக்கும்போது  கத்துவானேன்.  நீ  சொல்ல  வேண்டியதை  மெதுவாகச்  சொல்லலாம் அல்லவா?”,  என்றார்  ஞானி.

சீடர்கள்  பலவிதமான  பதில்களைச்  சொன்னார்கள்.  அவை  ஞானிக்குத்  திருப்தியளிக்கவில்லை.  இறுதியில்,  ஞானியே  விளக்கமளித்தார்.

“ஒருவர்  மீது  ஒருவர்  கோபம்  அடைந்ததும்,  அவர்களின்  இதயங்கள்  வெகு  தொலைவுக்குப்  போய்விடுகின்றன.  அந்தத்  தூரத்தை  அடைவதற்கு  கத்த  வேண்டியுள்ளது.  கோபம்  கூடக்கூட  ஒருவருக்கொருவர்  உரக்கக்  கத்த  வேண்டியிருக்கும்.  அப்போதுதான்  அவர்களிடையே  ஏற்பட்டுவிட்டத்   தூரத்தைச்  சமாளிக்க   முடியும்.

இருவர்  காதலர்களாகிவிட்டால்   அவர்கள்  கத்தமாட்டார்கள்.  மெதுவாகப்  பேசுவார்கள்.  காரணம்  அவர்களின்  இதயங்கள்  நெருக்கத்தில்  உள்ளன.  அவர்களிடையே   தூரம்  இருக்காது  அல்லது  குறுகிய  தூரம்தான்  இருக்கும்.

அவர்கள்  ஒருவரையொருவர்   நேசிக்கும்போது    என்ன  நடக்கிறது?  அவர்கள்  பேசுவதே  இல்லை.  அவர்களின்  நேசம்,  நட்பு   ஆழமானதாகி விட்டதால்  அவர்கள்  பேசமாட்டார்கள்.  இறுதியில்  மெதுவாகக்கூட  பேசாமல்    ஒருவரையொருவர்    பார்த்துக்கொண்டே  இருப்பார்கள்.  அவ்வளவுதான்.  ஒருவரையொருவர்   நேசிக்கும்போது  அவர்களிடையே   அன்பு  நெருக்கமடைகிறது”,  என்றார்.

இறுதியாக,  தம்  சீடர்களைப்  பார்த்து  “நீங்கள்   வாதிடும்பொழுது  உங்கள்  இதயங்களை  வெகுதொலைவுக்குப்  போக  விட்டுவிடாதீர்கள்.  வெகுதூரம்  பிரிந்து  போகச்  செய்யும்  வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.  இல்லையேல்,  தூரம்  அதிகமாகும்போது    திரும்பும்  பாதையைத்  தொலைத்துவிடுவீர்கள்”,  என்று  சொல்லி  முடித்தார்.

ஞானி  சொன்னதை  சிந்தித்துப்  பார்க்கும்போது,  அன்பு  சங்கமம் ஆகும்போது  இதயங்கள்  இயற்கையாகவே   மௌனத்தை  நாடுகின்றன,  அமைதியான  மனநிலையை  விரும்புகின்றன.  ஆத்திரம்  மேலிடும்பொழுது  இதயங்கள்  குமுறுகின்றன,  அங்கே  அமைதி  இருக்க  வழியில்லை.  பெரும்,  பெரும்  ஆர்ப்பாட்டங்கள்  எழுப்பும்  ஒலி  அன்பின்  அடையாளம்  அல்ல; அது  கோபத்தின்  பிரதிபலிப்பு.  அது  சிந்திக்கும்  ஆற்றலை  இழந்தவர்களைக்  குறிக்கிறதா?

அமைதியான  சூழ்நிலை  அன்பான  இதயங்கள்  கூடுவதைக்  குறிக்கிறது  என்பது  உண்மையெனின், இறைவன்  மீது  அன்பு  கொண்டு,  நம்பிக்கை  கொண்டு  நம்  இதயத்தை  சரணடையும்  பொழுது  மனதுதானாகவே  அமைதியான  நிலையை  அடைந்துவிடுகிறது.  பேசாத  தெய்வத்திடம்   பிரார்த்திக்கிறோம்,  அமைதியாக;  ஆத்திரத்தோடு  அல்ல,  அன்போடு.  அதே  குணத்தை  சகமனிதர்களிடம்  காட்டுகிறோமா?  இல்லையே!  ஏன்?