சென்னை: ஊழலில் தமிழகம் பீகாரை முந்திவிட்டது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
கேளிக்கை வரிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் கூறியிருப்பதாவது,
வரி
இரட்டை வரிவிதிப்புக்கு எதிரான போராட்டம் விரைவில் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஜிஎஸ்டிக்கு மேல் சினிமாவுக்கு வேறு எந்த கூடுதல் வரியும் விதிப்பது இல்லை என்று கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.
பினரயி விஜயன்
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலை காப்பாற்ற வேறு எந்த புதிய வரிகளையும் விதிக்காமல் இருக்க மாநில நிதி அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார் கேரள முதல்வர் பினரயி விஜயன்.
கர்நாடகா
கர்நாடகா மேலும் ஒருபடி மேலே போய் சினிமா துறைக்கு உதவியுள்ளது. தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களும் சினிமா தொழிலுக்கு சிறந்தவற்றை செய்கின்றன.
தமிழக அரசு
தமிழக அரசு மட்டும் தான் சினிமா துறைக்கு 30 சதவீத வரி விதித்து வதைக்கிறது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு. இந்த ஆட்சியில் சினிமா துறை டார்ச்சர் மற்றும் ஊழலை பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
பதட்டம்
ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியும் பதட்டமாக உள்ளது. இந்த பிரச்சனையில் பக்குமாவன நபராக நடந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அதே சமயம் சுயநலம் மற்றும் பணத்தாசை பிடித்த அரசியல்வாதிகளின் கையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை.
ஊழல்
முன்பு பீகார் தான் ஊழலில் முதலிடத்தில் இருந்தது. தற்போது ஊழலில் பீகாரை தமிழகம் முந்திவிட்டது. மாநிலத்தில் நிலவும் ஊழலால் பல துறைகளை போன்றே சினிமாவும் மூச்சுத் திணறிப் போயுள்ளது. விரைவில் போராட்டம் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் கமல்.