26 ஜூன் – ‘அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாள்’. இந்நாள் சித்திரவதைக்கு எதிராகவும், சித்திரவதைக்கு ஆளானோரை நினைவு கோரவும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மனித நாகரீக வரலாற்றில் அந்நாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருந்ததால், ஐக்கிய நாடுகள் சபையும், ஜூன் 26 – ஐ அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு தினமாக அங்கீகரித்தது.
1945, ஜூன் 26- இல், இரண்டாம் உலகப் போரில், மில்லியன் கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தபோது, ஐநா முதன்முறையாக அனைத்துலக உடன்படிக்கை ஆவணம் ஒன்றில், அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. அந்த உடன்படிக்கையின்படி, ஐநா உறுப்பு நாடுகள் அனைத்தும் கட்டாயம் மனித உரிமையை மதிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டது.
1987, ஜூன் 26 – இல் நடைபெற்ற ஐநா மாநாட்டில், சித்திரவதை, மனிதாபிமானமற்ற அல்லது சுயமதிப்பை இழக்க செய்யும் வகையிலான, கொடூரமான அணுகுமுறை அல்லது தண்டனைக்கு எதிரான கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
ஜூன் 26- ஆம் நாளை அனைத்துலக சித்திரவதைக்குள்ளானவர் ஆதரவு நாளாக 1997-ல் ஐநா பொதுச் சபையில் முடிவு செய்து, 26 ஜூன் 1998- இல், முதன் முறையாக அணுசரிக்கப்பட்டது.
சித்திரவதை என்பது மனித உரிமையை மீறும் ஒரு கடுமையான குற்றமாகும். பொதுவாக, இக்குற்றத்தை அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர்கள் சாதாரண மக்கள் மீது மேற்கொள்ளுவர். இத்தகைய சித்திரவதைக் குற்றங்களை அம்பலப்படுத்துவது, சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிப்பது, எல்லா வகையான சித்திரவதைகளையும் நிறுத்துவது என்பது போன்ற பொறுப்புகள் குடிமக்களான நமக்கும் உண்டு என்பதனை நினைவுறுத்தவே இந்நாள் தோற்றுவிக்கப்பட்டது.
ஐநா சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்ட சித்திரவதைக்கு எதிரான அந்த உடன்படிக்கையில், கையெழுத்திடாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது வருத்தமான செய்தியாகும். மலேசிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பது நமது அவா.