பாதிக்கப்பட்ட குடிமக்கள் மன்னர்களிடம் முறையிடுவது வழக்கம். இரட்டை வரி விதிப்பிலிருந்து விலக்கு கேட்டு தமிழக முதல்வரை சந்திக்கச் சென்ற திரைத் துறையினரிடம் மக்கள் மனசாட்சியாக மாறி கேள்வி எழுப்பி சில கோரிக்கைகள் வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் அவை கோரிக்கைகள் அல்ல… தியேட்டர்களில் நடக்கும் பகல் கொள்ளையை கேள்விகளாகக் கேட்டு வெளுத்தெடுத்து அனுப்பியிருக்கிறார் முதல்வர்.
எந்த முன் யோசனையும் செய்யாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் கலந்து பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தாமல் தியேட்டரை மூட முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டார் அபிராமி ராமநாதன். இரட்டை வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்படுவோம், தொழில் நடத்த முடியாது என்ற நிலையில் புற நகர் தியேட்டர்கள் இம் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து தியேட்டர்களை மூடி நான்கு நாட்கள் ஆகிவிட்டது.
வெளுத்து வாங்கிய முதல்வர்
தமிழக அரசு இரு நாட்களாக திரைப்பட துறையினரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இப் பிரச்சினை பற்றி சட்டசபையில் இன்று பேசிய பின் இன்று அழைத்து பேச உள்ளதாக தமிழக அமைச்சார்கள் சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளனர். இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்குப் பெற அரசிடம் மனு கொடுக்கச் சென்ற தியேட்டர் உரிமையாளர்களிடம் கடுமையான அதிருப்தியை பதிவு செய்திருக்கிறது தமிழக அரசு. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இரட்டை வரி விதிப்பை சமாளித்து தொழில் செய்ய முடியாது என கூறும் நீங்கள், உங்கள் தியேட்டர் கேன்டீனில் நான்கு முனை வரியை வசூலிப்பது நியாயமா? எடுத்த எடுப்பிலேயே இப்படித்தான் கேள்வி எழுப்பி உள்ளார் முதல்வர்.
கேன்டீன் கொள்ளைய நிறுத்துங்க
கேளிக்கை வரியால் தொழிலே முடங்கி போய்விடும் என கூப்பாடு போடும் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்ரமணி நடத்தும் தியேட்டர்களில் 10 ரூபாய் MRP உள்ள தண்ணீர் பாட்டிலை 50 ரூபாய்க்கு விற்றால் எவன் சினிமா பார்க்க வருவான் என ஒரு அமைச்சர் எகிறியுள்ளார். ஆன்லைன் டிக்கட் முன்பதிவில் ஒரு டிக்கட் பதிவுக்கு 30 ரூபாய், பல மால் தியேட்டர்களில் மணிக்கணக்கிற்கு பார்கில் கட்டணம், 2 ரூபாய் சோளப்பொறியை 80 ரூபாய்க்கு விற்பது என சென்னை, கோவை, திருப்பூர், மதுரை என பெரு நகரங்களில் உள்ள தியேட்டர்கள் உணவுப் பண்டங்களின் மூலம் அடிக்கும் கொள்ளை ஆதாரத்துடன் முன்வைத்துள்ளனர் அமைச்சர்கள். “முதலில் இவைகளைச் சரி செய்யவும். MRP விலையில் தியேட்டர் கேண்டீனில் பொருட்கள் விற்போம் என உறுதி கொடுங்கள்… அப்புறம் வரி விலக்கு பத்தி பேச வாங்க,” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் முதல்வர்.
பதிலில்லை.. பேச்சுவார்த்தையும் இல்லை
முதல்வர் கேட்ட எந்தக் கேள்விக்கும் தியேட்டர் உரிமையாளர்களால் சரியான பதிலையோ, உத்திரவாதத்தையோ கொடுக்க முடியாததன் காரணமாகவே இரு நாட்களாக அமைச்சர்கள் மட்டத்தில் சினிமா துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படவில்லை. அதே போன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அரசு வலியுறுத்தியும் அதனை அமுல்படுத்த முடியாமல் அபிராமி ராமநாதன் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
மக்களுக்கு நல்லது பண்ணனும்
தியேட்டர்களில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க இதுதான் தக்க தருணம் என நினைக்கிறாராம் முதல்வர். மக்களுக்கு இந்த விஷயத்தில் நல்லது நடந்தே ஆக வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எண்ணம் நிறைவேறுமா? தியேட்டர் கேன்டீன், பார்க்கிங் கொள்ளை இத்தோடு ஒழியுமா? என்பதே பாமர சினிமா ரசிகனின் பேராவல்.
-ஏகலைவன்