– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017.
60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.
பாரிசான் இன்று இந்த அளவிற்கு இம்மண்ணில் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்திருப்பதற்கு மகாதீரின் பங்கு அளப்பறியது. இப்போது அவரைக் கொண்டே அந்த விருட்சத்தைச் சாய்க்க நினைப்பது, எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், அடுத்தப் பிரதமர் யார் எனும் கேள்விகளும் அவர்களிடையே இன்று மேலோங்கியுள்ளது.
மந்தமாக இருக்கும் நாட்டின் இன்றைய சமூக-பொருளாதார சூழலில், மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் வேளை, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அடுத்த பிரதமர் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கின்றனர்.
“மக்கள் விரும்பினால், பிரதமராக நான் தயார்”, என்று மறைமுகமாக கருத்துரைத்திருக்கும் மகாதீரின் ஆசைக்கு; “முதலில் ஆட்சியைப் பிடிப்போம், பிறகு பிரதமர் பதவி பற்றி பேசுவோம்” என எதிர்க்கட்சி தலைவி வான் அசிஸா தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
14-வது பொதுத்தேர்தல் விரைவில் வரலாம் என்ற ஆருடங்களுக்கு நடுவே, அடுத்த அரசியல் நாடகங்கள் ஆங்காங்கே அரங்கேற்றம் காணத் தொடங்கிவிட்டன. எப்போதும் போல, மக்கள் பார்வையாளர்களாகவும் இரசிகர்களாகவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், ‘பக்காத்தான் ஹராப்பான்’ (நம்பிக்கை கூட்டணி), மகாதீரை முக்கியத் தலைவராக அடையாளம் காட்டுகிறதே தவிர, உண்மையில் மக்களுக்கு எந்தவொரு நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாகத் தெரியவில்லை.
நஜிப் மீதான வெறுப்பே, இன்று மகாதீரும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியும் பாரிசான் நேசனல் ஆட்சியை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம். மாறாக, தடுமாறிகொண்டிருக்கும் நாட்டின் சமூக-பொருளாதார, அரசியல் சூழலைச் சரி செய்யவோ, தலைவிரித்தாடும் ஊழலைத் துடைத்தொழிக்கவோ, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப அரசியலை களையெடுக்கவோ , இனவெறி மற்றும் சமூக அநீதிகளைத் தடுக்கவோ இவர்கள் முயற்சிக்கவில்லை.
பதவி அதிகாரத்தை இழந்து, வேறு வழியில்லாததால் அவர்கள் இங்கு வந்து இணைந்துகொண்டனர். கட்சி உட்பூசல்களால், எதிர்க்கட்சி கூட்டணி பலம் குன்றியிருந்ததும் இதற்குச் சாதகமாக அமைந்துவிட்டது. எனவே, இவர்களால் நாட்டில் ஏற்புடைய மாற்றம் எதுவும் நடக்கப் போவதில்லை, அதனால் மக்களுக்கு நன்மை விளையப்போவதும் இல்லை என்பது திண்ணம்.
2015 இல், ‘மக்கள் கூட்டணி’ உடைந்தபின் ‘பக்காத்தான் ஹராப்பான்’ தோன்றியது. பாரிசானுக்குப் பதிலாக மக்கள் நலன் பேணும் வகையில் இவர்கள் மாற்று அரசியலை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு, ஏமாற்றத்திலேயே முடிந்தது. இவர்களின் அரசியல் பயணம் எதிர்க்கட்சியை வலுப்படுத்துவதில் பலவீனமாகவும் தோல்வி முகமாகவும் இருக்கிறது. இதைவிட, அம்னோவிலிருந்து பிரிந்துவந்த மகாதீருடன் அவசர அவசரமாக சேர்ந்து, ஒத்துழைக்க முடிவெடுத்தது எந்த வகையில் பலனானது என்று தெரியவில்லை.
நஜிப் தலைமையிலான அம்னோ-பிஎன், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கோடு, மகாதீருடன் கூட்டு சேர்ந்தது ஒரு சந்தர்ப்பவாத அணுகுமுறையாகும். இதனால், சீர்கெட்டிருக்கும் நாட்டின் அரசியலமைப்பில் எந்தவொரு சீர்திருத்தத்தையும் செய்ய இயலாது. சந்தர்பவாத அரசியல் விளையாட்டில், ஹராப்பானைவிட மகாதீர் கைத்தேர்ந்தவர் என்றே சொல்ல வேண்டும். நாட்டின் முகான்மை எதிர்க்கட்சியான ஹராப்பானுக்குத் தலைமை ஏற்றிருப்பது போல் அவர் ஆளுமை செலுத்துவதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த சந்தர்பவாத அரசியல் கூட்டு, சாதாரண மக்களின் யதார்த்த வாழ்க்கையிலிருந்து பிரிந்து நிற்கும் மேல்தட்டு அரசியல்வாதிகளின் சதுரங்க ஆட்டமாகும். இந்த அரசியல் ஆட்டத்திலிருந்து மக்கள் ஒதுக்கப்பட்டே இருப்பர்; ஆக, சாதாரண மக்களுக்கு இதனால் நன்மை ஏதும் இல்லை, கடுமையான விளைவுகள் வேண்டுமானால் ஏற்படலாம்.
22 ஆண்டுகளாக பிரதமர் பதவில் இருந்த மாபெரும் அரசியல்வாதியான மகாதீருக்கு மக்கள் மத்தியில், மறக்க இயலாத பல வரலாற்று கதைகள் உண்டு. என்னதான் அவர் இன்று பல மாறுபட்ட காரியங்களைச் செய்தாலும், அன்று அவர் ஆட்சியில் மக்கள் அனுபவித்த காயங்களின் வடுக்கள் இன்னும் மறையாமல் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
அவர் ஆட்சி காலத்தின் போதே, மக்கள் உரிமையை அடகுவைக்கும் பல செயல்கள் நாட்டில் நடந்தன. கடுமையான சட்டங்களை உருவாக்கி மக்களை ஒடுக்கியது, நாட்டின் நீதித்துறையைச் சேதப்படுத்தியது, தனியார்மயக் கொள்கைகளை அறிமுகம் செய்தது, ‘பினாமி’கள் அதிகளவில் புழக்கத்தில் வந்தது என இன்னும் பல அவரின் தலைமைத்துவத்தின் கீழேயே நாட்டில் வலுபெற்றன. ஆக, இப்போது அவரைக் கொண்டே அவற்றையெல்லாம் சரிசெய்வோம் என்பது முற்றிலும் முரணான விஷயம் என்றே தோன்றுகிறது. மேலும், ‘எதிர்க்கட்சியின் அடையாளமாக’ , ‘புதிய நம்பிக்கை நட்சத்திரமாக’ மக்கள் மத்தியில் அவரை உலாவச் செய்வது, ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்குமான மக்கள் போராட்டத்திற்கும் மிகப் பெரிய அவமானமாகும்.
புத்ராஜெயாவைக் கைப்பற்ற, “மகாதீர்” ஒரு குறுக்குவழி என சிலர் எண்ணலாம். ஆனால், குறுக்கு வழி சில சமயங்களில் நம்மை இலக்கிலிருந்து திசை திருப்பிவிடும். மகாதீர் எதிர்க்கட்சியின் காவலன் அல்ல, மாறாக, அம்னோ-பிஎன் ஆட்சியில் தனது பாரம்பரியத்தையும் தன்னைச் சார்ந்தவர்கள் இழந்த அதிகாரத்தையும் மீட்க வந்தவர் மட்டுமே என்பதை நாம் உணரவேண்டும்.
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, மக்களை மேம்படுத்த திட்டம் ஏதும் இல்லாமல், ஆட்சியை மட்டும் கைப்பற்ற நினைப்பதால் மக்களுக்கு எந்தவொரு பலனும் இல்லை.
உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மலரச்செய்ய எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை. மக்கள் சக்தியை அடிமட்டத்திலிருந்து கட்டமைப்பதன் வழியே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, அடிமட்ட மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி; அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களாலும் மாற்றத்தை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையைக் கொடுத்து, தங்களுக்கான ஜனநாயகம், சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றுக்காக சுயமாகப் போராட மக்களைத் தயார்படுத்த வேண்டும்.
மாற்றத்திற்கான வழி மக்கள் கைகளிலேயே உள்ளது.
ஆம், மாற்றத்திற்கான வழி மக்களின் கைகளில்தான் உள்ளது. இன்று 92-ஆவது அகவையை எட்டும் துன் மகாதீரிடம் இல்லைதான்.
56 வயதில் இந்த ம்லையக நாட்டை ஆள முற்பட்ட மகாதீர், 78 வயது வரை அரசாட்சி புரிந்து ஓய்ந்த பின்னும் இவருக்கு இன்னும் அதிகார வேட்கை ஓய்ந்தபாடில்லை.
அதனால்தான் எந்த டத்தோஸ்ரீ அன்வாரை தன்னுடைய ராஜபாட்டையில் குறுக்கே வந்தார் என்பதற்காக அவரை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வல்லடியாக ஒதுக்கினாரோ அதே அன்வாருடன், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய அதிகார வேட்கையைத் தணித்துக் கொள்வதற்காக கொஞ்சமும் மனம் கூசாமல் கரம் கோத்துள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரேக் கட்சியோ அல்லது ஒரே அணியோ தொடர்ந்து ஒரு நாட்டை ஆள்வது ஜனநாயகத்திற்கு அழகல்ல;
எனவே, அடுத்தப் பொதுத் தேர்தல்வழி நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், இன்றைய நிலையில் அன்வார் – மகாதீர் அணி வெல்வது நல்லது. மகாதீரின் கடந்த கால அரசியல் மூர்க்கத்தனமானது. இருந்தாலும், இன்றைய நிலையில் ‘நம்பிக்கைக் கூட்டணி’யினர் அவருடன் கரம் சேர்வதில் தவறில்லைதான்.
ஆயினும், இது மக்களின் சிந்தனையில்தான் அடங்கியுள்ளது. எது எவ்வாறாயினும் துன் மகாதீருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்
செம்பருத்தி நேயன்
‘ஞாயிறு’ நக்கீரன்
013 -244 36 24.
மூன்றாம் உலகம் முதலாம் ஆக முடியும் ஆனால் அதற்க்கு எல்லா அறிவுகளிலும் தேற வேண்டும் -முடியுமா ? தலை மோதும் இந்த நாதாரிகள் இருக்கும் வரை முடியாது– துருக்கி ஐரோப்பிய கலாச்சாரம் கொண்டிருந்தது ஆனால் இப்போது எர்டோகான் நாதாரி அவனின் சர்வாதிகார புத்தியை காண்பித்து விட்டான்.
கைப்பற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் நடப்பில் உள்ளவர்கள் சாம, தான, பேத, தண்டம் அனைத்தையும் பயன்படுத்தி தக்கவைத்துக் கொள்ளுவார்களே!