தமிழகத்தில் திரையரங்கு கட்டணங்கள் உயர்வு; பொதுமக்கள் அதிருப்தி

tcinema01

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்திருந்தஅதிக பட்ச விலைக்கும் அதிகமாக அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் திரையரங்கு அனுமதி கட்டணமாக இதுவரை, வரி உள்ளிட்ட, பராமரிப்பு கட்டணங்களையும் சேர்த்து விற்கப்பட்ட அதிகபட்ச விலையான 120 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டு 153.60 ரூபாய் வரை அது விற்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான அபிராமி ராமநாதனிடம் விளக்கம் கேட்ட போது, 120 ரூபாய் விலை என்பது வரியுடன் சேர்த்து அரசு நிர்ணயம் செய்த அதிகபட்ச விலை கிடையாது என்றார்.

tcinema02

அதனால் திரையரங்குகளில் ஏற்கனவே விற்கப்பட்ட விலையுடன், தற்போது ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து விற்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இது குறித்து பேசிய சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் பாபு, இதுவரை அதிக பட்சமாக அனைத்து வரி மற்றும் கட்டணங்களும் சேர்த்து விற்கப்பட்ட விலைக்கு மேல் வரி விதிப்பதை ஏற்க முடியவில்லை என்றார்.

அதே போல இந்த விவகாரம் குறித்து பேசிய மற்றொரு வாடிக்கையாளரான முருகன், தற்போது விற்கப்படும் விலைகளில் 40, 60, 80 என காசுகளும் சேர்த்து வசூலிக்கப்படுவதால், சில்லறையை மீதம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குறை கூறினார்.

இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க வங்கி காடுகள் மூலமாக கட்டணத்தை செலுத்த திரையரங்கு ஊழியர்கள் வற்புறுத்துவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

இணையம் வாயிலாக திரையரங்கு அனுமதி சீட்டு பெறுவதிலும் புதிய பிரச்சனைகள் உண்டாகியுள்ளதாக கூறுகிறார், சென்னையை சேர்ந்த முகம்மது ரபீக்.

திரையரங்கு அனுமதி கட்டணத்திற்கு ஒரு ஜிஎஸ்டி வரி தனியாக சேர்க்கப்பட்டு, தவிர இணையத்தில் கூடுதலாக வசூலிக்கப்படும் இணையம் கையாளுகை கட்டணத்திற்கு தனியாக மற்றொரு ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டுவது எந்த வகையில் நியாயமானது என கேள்வி எழுப்புகிறார்.

tcinema03

இது போன்ற பிரச்னைகளுக்கு தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வை காண வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், சென்னையை சேர்ந்த சரவணன் என்பவர் தொடுத்திருந்த வழக்கு ஒன்றில், திரையரங்கு அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படும் அதிக பட்ச விலையான 120 ரூபாயில், வரி விலக்கு பெறப்படும் திரைப்படங்களுக்கு மட்டும், வரித்தொகையான 35.7 ரூபாயை கழித்துவிட்டு, பராமரிப்பு கட்டணமான 1 ரூபாயையும் சேர்த்து மொத்தமாக 83.3 ரூபாய்க்கு மட்டுமே திரையரங்கு அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திரையரங்குகள் தற்போது நிர்ணயம் செய்துள்ள புதிய கட்டணமும், தமிழகத்தில் புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

-BBC_Tamil