சென்னை: தமிழகம் இதுவரை இப்படி ஒரு நிலையைக் கண்டதில்லை. 100 ஆண்டு சினிமா வரலாற்றில் ஒருபோதும் இப்படி தொடர்ச்சியாக திரையரங்குகள் மூடப்பட்டதில்லை.
முதல் முறையாக ஒட்டு மொத்தத் திரையரங்குகளும் மூடப்பட்டு, பல கோடி ரூபாய் வணிகத்தை இழந்திருக்கிறது திரைத்துறை. திரையரங்குகளைச் சார்ந்து இயங்கும் பல நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன இந்த தொடர் ஸ்ட்ரைக்கால்.
அனைத்து மல்டிப்ளெக்ஸ் மால்களும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சினிமா அரங்குகள் இல்லாத மால்களில் பெரிய கூட்டம் கிடையாது. சினிமா மால்களில் மட்டும்தான் வழக்கமாகக் கூட்டம் இருக்கும். இப்போது அரங்குகள் மூடப்பட்டிருப்பதால் பெரிய மால்களான ஃபோரம், ஃபீனிக்ஸ், அம்பாமால், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்றவற்றில் சுத்தமாகக் கூட்டமில்லை. இதனால் அங்குள்ள பல பெரிய நிறுவனங்களின் கடைகளில் ஆள் நடமாட்டமில்லாத நிலை.
திரையரங்குகள் மூடப்பட்டதால், இளைஞர்கள் பலர் மதுக் கடைகளைத் தஞ்சமடைந்துள்ளனர். நகர்ப்புற மதுக்கடைகளில் நிற்க இடமில்லாத அளவுக்கு கூட்டம். பகல் நேரத்தில் கொளுத்தும் வெயிலில் அடித்துப் பிடித்து சரக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மாலை நேரங்களில் மதுக் கூடங்கள் நிரம்பி வழிகின்றன. சினிமா என்ற பொழுது போக்கு இல்லாததால், அதற்கு மாற்றாக மதுக் கடைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையுலகினர் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். அந்த நஷ்டம் டாஸ்மாக் கடைகளின் லாபமாக அதிகரித்து வருகிறது.