மதியநேரத் தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்த அலிராஜாவின் முகத்தில் நோன்புப் பெருநாள் களைகட்டியதாகச் சொல்லமுடியாது. அவனை ஏதோ வருத்தியது. காலையில் தன் தந்தை இஸ்மாயிலோடு பள்ளிவாசலுக்கு வந்தான் அலி. அவனுக்காக முன்பின் பழக்கமில்லாத ஒருவர் காத்திருந்தார். அவர் தம் அடையாளத்தை வெளிப்படுத்தி புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திலிருந்து அலியை விசாரிக்க வந்திருப்பதாகச் சொன்னார். மற்றவர் யாரும் பார்க்காதவாறு தம் காவல்துறை அடையாள அட்டையைக் காட்டினார். அதிர்ச்சி அடைந்தான் அலி. அதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்தான். “பள்ளிவாசல்…. பெருநாள்..” என்று முணுகினான் அலி. “பிரச்சினையாக்கிவிட வேண்டா
ம்… அசிங்கமாகிவிடும்” என்று எச்சரித்தார் அதிகாரி. இருவரும் குசுகுசுக்க, அலியின் தந்தை இஸ்மாயில் பள்ளிவாசல் கட்டடத்தை நோக்கி சென்றார். அவர் எழுபது அகவையைக் கடந்துவிட்டவர். இந்த வயதிலும் திடகாத்திரமாகக் காணப்பட்டார். இஸ்மாயில் சிறிது தூரம் சென்றுவிட்டதைக் கவனித்த அலி, அந்த அதிகாரியிடம் “இங்கு வந்து உங்கள் அதிகாரத்தை காட்டுவது அழகல்லவே…!” என்றான்.
“அழகோ, அழகில்லையோ…! உம்மைப்போலவே நானும் ஒரு போலீஸ் அதிகாரி. நமக்கு கொடுக்கப்படும் வேலையை ஒழுங்காக செய்து முடிக்கவேண்டும்..! இல்லையா…?”, என்றார் புக்கிட் அமான் அதிகாரி.
“நான் என்ன ஓடிப்போவேனா…? எனக்கு குடும்பம் இருக்கிறது…!” அங்கலாய்த்தான் அலி.
“என் கையில் ஒன்றும் இல்லை அலி. நீ இன்றோ நாளையோ வெளிநாடு போகத் திட்டமிட்டிருக்கிறாய். அலுவலகத் தகவல்படி நீ அவசர விடுப்புக்கு மனு கொடுத்திருந்தாய்” என்று அந்த அதிகாரி கூறினார். சில வினாடிகள் நடந்த இந்த உரையாடலில், தமக்கு தொழுகை செய்ய எந்த தடைகளும் இல்லை. ஆனால், அலியோடு நெருங்கியே இருக்கப்போவதாக உறுதிப்படுத்தினார்.
இப்பொழுது தொழுகை முடிந்துவிட்டது. தம் தந்தையைத் தேடும் படலத்தில் இறங்கினான் அலி. அவரைக் காணவில்லை. பள்ளிவாசலின் நுழை
வாயிலில் நின்று கொண்டிருந்தால் தன் தந்தையைக் கண்டுவிடலாம் என்ற ஆலோசனையை ஏற்றுக்கொண்டார் புக்கிட் அமான் அதிகாரி. இவர் அலியோடு பேசின போதிலும் அவருடைய கண்கள் பள்ளிவாசல் வளாகத்தை வலம் செய்து கொண்டிருந்தன. அலி இதை கவனித்ததாகத் தெரியவில்லை.
தொழுகையை முடித்துக் கொண்டவர்கள் பள்ளிவாசலைவிட்டுப் போய்விட்டனர்.
தன் தந்தையைக் காணாத அலி, “இவரு எங்கே போனார்…? ஒருவேளை வீட்டுக்குத் திரும்பிவிட்டாரா…?” என்று சொல்லிக்கொண்டே தன் கைத்தொலைபேசியை சேப்பிலிருந்து எடுத்ததைப் பார்த்த புக்கிட் அமான் அதிகாரி, “ஜாக்கிரதை … வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படாத வகையில் பேசு….! நீ நினைப்பது போல் அவர் வீடு போய் சேர்ந்திருக்கலாம் …! இல்ல…. தம் நண்பர்களுடன் போயிருக்கலாம் அல்லவா…?”
அலி தலையை அசைத்து, அதிகாரி சொன்னதை ஏற்றுக்கொண்டான். அலி தம் வீட்டோடு தொடர்புகொண்டு அமைதியாகப் பேசினான். தான் இன்னும் பள்ளிவாசலில் இருப்பதாகச் சொன்னான். ஒருவேளை தன் தந்தை அவருடைய நண்பர்களோடு எங்கேயாவது பேசிக் கொண்டிருப்பார் என்று கூறி தொலைபேசி உரையை முடித்துக்கொண்டான்.
“சரிவா….. நாம் கிளம்புவோம்..?”
“எங்கே….?” கவலையோடு கேட்டான் அலி.
“கவலைப்படாதே… சும்மா…. வா….!” என்று சொல்லி அலியின் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது, ஒரு கறுப்பு நிற புரோட்டோன் பிரதானாவிலிருந்து இருவர் வெளியே வந்து; “டிஸ்பி அலி …. என் பெயர் டிஎஸ்பி ஹம்ஸா…! உன்னோடு இருப்பவரின் பெயர் எஎஸ்பி ஜக்கரியா…! இவர் எஎஸ்பி ராமலிங்கம்…! நாங்கள் புக்கிட் அமானிலிருந்து வந்துள்ளோம்” என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் வாகனச் சாவியைத் தாருங்கள்” என்றார்.
என்ன நடக்கிறது என்பதை சுதாகரிப்பதற்குள் அலி கறுப்பு பிரதானாவில் ஏறி அமர்ந்தான். இல்லை… இல்லை. அமரச் செய்யப்பட்டான். ஹம்ஸா, இராமலிங்கம் இருவருக்கும் இடையே அலி அமர்ந்தான்.
அலியை நேரே ஒரு சொகுசு தங்குவிடுதிக்குக் கொண்டு சென்றனர். ஒரு பிரமாண்டமான அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்தபோது அலிக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அலியின் தந்தை இஸ்மாயில் காவல்துறை உடை அணிந்திருந்த ஒரு அதிகாரியோடு பேசிக்கொண்டிருந்தார்.
“வாப்பா…!” என்று அதிர்ச்சியோடு அலி விளித்ததை இஸ்மாயில் பொருட்படுத்தவில்லை. அவர் பக்கம் போய் நின்று, “வாப்பா எப்படி இங்கே … வந்தீங்க…”
“அதுவா முக்கியம்….?” அலியை ஏறெடுத்துப்பார்க்காமல் முணுமுணுத்தார் இஸ்மாயில். “உன் நடத்தை ! நீ வாங்குற லஞ்சம்…! அப்பப்பா…..! என்ன ……… என்ன கொடுமை!” வேதனையோடு சொன்னார் இஸ்மாயில். அந்த அறையில் இருந்தவர்கள் யாவரும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இப்போ புது காடி வாங்கியிருக்குறே.…! எங்கே இருந்து இந்தப் பணம் வந்துச்சி…!” மெல்ல பேசினார் இஸ்மாயில். “வீட்டுல எல்லாரும் சுகமாக இருக்காங்க…! ஏன்..? நிறைய பணம் இருக்கு! அதனால சந்தோஷம்..! உன் பிள்ளைகளைப் பார்… அவங்ககிட்ட இருக்கிற அகங்காரத்தைப் பார். இதெல்லாம் நியாயமா…! நியாயமான வருமானமா…? கிடையாது! உன் பிள்ளைகளின் அகங்காரம் எங்கிருந்து வந்துச்சு? நீ தேடிவச்சிருக்கிற லஞ்சப் பணம் அவங்களுக்கு அகங்காரத்தை தருது. நேரம் காலம் தெரியாமல், யாருடைய சுகத்தை, உரிமையை பாதிக்குங்குறத கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்காம லஞ்சம் வாங்குகிற, உன் வீட்டுல மூலைமுடுக்குல லஞ்ச பணத்தை மறைச்சு வச்சிருக்கே…! வீடு பூராவும் லஞ்ச பணத்தின் வாசம்தான் வீசுது. ஒரு போலீஸ் அதிகாரிகிட்டே காணவேண்டிய தூய்மை, மனப்பூர்வமான நல்லெண்ணம், கடமை உணர்வு உன் வீட்டில் இல்லீயே…!” இவ்வாறு சொன்ன இஸ்மாயில் அழுதுகொண்டே நாற்காலியின் பின்புறம் தன் தலையைச் சாய்த்து கண்களை மூடிக்கொண்டு அழுதார்.
அறையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் எவரும் ஒன்றும் சொல்லவில்லை. அலி தன் முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டான். தன் தந்தை அழுவதைப் பார்த்து அவனும் அழ ஆரம்பித்தான்.
இஸ்மாயில் மெல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார். கண்களைத் துடைத்துவிட்டு, “நான்தான் உன் நடவடிக்கைகளைப் பற்றி புக்கிட் அமானுக்கு தெரியப்படுத்தினேன். இன்னைக்கு ராத்திரி நீ சிங்கப்பூருக்குப் போய்; நாளைக்கு காலையில் லண்டனுக்குப் போகப்போறே. எல்லாத்தையும் நான்தான் சொன்னேன்..! ஏன்? ஏன்…?” அமைதியானார் இஸ்மாயில்.
இஸ்மாயில் பேசப்பேச அலியின் அழும் ஒலி எகிரிக்கொண்டே இருந்தது.
“ஏன் செய்தேன்..? ஏன்..? ஆத்திரமா இருக்கா..? உனக்கெல்லாம் ஆத்திரம் வரணும். அது எப்படிப்பட்ட ஆத்திரம்..? நியாத்தை நினைச்சு ஆத்திரம் வரணும். நியாயத்தை குட்டிச்சுவராக்கிவிட்ட உன்னை மாதிரி ஆளுங்க நியாயத்துக்காக ஆத்திரப்படுவீங்களா…? கிடையாதே…! நீ இப்போ அழறே…! ஏன்..? நியாயத்தை நினைச்சு, அதுக்கு செஞ்ச துரோகத்தை நினைச்சு அழுவுறியா? இல்லெ.. மாட்டிக்கிட்டோமேனு நினைச்சு அழுறீயா….! இல்ல உன் வாப்பாவான நானே போட்டுக்கொடுத்துட்டேனேனு நினைச்சு அழுவுறீயா..?” மீண்டும் மவுனமானார்
இஸ்மாயில். தாம் அணிந்திருந்த கறுப்பு குல்லாவை அகற்றி மொட்டையான தலையில் வியர்த்துக் கொட்டும் வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்து பெருமூச்சு விட்டார், “சரி… நான் ஏன் இப்படி செய்தேன்னு யோசிக்கிறீயா…? இந்த அதிகாரிகளும் அதைத்தான் கேட்டாங்க…! நான் சொன்ன பதில் என்ன தெரியுமா…? உங்க கடமையை செய்யுங்க அப்படீன்னேன்..! அதுமட்டுமானு கேட்டாங்க…! நான் பதில் … சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள நீ வந்துட்டே…!” மீண்டும் அமைதியான இஸ்மாயில், “அல்லாஹ்..” என்று உரக்கக் கூறி தம் கைகளை உயர்த்தி, “இப்படிப்பட்ட கொடுமைகளை எப்படி சகித்துக் கொள்வது…?”, என்றார். அந்த அறையில் இருந்தவர்கள் யாவரும் அதிர்ச்சியோடும் மனகளக்கத்துடனும் அவரை பார்த்துக்கொண்டிருந்தனர். அழுதுகொண்டிருந்த அலி, தன் தந்தையை வெறித்துப் பார்த்தான்.
“பாவமான பசங்க…. நல்ல பையனுங்க…! சின்ன வயசு. நவீன், சுல்வர்ஹான் ஓஸ்மான் ரண்டு பேரு என்ன குற்றம் செஞ்சாங்க…? அடிச்சு கொன்னுட்டாங்களே…! சாகுற அளவுக்கு அடிச்சு கொடுமை படுத்தினவங்க எப்படிப்பட்டவங்க…? அவுங்க மனசு எப்படிப்பட்டது? போலீஸ் எதுக்கு இருக்கு? மிருக குணம் படைச்சவங்கள கண்காணிச்சு, மத்தவங்கள காப்பத்தனும். அதுதான் அவங்க கடமை. லஞ்சம் எப்படி வாங்கலாமுனு செலவழிக்குற நேரத்த மக்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு கொடுக்க முடியும்னு யோசிக்கவேண்டியவங்க, அதை செய்யலீயே…. உன் பிள்ளைங்க பாதுகாப்பு பற்றி நீ பேசுற … மத்தவங்க பிள்ளைங்களைப் பத்தி நீ யோசிச்சது உண்டா? நீ உன் சுகத்த, உன் குடும்ப சுகத்த, உன் பிள்ளைகளோட சுகத்தல அக்கறையா இருக்குற; நான்….. பரிதாபமான நிலையில் இருக்கிற மக்களுடைய துக்கத்த நினைச்சு அழுதுகிட்டிருக்கேன். நவீனும், சுல்வர்ஹானும் தாக்கப்பட்டாங்க, தாக்கினவங்க மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். தாக்கப்பட்ட பசங்களோடு உயிருக்கு ஆபத்து உண்டாகுமுனு நினைக்காம தாக்குனது ஆச்சரியமா இல்ல? கொடுமையான எண்ணம். கொடுமையான நடவடிக்கை. இப்படிப்பட்ட எண்ண வளர்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? போலீஸ் எதுக்கு? சமுதாயத்துல கொடுமைக்காரங்க உருவாகுறத தடுக்கவேண்டியது அவுங்க பொறுப்புன்னு நான் சொல்றேன்! அந்த ரண்டு பேரு கொடுமையான சாவு தடுத்திருக்கலாம். உன்னைபோல அதிகாரிங்க அடங்காத வாலிபர்களை கட்டுப்படுத்தியிருந்தா இப்படிப்பட்ட கொடுமையான சம்பவங்கள் நடக்குமா? தவறிட்டீங்க அவங்களோட சாவுக்கு நீங்க பொறுப்பு இல்லேனு சொல்லலாம் ரௌடிகளோடு குற்றத்துக்கு நீங்க பொறுப்பா இருக்க முடியாதுனு சொல்லலாம். அது வெறும் சோடையான பேச்சு. அர்த்தமில்லாத பேச்சு. பொறுப்பு இல்லாத பேச்சு. எப்படி லஞ்சம் வாங்லாமுனு யோசிக்கிற நேரத்தை வாலிபப் பசங்களோடு குற்ற போக்கை எப்படி கட்டுப்படுத்துறதுனு சிந்திச்சிருந்தா…. இந்த அப்பாவி பசங்க இன்னைக்கு உயிரோடு இருப்பாங்க..! மூர்க்கத்தனமாக நடந்துக்குற பசங்களோட பெற்றோர் என்ன செய்தாங்கனு கேட்கிறீயா…? நியாயம்தான். அவங்களுக்கு புத்தி வரும்படி எதையாவது செய்! ஏன்… எதுஎதுக்கோ சட்டம் போடுறீங்க பொறுப்பில்லாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் போடலாம் இல்லீயா..? அதுக்கு எங்கே இருக்கு நேரம்..? நாத்தம் பிடிச்ச பணத்தை எண்ணவே நேரம் இல்லீயே…!” இஸ்மாயிலின் குரல் தெளிவாக இருந்தது. அவர் தன் மகனைப் பார்த்து, “உன் மாதிரி ஆளுங்க சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் கேடு…!” என்றார்.
“அலி… உன் தந்தை வீட்டுக்குப் போகட்டும். உன்னோடு பேச வேண்டியுள்ளது…!” என்றார் டிஎஸ்பி ஹம்ஸா.
“அதுவெல்லாம் வேண்டாம்…! நானே போவேன் என் வீட்டுக்குப் போவேன். அது பெரிய வீடு ஒன்னும் இல்ல. சின்ன கம்பத்து வீடு. இவனும் இவனுடைய சகோதர சகோதரிகள் பிறந்து வளர்ந்த வீடு. அத நான் விட்டுக் கொடுக்கல. அந்த வீட்டுக்குளளே பண வாசம் இருக்காது. அன்புமணம் வீசும். இயற்கை மணம் பரவும். பணத்தைப் பத்தி கவலையே இருக்காது. ஆடம்பரம் இல்ல…! அகங்காரம் இல்ல..! ஏர்கண்டிஷன் இல்ல. இயற்கையான காற்று கிடைக்கும். ஆனால், நல்லத செய்யனும் அப்படீங்குற எண்ணம் மட்டுமே எப்பவும் இருக்கும். எல்லாரும் சமம். எல்லாரும் சௌரியமா இருக்கனும் அப்படீங்குற எண்ணத்துல வாழ்ந்தோம். அந்தப் பழைய வீட்டுக்குப் போவேன். இவன் அம்மா ரபியா முன்னமே போயிட்டா…! வருஷத்துல ஓரிருமுறை போய் வீட்டை சுத்தப்படுத்துவோம். சில நாள் தங்கியிருந்துட்டு வருவோம். சுகமான வாழ்க்கை, சுகமான எண்ணங்கள் யாருக்கும் தீங்கு நினைக்காத எண்ணம் அது போதும்..!” என்று சொல்லிவிட்டு எழுந்தார். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டார் இஸ்மாயில்.
சிறப்புக்கட்டுரை சிறப்புக்கதையாக உருமாறியிருக்கிறது. படைப்பாளருக்கு பாராட்டுக்கள்.
கண்ணீரோடு, இறைவனை நினைத்து, வணங்கி , ஒவ்வொரு காவல் துறை ஆதிகாரியும், மேல்நிலை அரசாங்க அதிகாரிகளும் நேர்மையாக, மதம், இனம் பார்க்காமல் இலஞ்சம் என்ற குதூகல எண்ணத்தை தனுள்ளிருந்து அகற்றி நேர்மையாக நடப்பார்களென்றால் நாடும் மக்களும் சுபேஷம் பெற வழிவகுக்கும், அதோடு மலேஷியா மெலாயு இலஞ்சம் இல்லாமல் வாழ முடியாது என்ற எண்ணத்தை அகற்றிட வழிவகுக்கும் . நன்று.
லஞ்சமே வாங்காத தூய்மையான நிறைய மலாய்க்கார அதிகாரிகளை நான், என் வாழ்நாளில் நிறைய பேர்களை பார்த்துள்ளேன். அதேவேளை, ‘முன்பு பத்து வெளியாவது லஞ்சம் கொடுத்தால் தான் அந்த அதிகாரி நம்மை விடுவார். இப்போது அப்படியல்ல, ஒரு சிகரெட் கொடுத்தாலே போதும்.’ என வெளிநாட்டு சட்டவிரோத தொழிலாளர்கள் பேசுமளவுக்கு உள்ள மலாய் அதிகாரிகளையும் நான் பார்த்துவிட்டேன்.
என் வாழ் நாட்களில் நான் பார்த்தது 99 .99999 % மலாய் ஊழல் வாதிகள்– ஆனால் எனக்கு தானாகவே முன் வந்து உதவிய ஒரு மலாய்க்கார அதிகாரிக்கு நான் இன்று நோன்பு பெருநாள் வாழ்த்து தெரிவித்தேன் —
அருமையான கட்டுரை.நாட்டை காக்கவேண்டியவர்கள் தவறு செய்வதால் நாட்டுக்கே கெட்ட பெயர்.