தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்: நஜிப்பின் புதிய
இராஜேந்திரா நாடகம்
ஜீவி காத்தையா
தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும் அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன் நாடகம்.
இந்த நாடகத்தின் கதை தமிழ்ப்பள்ளிகளின் விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கை தயாரிப்பு சம்பந்தப்பட்டதாகும். நஜிப்பின் பரிந்துரையின் பேரில் கடந்த மே மாதம் அரங்கேற்றம் கண்ட இந்த ஆய்வு அறிக்கை தயாரித்தல் நாடகத்தின் கதாநாயகர் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரன். இவருடன் நான்கு துணை நடிகர்கள் இருக்கின்றார்கள். இந்நாடகம் ஓர் ஆண்டு வரையில் நடக்கும்.
இந்நாடகத்தில் நான்கு காட்சிகள் உண்டு. “கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகள், கற்றல் மற்றும் கற்பித்தல், மாணவர்களின் அடைவுநிலை மற்றும் புறப்பாட நடவடிக்கைகளின் தரம் ஆகியவையே அந்த நான்கு” காட்சிகள்.
தமிழ்ப்பள்ளிகளின் விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கையைத் தயாரிக்கும்” குழுவிற்கு தலைமை ஏற்றிருக்கும் டாக்டர் இராஜேந்திரன் கீழ்க்கண்ட இரு மிகப் பழமையான விவகாரங்கள் பற்றியும் குறிப்பிட்டார்:
1. பெரும்பாலான பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன.
2. பகுதி உதவி பெறும் பள்ளிகளாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பையும் பெறும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்தும் தமிழ்ப்பள்ளிகள் பற்றி கடந்த 54 ஆண்டுகளாக நடத்தப்படும் நாடகங்களில் வரும் பழைய காட்சிகள்தான்.
இப்பிரச்னைகளை “வெகு விரைவில் தீர்க்க முடியாது” என்று தீர்ப்பும் கூறிவிட்டார் இராஜேந்திரன்.
இப்பிரச்னைகள் தொடாராமல் இருக்க வேண்டுமானால் இவற்றின் மீது “விரிவான ஆய்வு மேகொள்ளப்படுவது அவசியம்”, என்று கூறிய இராஜேந்திரன், இந்த நீண்டகால ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படும் “முழு விபர அறிக்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்படுமேயானால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்”, என்று அவர் நம்புகிறார். ஆனால், அதை அவரால் உறுதிப்படுத்த முடியாது.
டாக்டர் இராஜேந்திரன் கண்களுக்கு தற்போது தென்பட்டுள்ள தமிழ்ப்பள்ளிக்கூடங்களைப் பீடித்துள்ள வியாதிகளைப் பரிசோதித்து சரியான வைத்தியத்தை அவரது மேல் வைத்தியர் நஜிப்பிடம் பரிந்துரைத்து அவரிடமிருந்து அதற்கான பதிலைப் பெறுவதற்குள் 14 ஆவது பொதுத் தேர்தலும் முடிந்து விடும் என்று நாம் நம்பலாம். ஏனென்றால் தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் ஆய்வுகள் நடத்துவதும், வாக்குறுதிகள் அளிப்பதும்தான் நாம் காணும் வரலாறு!
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு இரு நூற்றாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளிகளைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல. டாக்டர் இராஜேந்திரன் புதிதாக ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய புதிய வியாதி என்று ஏதும் தமிழ்ப்பள்ளிகளில் இல்லை. 1956 ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கையில் தாய்மொழிப்பள்ளிகளை அழிப்பதற்காக பரப்பப்பட்ட “இறுதிக் குறிக்கோள்” என்ற புற்றுநோய் கிருமிதான் தமிழ், சீனமொழிப்பள்ளிகளை அரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை அம்னோவின் துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் இன்றும் முழுமையாக ஆதரிக்கிறார். அம்னோவின் தலைவரும் பிரதமருமான நஜிப் ரசாக் வழக்கம்போல் அவரது நாடக பாணியில் “இல்லை” “ஆமாம்” என்கிறார். இது டாக்டர் இராஜேந்திரன் அறியாததல்ல. இதற்கு அவரின் வைத்தியம் எதுவாக இருக்க முடியும்? இதற்கு அவரிடம் வைத்தியமே இல்லை என்பதை கீழ்க்காணும் நாடகங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறலாம்.
மிகச் சிறிய நிதிதான் தேவை
1992: மலாயா பல்கலைக்கழகத்தில் 1992 ஆம் ஆண்டில் 2020 இலக்கை நோக்கி தமிழ்ப்பள்ளிகள் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் “தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களின் தரம்” என்ற தலைப்பில் உரையாற்றியவர் டாக்டர் இராஜேந்திரன்.
அக்கருத்தரங்கில் கொள்கை உரையாற்றிய அன்றைய அமைச்சர் ச. சாமிவேலு தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவது பற்றி அப்போதே பேசி விட்டார். “அரசாங்கத்தைப் பொறுத்தவரை நாட்டில் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த நிதியில் தமிழ்ப் பள்ளிகளை Bantuan Penuh பள்ளிகளாக மாற்றத் தேவைப்படும் நிதி மிகச் சிறிய ஒன்றே”, என்று கூறிய அமைச்சர், தொடர்ந்து போராடுவோம் என்றார்.
ஒன்றரை ஆண்டில் தமிழ்ப்பள்ளிகள் முழு உதவி பெறும்
2004: ஆகஸ்ட் 14, 2004 இல் மஇகா தலைவர் ச.சாமிவேலு வழங்கிய தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகள் அடங்கிய ஒரு மகஜரை பெற்றுக்கொண்டு, நாட்டில் இருக்கும் 376 தமிழ்ப்பள்ளிகள் ஏன் இன்னும் பகுதி உதவி பெறும் பள்ளிகளாக இருக்கின்றன என்ற காரணத்தைக் கண்டறிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர் ஹிசாமுடின், அந்த “376 தமிழ் பள்ளிகளை வரும் ஒன்றரை ஆண்டுகளில் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”, என்றும் கூறினார்.
ஹிசாமுடின் இதனைக் கூறி ஏழு வருடம், பதினொரு மாதத்திற்கு மேலாகி விட்டது. “ஒன்றரை வருடம்” என்னவாயிற்று?
சாப்பிடுவதற்குக்கூட வழியில்லை
2005: போராடுவோம் என்று 1992 இல் முஷ்டியை முறுக்கிய ச. சாமிவேலு 2004 இல் ஹிசாமுடினிடம் மகஜர் கொடுத்தார். அதன் பின்னர், மொத்தம் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டெம்பர், 2005 இல் இந்தியர்களின் அவலநிலையை முன்வைத்து தமிழ்ப்பள்ளிகளை அவர்கள் கட்ட முடியாது. அரசாங்கம்தான் கட்ட வேண்டும் என்று கூவிய ச. சாமிவேலு, மேலும் கூறினார்:
“பகுதி உதவி பெறும் பள்ளிகள் என்ற காரணத்திற்காக தமிழ்ப்பள்ளிகளை நிருமாணிக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகக்கூடாது.
இந்திய சமூகம் மிகவும் ஏழ்மையான நிலையிலுள்ள ஒரு சமூகம். பள்ளிகளைக் கட்டும் அளவுக்கு இச்சமூகத்திடம் மூலதனம் இல்லை. பாட்டாளிகளான இச்சமூதாய மக்கள் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். வயிறார சாப்பிடுவதற்குக்கூட அவர்களிடம் பணம் இல்லை. இந்நிலையில் எங்ஙனம் அவர்களால் பள்ளிகளைக் கட்ட முடியும்?”
சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம்
2007: “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற முழக்கத்தோடு ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் மார்ச் 27, 2007 இல் மலேசிய நாடாளுமன்றத்திற்கு எதிரணித் தலைவர்கள் புடைசூழ பேரணியில் சென்று தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் அரசாங்கப்பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கை அடங்கிய மகஜரை கல்வி அமைச்சரின் சார்பில் பெற்றுக்கொண்ட அமைச்சர் நஸ்ரி மலையைப் புரட்டி இதற்கானவற்றை செய்யப்போவதாக கூறினார்.
அடுத்த நாள், கல்வி அமைச்சர் ஹிசாமுடின் இக்கோரிக்கை மீது கருத்துரைக்கையில், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்ப்பள்ளிகள் அரசாங்கப்பள்ளிகளாக மாற்றப்படும். அதற்குச் சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம்”, என்றார்.
ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டன. சரியான நேரம் இன்னும் வரவில்லை.
பாகுபாடு காட்டப்படாது
2008: 12 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடப்பதற்கு இரு நாள்களுக்கு முன்னர் மார்ச் 6, 2008 இல் கோலாலம்பூரில் மஇகா பேராளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் நஜிப் தேசியப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் பாகுபாடு காட்டப்படாது என்று உறுதி கூறினார்.
தமிழ்ப்பள்ளிக்கு உதவ சிறப்புப் பிரிவு
2008: ச. சாமிவேலுவின் சோகக் கதையை முடிக்க களம் இறங்கினார் அன்றை துணைப் பிரதமர் நஜிப். “தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு உதவுவதற்கு கல்வி அமைச்சின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று ஜூலை 1, 2008 இல் அவர் அறிவித்தார்.
அதுமட்டுமல்ல. “தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் போக்குவரத்து மற்றும் ஹாஸ்டல் போன்ற தேவைகளை நிறைவு செய்வதையும் இச்சிறப்புக்குழு கவனிக்கும்”, என்றும் நஜிப் கூறினார்.
அனைத்தும் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்படும்
2008: நானிருக்க சிறப்புக்குழு எதற்கு என்ற தோரணையில் இஸ்லாம் ஹதாரியின் தந்தையும் பிரதமருமான அப்துல்லா படாவி ஜூலை 12, 2008 இல் மஇகாவின் 62 ஆவது பேரவையைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் “நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றம் செய்யப்படும்” என்று பேராளர்களின் பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார்.
நாட்டின் பிரதமர் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் அரசாங்கப்பள்ளிகளாக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார். அத்துடன் பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால்!
தமிழ்ப்பள்ளிகள் மோசமான நிலையிலா?
2008: பிரச்னையா? தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை மோசமானதா? யார் சொன்னது? இப்படி கேட்டவரும் அன்றைய கல்வி அமைச்சர் ஹிசாமுடின்தான்.
துணைப் பிரதமர் நஜிப் குறிப்பிட்ட கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளி மீதான சிறப்புக்குழு கல்வி அமைச்சர் ஹிசாமுடினின் தலைமயில் ஜூலை 24, 2008 இல் ஒரு கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் துணை அமைச்சர்கள் எஸ்.கே தேவமணி மற்றும் டி. முருகையா ஆகியோர் கலந்து கொண்டனர். அச்சிறப்புக்குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிசாமுடின், “தமிழ் தொடக்கப்பள்ளிகளில் காணப்படும் ஒட்டுமொத்த நிலவரம் மற்றவர்கள் கூறுவதுபோல் அவ்வளவு மோசமானதாக இல்லை என்று குழு கண்டறிந்தது” (“…the committee found that the overall situation at Tamil primary schools was not as bad as painted by some parties.”), என்று ஏமாற்றி விட்டோம் என்பதைப் பறைசாற்றும் பெரும் புன்னகையோடு கூறினார்.
அச்செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்த துணை அமைச்சர்கள் தேவமணியும் முருகையாவும் ஹிசாமுடினுடன் சேர்ந்து புன்னகை பூத்தனர். ஆனால், இக்கூட்டம் நடந்த 16 நாள்களுக்கு முன்பு இதே முருகையா “நாட்டிலுள்ள பல தமிழ்ப்பள்ளிகளின் நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
மேலும், அச்செய்தியாளர் கூட்டத்தில் ஹிசாமுடின் மூன்று பிரச்னைகள் பற்றி குறிப்பிட்டார்:
1. நிலம் பற்றிய பிரச்னை தீர்க்கப்படலாம் என்றால், பகுதி உதவி பெறும் பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவது குறித்து அரசாங்கம் சிந்திக்கும்.
2. நிலம் நமக்குச் சொந்தமானதாக இல்லை என்றால், முழு உதவி பெறும் பள்ளிக்கு இடமில்லை.
3. நிலம் தவிர, ஆசிரியர்கள் வழங்கல், பள்ளிகளின் தரம் உயர்த்தல் மற்றும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் போன்ற இதர பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டால்தான் தமிழ்ப்பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றம் காண முடியும். இது உடனடியாக நடக்காது என்பதுதான் ஹிசாமுடினின் கருத்து என்று கூறலாம். இதற்கு மாறான கருத்தை தேவமணியும் முருகையாவும் ஹிசாமுடின் முன் தெரிவிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயமாக நம்பலாம்.
அனைத்து பள்ளிகளும் சரிசமாக கண்காணிக்கப்படுன்றன, மீண்டும் நஜிப்
2011: செப்டெம்பர் 30, 2011 இல், “எனது அரசாங்கம் மக்கள் அரசாங்கம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். ஆகையால் நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளையும் சரிசம நிலையிலேயே நாங்கள் கண்காணித்து வருகிறோம்”, என்று பிரதமர் நஜிப் அறிவித்தார்.
இந்திய சமூகத்தை தமிழ்ப்பள்ளிகள் விவகாரத்தில் ஏமாற்றுவதற்காக அரசாங்க தலைவர்கள் கடந்த 54 ஆண்டுகளாக அரங்கேற்றியுள்ள நாடகங்கள் வரிசையில் அடுத்து இடம் பெறுவதுதான் இந்த “விரிவான மேம்பாட்டு அறிக்கை தயாரித்தல்” நாடகம்.
13 ஆவது பொதுத் தேர்தல்: இராஜேந்திரா நாடகம்
2012: 12 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் மஇகா பேராளர்களிடம் தேசியப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குமிடையில் பாகுபாடு காட்டப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த நஜிப், தமது மக்கள் அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளையுக் சரிசம நைலையிலேயே கண்காணித்து வருகிறது (ஒரு வேளை “கண்காணிப்பு” என்ற சொல்லுக்கு அவர் வேறு அர்த்தம் கொண்டிருக்கலாம்!) என்று 2011 இல் கூறிய நஜிப், மே மாதம் 2012 இல் தமிழ்ப்பள்ளிகளின் விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கையைத் தயாரிக்கும் பணிக்கு டாக்டர் இராஜேந்திரனை நியமித்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் நீண்டகால பிரச்னைகளைத் தீர்க்கும் எண்ணமே அரசாங்கத்திற்கில்லை என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். பிரதமரிலிருந்து கல்வி அமைச்சர் வரையில் எப்படி எல்லாம் மனச்சாட்சியின் உருத்தலின்றி இந்நாட்டு மக்களான இந்தியர்களிடம் கதை விடுகிறார்கள் என்பதை இதிலிருந்து தெளிவாகக் காணலாம். கல்விமானான டாக்டர் இராஜேந்திரன் தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்படவில்லை என்பதை நாம் நிச்சயமாக கூறலாம். அவருக்கும் அது தெரியும் என்றும் நாம் துணிவுடன் கூற முடியும்.
இந்தியர்களின் விலை மதிப்பற்ற வாக்குகளை எப்படியாவது பெற்றே ஆக வேண்டும் என்ற வெறியில் களமிறங்கியுள்ள அம்னோ தலைவர் நஜிப் இந்த விரிவான மேம்பாட்டு அறிக்கை தயாரிப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் நடிப்பதற்குத்தான் டாக்டர் இராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நஜிப்பால் நியமிக்கப்பட்ட இராஜேந்திரன் மேற்கொண்டிருக்கும் பணி வெறும் நாடகம்தான் என்பதை நாட்டின் கல்வி அமைவுமுறையில் “மாபெரும் மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்” என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் ஜூலை 16, 2012 இல் அறிவித்திருப்பது உறுதிப்படுத்துகிறது என்று கூறலாம். முகைதின் யாசின் அவரது மாபெரும் மாற்றங்கள் அடங்கிய 15 ஆண்டுத் திட்டத்தை அடுத்த மாதம் அறிவிக்கத் தயாராக இருக்கிறார்.
அடுத்த மாதம் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்படவிருக்கும் மாபெரும் மாற்றங்களில் தமிழ்ப்பள்ளிகள் சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்ப்பதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இராஜேந்திரன் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறுவாரா? அது உண்மை என்றால், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களை அந்த மாபெரும் மாற்றங்களில் சேர்த்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ஏன் உத்தரவிடவில்லை என்ற கேள்வி எழும்புகிறது.
கல்வி அமைச்சு இருக்கையில், தமிழ்ப்பள்ளிகளின் பிரச்னைகளைத் தீர்க்க பிரதமர்துறை ஏன் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். ஆம், இது முயற்சிதான். முயற்சி என்றால் ஏமாற்றும் திட்டம்.
“பொறுத்திருந்து ஏமாந்திட்டோம்” என்று ஒரு கவிதையின் வழி இந்தியர்கள் ஏமாற்றப்பட்டது பற்றி கரைந்துள்ளார் மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு. காக்கவைத்து ஏமாற்றி விடலாம் என்பது நஜிப் கூட்டத்தினரின் நீண்டகால திட்டம். அதில் ஓர் அங்கம்தான் இந்த இராஜேந்திரன் நாடகம்.
இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பு
பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பைப் பெரும் முயற்சியில் ஈடுபடப்போவதாக கடமை உணர்வுடன் கூறிய டாக்டர் இராஜேந்திரன், எவ்வாறான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார் என்று கூறவில்லை. அது பணம் மற்றும் நிலம் பற்றியதாகத்தான் இருக்கும்!
தேசியப்பள்ளிகளின் நிலங்கள் அனைத்தும் அரசாங்க நிலம். பெரும்பாலான சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள் கட்டப்பட்டுள்ள நிலங்கள் தனியார் அல்லது தனியார் அமைப்புகளுக்குச் சொந்தமானவை. அந்நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்காவிட்டால் பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகாளாக மாற்ற முடியாது. இது என்னவோ இமயமலையை இட மாற்றம் செய்வது போன்ற பிரச்னையாக கூறி வருகிறார்கள். இது ஒரு சாதாரண விவகாரம். வேண்டுமென்றால், மாற்ற முடியாது என்று கூறும் சட்டத்தையே மாற்றி விடலாம்.
பள்ளி அமைந்திருக்கும் தனியார் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். Land Acquisition Act 1960, section 3 இன் கீழ் பொதுக்காரியத்திற்காக அரசாங்கம் எந்த நிலத்தையும் கையகப்படுத்த முடியும். புத்ராஜெயா கோட்டையை கட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புள்ள தோட்டங்களை கையகப்படுத்திய அரசாங்கத்திற்கு ஓரிரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் என்ன பிரச்னை?
பணம்? கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும். அது குறித்துதான் இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பை இராஜேந்திரன் நாடுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. பணத்தை அரசாங்கம்தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால், தேசியப்பள்ளிகள் மற்றும் தேசியமாதிரி பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் தேசிய கல்வி அமைவுமுறைக்கு உட்பட்டவை. அவற்றுக்கு அரசாங்கத்தின் பொதுக்கணக்கிலிருந்து ஒதுக்கப்படும் நிதிகளில் பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்பது அரசமைப்புச் சட்டவிதியாகும். இதனை நாடாளுமன்ற தேவான் நெகாராவின் முன்னாள் தலைவரான ஜி. வடிவேலும் அரசமைப்புச் சட்ட வல்லுனர் சலீம் பரூக்கியும் தெளிவாக விளக்கியுள்ளனர்.
மேலும், ச.சாமிவேலுவின் கூற்றுப்படி மலேசிய பிரதமர்களாக இருந்தவர்களில் இந்தியர்கள் மீது எல்லையற்ற கருணை காட்டும் பிரதமர் நஜிப்தான். அவர் இருக்கையில், பணத்திற்கு என்ன பிரச்னை?
அனைத்து வகை பள்ளிகளும் சமமாக நடத்தப்படுகின்றன என்று மக்கள் அரசாங்கம் நடத்தும் நஜிப்பே கூறிவிட்டார்.
ஆக, தேசியப்பள்ளியையும் தமிழ்ப்பள்ளியையும் “சரிசம நிலையிலேயே” நடத்தும் பிரதமர் நஜிப் இருக்கையில், அதனை மேலும் சிறப்பாக டாக்டர் இராஜேந்திரன் தலைமையில் நடத்த பிரதமர் தாயாராக இருக்கையில், இராஜேந்திரன் அவரது பணியை வெகு விரைவில் முடிக்க விருப்பம் கொண்டிருந்தால் “வயிறார சாப்பிடுவதற்குகூட” பணம் இல்லாதவர்களைக் கொண்ட இந்திய சமூகத்திடம் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வாங்குவதற்கு பணம் கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு பாழாக்கப்பட்ட இந்திய சமூகத்தினரின் எதிர்காலத்தை மேலும் பாழக்கும் எண்ணம் கொண்ட ஆளுங்கூட்டத்தினருக்கு அவர் உதவக்கூடாது.
மேலும், இந்திய சமூகத்தினரிடம் பணம் இருந்தாலும் அவர்கள் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது தாய்மொழிப்பள்ளிகளை சம்பந்தப்பட்ட சமூகங்களின் தலையில் கட்டிவிடும் அம்னோவின் திட்டத்தை ஏற்றுக்கொள்வதாகும்.
அக்டோபர் 1, 2000 இல், அப்போதைய கல்வி அமைச்சர் மூசா முகம்மட் தாய்மொழிக் கல்வி சம்பந்தப்பட்ட சமூகங்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார். தற்போதைய கல்வி அமைச்சர் முகைதின் யாசினும் அதே சங்கை ஊதிக்கொண்டிருக்கிறார். நாங்கள் பள்ளிகளுக்கு எல்லாம் தருகிறோம். நிலத்தை அவர்கள் (சம்பந்தப்பட்ட சமூகத்தினர்) வாங்கிகொள்ள முடியாதா என்ற கேள்வியை சமீபத்தில் எழுப்பியுள்ளார். மேலும், அவர் கல்வி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதும் “I am for it” என்று அறிவித்தார். அதாவது அவர் தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற அம்னோவின் “இறுதிக் குறிக்கோள்” கொள்கையை ஆதரிக்கிறார் என்பதாகும்.
தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவதில் தீவிர ஈடுபாடுடைய அம்னோவின் அமைச்சர்கள் அதனைச் சாதிப்பதற்கு பல்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று தமிழ், சீனமொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்ய மறுப்பதாகும்.
எடுத்துக்காட்டு: மலேசிய திட்டங்கள் 6 லிருந்து 9 வரையில் தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் அரசாங்கம் செய்த நிதி ஒதுக்கீடு இது:
ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் விழிழுக்காட்டை கவனிக்க வேண்டும்.
9 ஆவது மலேசிய திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி விழுக்காட்டின்படி தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட தொகை வழங்கப்பட்டது:
தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30; சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50; தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95. கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதானா “நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளையும் சரிசம நிலையிலேயே நாங்கள் கண்காணித்து வருகிறோம்” என்பதின் அர்த்தம்? “சரிசம” நிலை என்றால் பாகுபாடின்றி ஒவ்வொரு மாணவருக்கும் ரிம26.48 ஒதுக்கப்பட வேண்டும்.
இம்மூன்று வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்நாட்டின் குடிமக்கள். இவர்கள் இந்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர்கள். அதில் பாகுபாடு கிடையாது. அவரிகளின் உரிமையில் மட்டும் பாகுபாடு!
10 ஆவது மலேசிய திட்டத்தில் பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு குறித்த தகவல் கிடைக்காததால் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் எழுத்து மூலம் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டிருந்தார்.
“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan, Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan perplanjaan ini.”
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் இதுதான்:
கேட்கப்பட்ட கேள்வி வேறு; கிடைத்த பதில் வேறு. இருப்பினும் பாகுபாடு இருப்பது தெரிகிறது. ஒரு வேளை, இவ்வாறு பாகுபாடு காட்டுவதைத்தான் நஜிப் “சரிசம” நிலை என்று இராஜேந்திரனிடம் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும், 10 ஆவது மலேசிய திட்டத்தில் தேசியப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை. ஏனென்றால், பாகுபாடு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து விடுமே!
இந்தப் படுபாதகச் சூழ்நிலையில் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியின்றி தமிழ்ப்பள்ளிகளை தத்தெடுக்கமாறு இந்தியர்களை கேட்டுக்கொள்ளும் பரிதாப நிலைக்கு ச. சாமிவேலு தள்ளப்பட்டுள்ளார். சிலர் அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு தாழ்ந்து விட்டனர். நாட்டிலுள்ள பல இந்திய டத்தோக்கள், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பள்ளிகளைக் காக்க வாரி வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் கோயில்கள் தமிழ்ப்பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆண்டவா! இது அம்னோவின் மெல்ல மெல்ல குரங்கைப் பிடிக்கும் – தாய்மொழிப்பள்ளி ஒழிப்பு – திட்டம் வேலை செய்கிறது என்பதைக் காட்டுகிறது.
சீன சமூகமும் அரசாங்கத்தின் இந்த பாகுபாடு கொள்கையால் பெரும் அவதியில் தத்தளிக்கிறது. சீனமொழி கல்விக்காக சீனர்கள் பில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளனர். ஆனால், அச்சமூகம் இப்போது சோர்வடைந்து வருகிறது என்று டாக்டர் குவா கியா சூங் எழுதியுள்ளார். எந்த ஒரு தனிப்பட்ட மனிதரும், ஒரு சமூகமும் அவர்களது பள்ளிகளை தாங்களே தொடர்ந்து நடத்த முடியாது என்பது அம்னோக்காரர்களுக்கு தெரியும். அதுதான் உண்மை என்பதை ஓர் ஆப்ரிக்க பழமொழி இப்படி கூறுகிறது: “ஒரு குழந்தைக்கு கல்வி போதிப்பது கிராமத்தின் பொறுப்பு.” இங்குள்ள இந்திய சமூகம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, குறைந்த நிதி ஒதுக்கீட்டின் வழி தமிழ்மொழிப்பள்ளிகளின் குரல்வலையை நெரிக்கும் அரசாங்கத்தை டாக்டர் இராஜேந்திரன் கையாள வேண்டும். இந்திய சமூகத்தை அல்ல.
நிலம் கொடுத்தாலும் பள்ளிக்கூடம் கட்டப்படுமா?
நிலம் இருந்தால் பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளி முழு உதவி பெறும் அரசாங்கப்பள்ளியாக மாற்றப்படும் என்று பரவலாக கூறப்படுகிறது. 1992 ஆம் ஆண்டிலேயே ச. சாமிவேலு “Bantuan Modal, Bantuan Penuh” என்ற பாகுபாட்டை களைவதற்கு “நிதி பெற்று நிலத்தை வாங்குவதாகும்” என்று கூறியுள்ளார். ஹிசாமுடினும் முகைதினும் அதைத்தான் கூறியுள்ளனர். நிலம் மட்டுமல்ல வேறு தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று ஹிசாமுடின் கூறியுள்ளது மேலே தரப்பட்டுள்ளது.
தேசியப்பள்ளிக்கு யார் நிலம் கொடுப்பது? ஏன் சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்கு சம்பந்தப்பட்ட சமூகத்தினர் நிலம் கொடுக்க வேண்டும்? இது ஒரு புறம் இருக்கட்டும்.
நிலம் கொடுத்தால், பள்ளியை நஜிப்பும் கல்வி அமைச்சர் முகைதினும் கட்டி விடுவார்களா? இந்த நிலவிவகாரத்தில் நடக்கும் தில்லுமுல்லுகளுக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
2008 ஆம் ஆண்டில், “தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களில் இயங்கி வரும் எட்டு தமிழ்ப்பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தப் பள்ளிகள் உள்ள நிலத்தை பள்ளிகளுக்கே மாற்றி விடுவதாக” அறிவித்தது.
பெரும்பாலான இந்தியர்கள் தமிழ்ப்பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக இருப்பதை விரும்புகின்றனர். அதன் காரணமாக இம்முடிவை அச்சங்கம் எடுத்தது.
ஆனால், அக்கூட்டுறவுச் சங்கம் வழங்கும் நிலத்தில் தமிழ்ப்பள்ளி மட்டுமே கட்டப்படும் என்ற உத்தரவாதம் வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் பேராக் மாநிலத்தில் புண்டுட் தோட்டத்தில் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு என்று கொடுக்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் வவாசான் பள்ளியைக் கட்டி விட்டது. இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது.
தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான 10 தோட்டங்களில் தமிழ்ப்பள்ளிகள் இயங்குகின்றன:
1. SJK (T) Tun Sambanthan, Bagan Pasir, Perak, முழு அரசாங்க உதவி பெறும் பள்ளி. அரசாங்கம் அச்சங்கத்திடமிருந்து பள்ளி அமைந்துள்ள நிலத்தை கையடக்கம் செய்தது.
2. SJK (T) Ladang Cairo, Mantin, மந்தின் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் வழங்கியது. கட்டடம் அச்சங்கத்தால் கட்டப்பட்டது.
3. SJK (T) Rinching, Selangor, அரசாங்கம் ரிம150,000 வழங்கியது. ஆனால் நிலம் மற்றும் கட்டடம் சங்கத்தின் பொறுப்பாயிற்று.
4. SJK (T) Ladang Dovenby, Perak, சங்கம் 4 ஏக்கர் நிலம் வழங்கியது. கட்டடம் அரசாங்கத்துடையது.
5. SJK (T) Tun Sambanthan, Sungai Siput, Perak, அரசாங்கக் கட்டடம். நிலம் சங்கத்திற்குச் சொந்தமாகும்.
6. SJK (T) Ladang Bukit Sidim, Kulim, Kedah, முற்றிலும் சங்கத்தின் சொத்து.
7. SJK (T) Sungai Choh, Rawang, Selangor, முற்றிலும் சங்கத்தின் சொத்து.
8. SJK (T) Ladang Seremban, Negri Sembilan, முற்றிலும் சங்கத்தின் சொத்து.
9. SJK (T) Ladang Soon Lee, Bagan Serar, Perak, முற்றிலும் சங்கத்தின் சொத்து.
10. SJK (T) Kampung Tun Sambanthan, Ayer Tawar, Perak, நிலம் சங்கத்திற்கு சொந்தமானது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் அதன் சிரம்பான் தோட்டத்தில் வழங்கிய நிலத்தில் தமிழ்ப்பள்ளி கட்டுமாறு நெகிரி செம்பிலான் கல்வி இலாகாவுக்கு கடிதம் வழி விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அந்த இலாகாவிடமிருந்து கிடைத்த பதிலில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஆட்சேபம் இல்லை; ஆனால் பள்ளியை அதன் ஆதரவாளர்தான் (நிலம் கொடுத்தவர்) கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற சம்பவங்கள் பல உண்டு என்று கூறப்படுகிறது. ஆக, இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது நிலம் கொடுத்து விட்டால் அரசாங்கம் தமிழ்ப்பள்ளியை கட்டி விடும் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமமாகும் என்பதாகும்.
மேலும், “பகுதி உதவி பெறும் பள்ளிகளாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பையும் பெறும் முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று டாக்டார் இராஜேந்திரன் கூறியிருப்பது நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கான அனைத்து தேவைகளையும் (நிதி, நிலம் போன்றவை) சம்பந்தப்பட்ட சமூகத்தினரே ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக்கொள்வதற்கு அச்சமூகம் தயாராக இருக்கிறது என்ற திட்டம் எங்கோ உருவாக்கப்பட்டு விட்டது. அதற்கு அரசாங்க ஆதரவு உண்டு. அதை செய்து முடிப்பதற்குத்தான் டாக்டர் இராஜேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகத்தை எழுப்பும் சூழ்நிலையை துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் உருவாக்கியுள்ளார்.
அரசாங்கம் தடையாக இருக்காது
கடந்த மார்ச் மாதம் 2012 இல் கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா “நாடுமுழுவதுமுள்ள 370 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட அவற்றை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு என்ன தடையாக உள்ளது”, என்று கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் நாட்டிலுள்ள 370 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளில் எந்தத் தமிழ்ப்பள்ளியும் முழு அரசாங்க உதவி பெறும் மாற்றுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது என்று கூறினார்.
கேள்வி என்ன? பதில் என்ன? அரசாங்கம் என்ன செய்தது? இவ்வளவு காலமாக அதனைச் செய்யாததற்கு தடையாக இருப்பது என்ன? இதுதான் கேள்வி.
துணை அமைச்சரின் பதிலிலிருந்து யாராவது தமிழ்ப்பள்ளிகளை முழு அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை அரசாங்கம் தடுக்காது. ஆனால், அரசாங்கம் அதனைச் செய்யப்போவதில்லை என்பது அவரது பதிலின் உள்ளடக்கம் என்று எண்ணத் தோன்றுகிறது.
மார்ச் மாதத்தில் வீ கா சியோங் இதனைக் கூறினார். மே மாதத்தில் இராஜேந்திரன் தமிழ்ப்பள்ளிகளின் விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கையைத் தயாரிக்கும்” குழுவிற்கு தலைமை ஏற்கிறார். இதில் வெற்றி காண்பதற்கு இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப் பெற முயற்சிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கர்ணா!
வீ கா சியோங்கின் “அரசாங்கம் தடையாக இருக்காது” என்ற பதிலுக்கும் இந்திய சமூகத்தின் முழு ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் ஈடுபடப்போவதாக இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கைக்கும் இடையில் ஏதோ முடிச்சு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது
டாக்டர் இராஜேந்திரன் மீது தீடீரென்று சந்தேகம் கொள்வது நியாயமல்ல. அவர் கர்ணனைப்போல் நேர்மையாகவராக, நியாயமானவரக, களங்கமற்றவராக இருக்கலாம். ஆனால் அவர் துரியோதனர்களுடன் சேர்ந்துள்ளார். இந்து மாமன்ற தலைவரான இராஜேந்திரனுக்கு நாம் இது குறித்து மேற்கொண்டு விளக்க வேண்டியதில்லை.
இச்சூழ்நிலையில் இந்திய சமூகம் தமிழ்ப்பள்ளிகள் விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். “பொறுத்திருந்து ஏமாந்திட்டோம்” என்று ஒப்பாரி வைப்பது இந்திய சமூகத்தின் பாரம்பரியத் தொழிலாகி விடக்கூடாது.
நாம் இந்நாட்டு குடிமக்கள். குடிமக்கள் என்ற முறையில் நாம் பெரும்பான்மையினர். குடிமக்கள் அல்லாதார்தான் சிறுபான்மையினர். பெரும்பான்மையினர் என்ற முறையில் நமக்கு சம உரிமைகள் உண்டு. பெரும்பான்மையினருக்கு உரிய அனைத்து கடமைகளும் நமக்கும் உண்டு. அவ்வாறே உரிமைகளும் சமமாக இருக்க வேண்டும். அச்சம உரிமைகளில் ஒன்று தாய்மொழிக் கல்வி கற்பதற்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் அளிப்பதாகும். தேசியப்பள்ளிக்கு வழங்கப்படும் அனைத்தும் தாய்மொழிப்பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் குடிமக்களையும் இன அடிப்படையில் பிரித்து இந்திய மலேசியர்களை சிறுபான்மையினர் என்று முத்திரையிட்டு பிச்சை எடுக்க வைத்திருக்கிறது. பிச்சை எடுத்து பிழைப்பதற்காக அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் உருவாக்கியுள்ளனர். அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு குடிமக்களின் உரிமைகளை அடகுவைத்து மெட்ராஸ் ஆட்டோக்காரர்களைப்போல் அரசாங்கத்திடம் “பாத்து குடுங்க சார்” என்று கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கோரிக்கைகள் உருவாக்குவதற்குத் தகுதியான தலைவர்களையும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் அடையாளம் காண்கின்றது. அப்படி அடையாளம் காணப்பட்டவர்கள் புத்ராஜெயாவில் குவிக்கப்படுகின்றனர். அவர்களின் மூலம் அரசாங்கம் “பாத்து குடுங்க சார்” கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நடித்து, மக்களை நம்ப வைத்து, பொறுத்திருக்க வைத்து, இறுதியில் நாமம் போட்டு விடுகிறது. இராஜேந்திரனின் தமிழ்ப்பள்ளிகளுக்கான விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கை தயாரிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்று நாம் கருதினால் அது தவறாகாது.
நாம் யார், புரிந்ததா?
மூன்று நாள்களுக்கு முன்பு (ஜூலை 17, 2012) பினாங்கில் ஒரு கருத்தரங்கில் பங்கேற்க இஸ்லாமிய தத்துவஞானியும், சிந்தனையாளரும், ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான தாரிக் ரமதான் (Professor of Contemporary Islamic Studies, Oxford University) மலேசியா ஒரு பல்லின நாடு. அது பல பண்பாடுகளையும், பல சமயங்களையும் கொண்ட ஒரு சமுதாயம் என்று கூறினார்.
“ஆனால், ஒவ்வொரு குடிமகனும், அவர்களின் தோற்றம் அல்லது அவர்களின் சமயம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல், சரிசமமாக நடத்தப்பட வேண்டும்”, (“But every citizen, no matter what their origin or religion, should be treated equally.”)என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் “ஏதோ நான் சிறுபான்மை இனத்தவன் என்று எனது குடியுரிமை பற்றி பேசாதீர். நான் ஒரு குடிமகன், உங்களுக்குப் புரிந்ததா? சமமான குடிமகன் என்றால் எனது வரலாறு பற்றியோ, எங்கிருந்து வந்தேன் என்றோ என்னைக் கேட்காதீர், ஆனால் ஒன்றாக நாம் எங்கே செல்கிறோம் என்று கேளுங்கள்”, (“Don’t talk about my citizenship as if I am a minority. I am a citizen, you get it? Equal citizen means don’t ask me about my history or where I come from but where we are going together.)என்று பேராசிரியர் தாரிக் ரமதான் அடித்துக் கூறினார்.
நாம் அனைவரும் கவனத்தில் எடுத்துக்கொண்டு பின்பற்றி செயல்பட வேண்டிய மிகச் சிறந்த ஆலோசனை. நமது கல்விமான் இராஜேந்திரன் அவரின் தமிழ்ப்பள்ளிகளுக்கான விரிவான மேம்பாட்டு நடவடிக்கை அறிக்கையைத் தயாரிக்கும் வேளையில் இதனைக் கவனத்தில் கொள்வார் என்று நம்புவோம். ஆனால் நாம் ஏமாந்து விடக்கூடாது.
———————————————————————————————————————————————————————————————–
நெஞ்சம் கசிகிறது…….
உண்மைதான் ஐயா இது தேர்தல் நேர கூத்துதான். தமிழ்ப் பள்ளி புதிய கட்டடம், இணைக்கட்டடம் கட்டுவது சரிதான் மகிழ்ச்சி.ஆனால் அந்த பள்ளிகளுக்கு நிலப்பட்டா இதுவரை கொடுக்கப்படவில்லையே அரசு விரும்பினால் எந்த நிலையிலும் தேசிய பள்ளியாக மாற்றம் செய்யலாம். பள்ளிகட்டி கொடுக்கும் போது நிலப்பட்டாவும் சேர்த்து கொடுக்க வேண்டியது தானே ஏன் இந்த ஓரவஞ்சனை. சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் அரசு 15 தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனைப் படைத்து உள்ளது. மத்திய அரசு இதுவரை எந்த தமிழ்ப் பள்ளிக்கும் நிலபட்டா வழங்கவில்லை….
seerian andy அவர்களின் “சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் அரசு 15 தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனைப் படைத்து உள்ளது. மத்திய அரசு இதுவரை எந்த தமிழ்ப் பள்ளிக்கும் நிலபட்டா வழங்கவில்லை” என்றுக் குறைப்பாடாகவும், குற்றச் சாட்டாகவும் சொல்லுமளவிற்கு உள்ளதே! இதற்க்கு மஇக வின் இப்போதைய பதிலென்ன? வரும் பொதுத் தேர்தலுக்கு முன் மக்களுக்கு என்னச் சொல்லப் போகின்றார்கள்; என்ன விளக்கங்கள் கொடுக்கப் போகின்றார்கள். அவசியம் கொடுக்கத்தான் வேண்டும்!.
பிற எல்லாவற்றையும் போலவே இதுவும் (இந்த அவல நிலையும்) நம்ம கடந்தகால அவல வரலாற்றில் இணைத்துக்கொள்ளப்படும்…! தமிழனாய்ப் பார்த்து தூக்கத்திலிருந்து விழிக்காவிட்டால் அவனை இந்த தூக்கத்திகிருந்தும் துக்கத்திலிருந்தும் தட்டியெழுப்ப முடியாது..மாறாக இன்னும் பல ‘இந்த’ மாதிரி டாக்டர்களுக்கு ‘தீனி’ போடவே முடியும்.
1. தமிழ்ப் பள்ளிகளுக்குப் போராட்டங்கள்; பள்ளிகளின் உரிமைகளைக் காக்கப் போராட்டங்கள்; காலம் காலமாய் தோட்டங்களில் குடிருந்தவர்கள் மேம்பாட்டுக்கு திட்டங்களுக்காக கட்டாயமாக வெளியேற்றப்படும் போது போராட்டங்கள்; அடிப் படை உரிமையான பொதுச் சேவைத் துறையில் வேலைவாய்ப்புக்காகவும், மேலும் கல்விக்காகவும் நடத்தப் படும் அவலங்கள்; இவையெல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளிகள் வைக்க வேண்டுமென்றால் நம் மக்கள் தேசிய அளவில் ஒரு வலுவான வாக்கு வங்கியைக் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொண்டு வலுவான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு தேசியளவில் நம் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக மாறவேண்டும்; அப்போதுதான் நமக்கு நியாயங்கள் கிடைக்கும். 2. நாடு சுதந்திரமடைந்த இத்தனைக் காலங்களாகியும் இதுநாள் வரை இந்த அடிப்படை உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதிலும், வளர்த்துக் கொள்வதிலும் நாம் கொஞ்சமும் அக்கறைக் காட்ட வில்லை; அதன் பலன்களைத்தான் இன்று அறுவடைகள் செய்துக் கொண்டிருக்கின்றோம்; இனிமேலாவது விழித்துக் கொள்வோம்; நமக்கு கொஞ்சம் புத்தியும் வரட்டும். நன்றேச் செய்வோம் அதையும் இன்றேச் செய்வோம். அருகிலுள்ள தபால் நிலையம் செல்லுங்கள்; வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்; மேலும் வாக்காளர்களகாகக் பதிவுச் செய்துக் கொள்வதற்கு ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமனறத் தொகுதி அலுவலங்களில் இந்த உரிமைகள், வாய்ப்புக்கள் வழங்கப் படுகின்றன. நாளைய நம் பிள்ளைகளின் வருங்காலத்தை நினைத்துச் செயல்படுவோம்; உடனேச் செய்வீர்களென்று நம்புகின்றேன்!.
அய்யா ஜி வி காத்தையா ஒரு நடமாடும் ஆய்வியல் ஊடகம்..
இந்த சிறப்பான கட்டுரை படைத்த அவருக்கு நல்வாழ்த்துகள்.
ஆங்கிலத்தில் சரளமாக எழுதும் வல்லமை கொண்டவர், இந்தக்கட்டுரை அவர் ஆங்கிலத்திலும் எழுதி தமிழ் பத்திரிகைகளில் ஆங்கிலத்திலே போட வேண்டும்.காரணம் இதை பிரதமருக்கோ கல்வி அமைச்சருக்கோ கொண்டு செல்லும் திராணி கமலநாதனுக்கோ ராஜேந்திரனுக்கோ அல்லது பிரதமர் துறையில் ஆங்கிலமாக்கி கொடுக்க எந்த சுப்பனுமில்லை !
அறிக்கை, ஆய்வு , உருமாற்றம் , நீலத்தாள், மஞ்சள்தாள் என்று கலர் போட்டு பதவிக்கும் பகட்டுக்கும் பேரம் பேசும் ஆ ஆ ஆசாமிகள் கூட்டம்தான் பிரமதரை ஏமாற்றிவருகிறது. பாவம் நமது பிரதமர் வெளுத்தது எல்லாம் பால் என்று கள்ளை கக்குகிறார் அதில் இந்தியர் தலைவர்கள் காலத்தை ஏப்பமிட அரசியல் நடத்துகின்றனர்.
எனக்கு ஒரு சந்தேகம்! ஒரு வேளை மலேசிய இந்து மா மன்றம்தான் இந்தியர்கள் இந்துக்கள் மத மாந்தன் நிலை என்று எல்லாத்தையும் அதன் தொடர்பு அரசியல் நாடகத்துக்கு கதையும் கதாநாயகனும் BN நை காப்பாத்தும் என்று பிரதமர் தப்புக்கணக்கு போட்டுவிட்டாரோ ?
அய்யா ஜி வி காத்தையா கதையை பார்த்தால் எதோ ஒரு எமதர்மன்
செய்யிறேன் என்று தமிழின் தமிழ்ப்பள்ளியின் தமிழனின உயிரை கொத்தி கொதறிக்கொண்டு இருக்கான் போல உணர்கிறேன்?
தனித்தமிழன் இனத்தையும் மொழியையும் அழிப்பதற்கு இந்த நாட்டு அரசியல் சியால் அநியாயக்கார்கள்தான் காரணம் என்றும் தெரிகிறது.
ராஜேந்திரன் அரசியலில் இல்லாவிட்டாலும் இது ஒருவகை அரசியல் அஜரகம் அல்லது அக்கப்போர் அரசியலாகிறது என்பது தெளிவு. தமிழ் மொழியில் தமிழ்ப்பள்ளிகளில் DLP புகுத்திய புத்திசாலியும் இவர்தான் .சீடிக் நிதி சமூக முதலீட்டராளரும் இவர்தான் . தமிழ்ப்பள்ளிகளின் கட்டட கலைஞரும் இவர்தான். ஏறக்குறைய சாமிவேலு போல கடைசியில் எல்லாத்தையும் அரேசியல்தன கல்லாப்பெட்டியில்
சுயப்பூட்டு போட்டு ஏய்ம்ஸ் போல ஏப்பம்தான் என்ற பயம் வந்துவிட்டது.
ஜி வி காத்தையாவின் கால் தூசிக்கு ஆய்வு தரமிலா தரவிலா பல முனைவர் முனிவர்களால் இந்த சமுதாயம் ஏமாந்தது போதும்.
சாதார்ணவர்களிடம் சாமிவேலு ஏமாந்தது போல சுப்பிரமணியமும் ஏமாறுவது இந்த ராஜ ராஜ சோழனிடம்தான் என்பது நிஜமாகும் நிழற்படம் அட்டகாசமாக எரியும் நாள் வரும்.
கோட் கோடியா தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசு கொடுத்து விட்டது ஆனால் எத்தனைனைப்பள்ளிகள் 100 % விழுக்காடு முழுமைப்பெற்றது என்ற அறிவிப்பு இது வரை இல்லை ? அது சரியாக இருந்தால் டல்ப் நடத்த ஒரு தமிழ்ப்பள்ளியும் DLP கு தகுதி இல்லாமல் இருக்கும் கேவலம் ஏன்?
சாப்பிட்டேன் ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் ஒருத்தரையும் காணோம்? சிறப்பாக உள்ள 45 பள்ளிகளுக்கு மாட்டும் DLP யாம் மற்ற மாணவர்களும் அவர்களுக்கான சமசீர் கல்வியும் பெற்றோர்கள் முடிவாம் ! மண்ணாங்கட்டி தமிழியல் முனைவர்கள்.
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
தமிழ் பள்ளிகளின் அரசாங்க மானியங்கள் தானை தலைவனின் ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சில் நமது அம்மையார் ஒருவர் உயர் பதவியில் இருக்கையில் லட்ச்சம் லச்ச மக திசை திருப்பிவிட பட்டதே அதை யாரும் கண்டு கொள்ளவில்லையே !! கடவுள் வரம் கொடுத்தாலும் ! பூசாரி அதை சுருட்டி விடுகிறார் ! கடவுளின் பெயராலும் ! கல்வியின் பெயராலும் ! பெறப்படும் மானியங்கள் நீதி , நேர்மை , நாணையத்துடன் அதை பெறுபவர்கள் நடந்து கொள்ளும் வரை நமது தமிழ் கல்வியின் அவலமும் ! நம் சமுதாயத்தின் அவலமும் ! கேள்வி குறிதான் !! நாடகம் என்றே வைத்து கொள்வோம் ! நமக்காக தானே எழுத பட்டது ! இதன் படைப்பாளர் கள் நன் முறையில் அரங்கேற்றுகிறார்களா என்று நாம் தானே கண்காணிக்க வேண்டும் ! ராமன் ஆண்டாள் என்ன ! ராமணன் ஆண்டாள் என்ன என்று ! நடப்பது அனைத்தும் தானாக நடக்கும் என்று சமுதாயம் கண் மூடி கொண்டு இருந்தால் !! பொழுது தினமும் விடியும் !! நமது சமுதாய விடியல் ??????????.
1. “தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும்” – முக்ரீஸ் அவர்களின் பொறுப்பற்ற அறிக்கை. இதற்காக மஇக இவரை சாடியிருக்கக் கூடாது; கடும் கண்டனம் செய்திருக்க வேண்டும்; தமிழ்ப் பள்ளிகள் இருக்க வேண்டுமா இல்லையாவென்பதை ஆட்சிப் பொறுப்புக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள் பேசவேக் கூடாது. தமிழ் சீன பள்ளிகளின் வரலாற்றைக் கண்டவர்கள் இப்படி பேசமாட்டார்கள். இவரோடுச் சேர்ந்து முகைதீன் அவர்களும் தான் கல்வி அமைச்சராகயிருந்தாக் காலத்தில் அன்று நடந்துக் கொண்டதை பார்த்தால் இவர்களையெல்லாம் மன்னிக்கவேக் கூடாது. ஒருவர் முன்னாள் கேடா மாநிலத்தின் முதல்வர்; மற்றவர் ஜோகூர் மாநிலத்தின் முதல்வராகவும் முன்னாள் துணைப் பிரதமராகவுமிருந்தவர். 2. சுமார் 1000 ஆண்டுகளுக்கு இன்றைய கேடா மாநிலத்தை அன்று சோழ மன்னர்கள் ஆண்டார்கள்; இதேக் காலக் கட்டத்தையும் தாண்டி இன்றைய ஜோகூர் மாநிலத்திலும் நம் மன்னர்கள் ஆண்ட வரலாறுகளும் கண்டுப் பிடிக்க பட்டுள்ளது. இவர்கள் வரலாற்றை கொஞ்சம் தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் பேசியிருப்பார்களா? மேலும் முக்ரீஸ் அவர்கள் தங்களின் முன்னோர்களின் பின்னணியை எட்டிப் பார்ப்பது நன்று!
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் எந்தக் காலத்திலும் மூடப்படமாட்டாது. தமிழர்களின் வாக்குகளை இழக்க BN தயாராயில்லை. ஆனால், அம்னோ வினர் நமது அரசாங்க கஜானாவை காலிசெய்துவரும் நேரங்களில் மற்ற இனத்தவரோ, அல்லது கட்சியினரோ தலையிடக்கூடாது. ஆகவே, இவர்களை திசை திருப்பவே அவ்வப்போது இந்த தமிழ்ப்பள்ளி பிரச்சனைகளை, பள்ளிகளில் தமிழ் மாணவர்களை சீண்டுவதும், லாக்கப்புகளில் தமிழ் இளைஞர்களை அடித்துக் கொல்வதும், போலீசார் குண்டர் தனத்தினத்திற்கு உறுதுணையாய் இருப்பதும், இடைவிடாது நடந்து கொண்டிருப்பவை.
1. “தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும்” – இது முக்ரீஸ் அவர்களின் பொறுப்பற்ற அறிக்கை. இதற்காக மஇக இவரை சாடியிருக்கக் கூடாது; கடும் கண்டனம் செய்திருக்க வேண்டும்; தமிழ்ப் பள்ளிகள் இருக்க வேண்டுமா இல்லையாவென்பதை ஆட்சிப் பொறுப்புக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள் பேசவேக் கூடாது. தமிழ் சீன பள்ளிகளின் வரலாற்றைக் கண்டவர்கள் இப்படி பேசமாட்டார்கள். இவரோடுச் சேர்ந்து முகைதீன் அவர்களும் தான் கல்வி அமைச்சராகயிருந்தக் காலத்தில் அன்று நடந்துக் கொண்டதை பார்த்தால் இவர்களையெல்லாம் மன்னிக்கவேக் கூடாது. ஒருவர் முன்னாள் கேடா மாநிலத்தின் முதல்வர்; மற்றவர் ஜோகூர் மாநிலத்தின் முதல்வராகவும் முன்னாள் துணைப் பிரதமராகவுமிருந்தவர். 2. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் இன்றைய கேடா மாநிலத்தை அன்று சோழ மன்னர்கள் ஆண்டார்கள்; இது வரலாற்று உண்மை. இதேக் காலக் கட்டத்தையும் தாண்டி இன்றைய ஜோகூர் மாநிலத்திலும் நம் மன்னர்கள் ஆண்ட வரலாறுகளும் கண்டுப் பிடிக்க பட்டுள்ளது. இவர்கள் வரலாற்றை கொஞ்சம் தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பொறுப்பில்லாமல் பேசியிருப்பார்களா? மேலும் முக்ரீஸ் அவர்கள் தங்களின் முன்னோர்களின் பின்னணியை எட்டிப் பார்ப்பது நன்று!
3. தமிழ் பள்ளிகளுக்கு உண்மையானப் பாதுகாப்பென்பது நம் மொழியை அரசு அதிகார பூர்வமான மொழியாக அங்கீகாரம் செய்ய அரசிடம் நாம் கோரவேண்டும். இந்தக் கோரிக்கையை மஇக அமைச்சரவையில் வைக்கலாம் அல்லது வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன் கொள்கையளவில் தேசிய முன்னணி இதை ஏற்றுக் கொள்ள பரிந்துரைச் செய்யலாம். விடுதலைப் போராட்டத்திற்கு முன்பே இந்தக் கோரிக்கையை தேச, சுதந்திரத் தந்தையான துங்கு அவர்களிடம் நம்மவர்கள் கோரிக்கையாக வைத்து அங்கீகாரமும் பெற்றிக்க வேண்டும். அன்று இதை பற்றி அவர்கள் எண்ணவில்லை; ஆனால் அன்றே துங்கு அவர்களும் மலாய்க்கார அல்லாதார் சமுகத்தின் நியாயமானக் கோரிக்கையை ஏற்று தனது தேர்தல் கூட்டணி அறிக்கையில் சுதந்திர மலாயா நாட்டில் தமிழ் சீனப் பள்ளிகள் தொடர்ந்திருக்குமென்றும், சுதந்திரமான வழிப் பாடுகளுமிருக்குமென்றும் உறுதியளித்தார். தன் மறைவுக்கு முன் துங்கு அவர்கள் தன் கைப் பட STAR தினசரிப் பத்திரக்கையில் எழுதியக் கட்டுரையில் மலாய்க்காரரல்லாத சமூகத்திடம் என்ன வேண்டுமென்றுக் கேட்டப் போது, சுதந்திர நாட்டில் அவர்கள் தங்கள் தாய் மொழியைத் தொடர்ந்துப் படிக்கவும், சுதந்திரமாக வழிப் படவும் வேண்டுமென்றக் கோரிக்கையை வைத்தாக எழுதியுள்ளார். அதனால்தான் நாட்டின் முதலாவது தேர்தல் கூட்டணி அறிக்கையில் தாய் மொழிக் கல்வியும், சுதந்திர வழிப் பாடும் தொடர்ந்திருக்கு மென்ற உத்தரவாதத்தையும் கொடுத்தார். இந்த அடிப்படையில் நம் தாய் மொழிப் பள்ளியை மூடச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. இந்த முதல் தேர்தல் கூட்டணியின் உறுதிமொழியை இவர்கள் படித்திருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள். பேசுவதற்கும் தைரியமிருக்காது. ஆதலால் தமிழ் பள்ளிகளென்பது தேசத் தந்தை அவர்களால் நமக்கு கிடைத்த சுதந்திர பரிசு. எந்தப் பரிசுகளும் நமக்கு சும்மாக் கிடைப்பதில்லை. அன்றைய மலாயா நாட்டின் பாதுகாப்புக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடினோம்; உயிர்களும் நீத்தோம். அந்தப் பரிசுகள்தான் இன்றைய தமிழ்ப் பள்ளிகள், நம்முடைய சுதந்திரமான வழிப் பாட்டுத் தளங்கள்!.
ஹாஹா வருது வருது
ரொம்ப அதிகமாகத் தாங்குவதால் ‘கமல்’இன் இடம் இவருக்கு தரப்படலாம் என்று பறவை சொல்கிறது…
ராஜா ராஜா
சோழன் ஆண்டான்
என்றால் கடார மாநிலத்தை தமிழனுக்கு எழுதி வைத்து விடுவார்களா !! நாம் இன்று இந்த நமது சொந்த மண்ணில் போராடி கொண்டிருப்பது ,சஞ்சியில் வந்து , வெள்ளையர்களின் கீழ் தோட்டங்களை நம்பி , இலவச இருப்பிடம் ,இலவச தமிழ் கல்வி , தமிழ் பள்ளிக்கூடம் , கோவில்கள் ,என்று எந்த எதிர்கால திட்டமும் ,எதிர்கால பயமும் இன்றி வாழ்ந்து ,நாட்டு மேம்பாட்டு திட்டம் என்று தமிழனை அல்லல் பட வைத்து ,தமிழனின் வாழ்வாதாரத்தை பறித்துக்கொண்டு பாராமுகமாக இருக்கும் ஆளும் அரசாங்கத்திடம் !! தமிழ் பள்ளிகளை மூட சொல்ல எவனுக்கும் உரிமை இல்லைதான் !! ஏன் எந்த தமிழனுக்கும் உரிமையில்லைதான் !! ஆனால் இந்த நாட்டில் நீர் பாய்ச்சி , உரமிட்டு வளர்க்க பட வேண்டிய தமிழுக்காக எத்துணை தமிழன் போராடுகிறான் ! தமிழின் பயன் பாடு நாட்டில் எத்துணை விழுக்காடு இருக்கிறது !! தமிழன் உணவகம் திறந்தாலும் ,பெயர் பலகையில் தமிழை காணவில்லை ! ஆனால் தமிழனை நம்பி வியாபாரம் தொடங்குகிறான் !! சாமீ என்னை ,என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளான் தமிழன் !! பூஜை பொருட்க்கள் விற்கும் தமது கடையில் !! ம . இ . கா . வில் உயர் பதவியில் உள்ளவன் !! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கினாள் போதாது அதை செயல் படுத்த வேண்டும் !! தமிழனே தமிழை புறக்கணிக்கிறான் !! அடுத்தவனுக்கு எதற்கு வேர்க்க வேண்டும் உன் தமிழுக்கு அங்கீகாரம் வழங்க !! கப்பல் மூழ்காமல் இருக்க ஓட்ட்டையை அடைப்போம் !! கடலை குறை சொல்வதை விட்டு விட்டு !!
எங்க போச்சு இந்த மானகெட்ட மா இ கா ?
s.maniam wrote on 8 ஜூலை.- 1. சோழன் ஆண்டானென்றால் நமக்கு யாரும் எதையும் எழுதிவைக்க வேண்டாம். அந்த வரலாற்றிற்கு அங்கீகாரம் வேண்டும். உலக அங்கீகாரம் வேண்டும். அதுதான் நல்ல அரசிற்கு அழகு. அந்த நல்லரசு இப்போதில்லை. வரலாறுகள் நமக்கு நல்லப் பாடங்களை போதிக்கின்றன. அதை மட்டும் நாம் உணர்ந்து காலத்தோடு செயல்பட்டால் போதும்; நாளைய வாழ்க்கையை நாம் நன்றாகச் செப்பனிட்டுக்கொள்ளலாம். இன்றைக்கு இதுதான் நம்மிடமுள்ள பெரியக் குறைபாடு; உணர மறுக்கின்றோம். ஏற்கவும் மறுக்கின்றோம். 2. இங்குமட்டுமில்லை, உலங்கெங்கிலும் தமிழை வளர்க்க வேண்டுமென்றால் முதலில் நாம் தமிழர்களென்ற உணர்வு இங்கு மேலோங்க வேண்டும். தமிழகத்திலுள்ள தமிழ்ச் செம்மொழி மையம், தமிழ் ஆர்வலர்கள் அந்த வேலையைச் செய்வார்கள். நாம் நம் பங்கிற்கு இங்கு நாளிதல்களையும், மற்றத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் அதிகமாக வாங்கிப் படிக்க வேண்டும். கடந்தக் காலங்களிலும் இப்போதும் தமிழ்ப் பத்திரிக்கைகள் நமக்கு செய்த நல்லப் பணிகள் ஏராளம்; நன்றியில்லாத நம்மவர்கள் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்த நன்றிகளை திருப்பிச் செய்ய வில்லை; வலிமையானத் தமிழ்ப் பத்திரிக்கைகள் கொண்ட இனம் எப்படிச் சிறப்பாக வாழுமென்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வலிமைகள் வளர்ச்சிகள் நம்மைத் தேடி வரும். ஆதலால் பத்திரிக்கை உலகைப் பொறுத்த மட்டில் நாம் செய்நன்றிக் கொன்றவர்கள். 3. இந்த நல்ல நேரத்தில் மஇக வைப் பற்றி இங்குப் பேச வேண்டாம். முன்னாள் மஇக தலைவர் டான் ஸ்ரீ மாணிக்க மறைவிற்கு பின்பு, நம்மைப் பிடித்த பீடை இன்னும் நீங்க வில்லை; இனிமேலும் நீங்காது; நாம்தான் இனிமேல் மாற்று வழியைத் தேட வேண்டும். மருத்துவர் நோயாளிகளிடம் அடிக்கச் சொல்லுவார் – ஆரோக்கியமாக வாழ, மன அழுத்தத்திலிருந்தும், உளைச்சலிலிருந்தும் நீங்க வேண்டுமென்றால் நமக்கு துன்பம் தரும் எண்ணங்களை நினைக்க வேண்டாம். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்களென்று “மருந்தும் மாத்திரைகள் செய்யும் வேலைகளை நல்ல எண்ணங்கள் செய்யும்”. ஆதலால் அவர்களைப் பற்றி இப்போது பேசாமலிருப்பது நமக்கு நன்று. 4. நாம் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஓரளவிற்க்கு நாளை நமக்கு நல்லத் தீர்வுகள் வேண்டுமென்றால், அதற்கான சிறந்த வழிகளை என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை மட்டும் அடுத்துச் சொல்லுகின்றேன். அதை முதலில் கேளுங்கள்!