வீம்பாய் ஸ்ட்ரைக் ஆரம்பித்து தடாலென சரண்டரான தமிழ் சினிமா! – ஸ்பெஷல் ரவுண்ட் அப்

theatreஇந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வாரம்.

ஜிஎஸ்டி, கேளிக்கை வரிக்கு எதிராக தியேட்டர்களை மூடுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்கள். மூடவும் செய்தார்கள். ஆனால் அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வார்த்தைக்கே அழைக்கவில்லை. பின்னர் இவர்களாக அப்பாயின்மென்ட் கேட்டு, காத்திருந்து பார்த்துப் பேசினர். ஆனால் அரசு எந்த சலுகையும் தரத் தயாராக இல்லை.

அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் ரஜினிகாந்த், கேளிக்கை வரியை நீக்கி லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை அவரது நண்பர் கமல் ஹாஸன் வரவேற்றார். வரி விதிப்பை நீக்காவிட்டால் அரசை எதிர்த்து களமிறங்குவோம் என அழைப்பும் விடுத்தார். ரஜினி குரல் கொடுத்ததற்கு இயக்குநர் சேரனும் நன்றி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமையும் திரைத்துறையினர் – அமைச்சர்கள் பேசினார்கள். எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மறு நாள் புதன்கிழமை திரைத்துறையினரை பேச்சு வார்த்தைக்கே அழைக்கவில்லை அரசுத் தரப்பு.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தியேட்டர் ஓடாததில ரூ 60 கோடி வரை நஷ்டம். கதிகலங்கிப் போனார்கள்.

அடுத்த நாள் அமைச்சர்களுடன் பேச்சு நடந்தது. கேளிக்கை வரி இப்போதைக்கு இல்லை என்று அரசு கூறியது. அதுகுறித்து பேசி முடிவெடுக்க ஒரு குழு அமைப்பதாகவும் கூறியதால், ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டது.

ஸ்ட்ரைக்குக்கு கிடைத்த பலன்

அரசிடமிருந்து எந்த சலுகையும் கிடைக்காததால், வரிச் சுமையை மக்கள் தலையில் கட்ட முடிவெடுத்துவிட்ட தியேட்டர்காரர்கள் வரலாறு காணாத அளவுக்கு டிக்கெட் மற்றும் தின்பண்டங்கள் விலையை ஏற்றிவிட்டனர். இதனால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதுதான் ஒரே பலன்.

நோ புதுப் படம்

இந்த ஜிஎஸ்டி பிரச்சினையால் தமிழ் சினிமா ஸ்தம்பித்துவிட்டது. எந்தப் புதுப்படமும் நேற்று வெளியாகவில்லை. ஏற்கெனவே வெளியான வனமகன், இவன் தந்திரனை மறு வெளியீடாகக் கொண்டு வந்தனர். கூட்டம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

டிஜிட்டல் சந்திப்பு

இந்த வாரத்தின் இன்னொரு முக்கிய நிகழ்வு, ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ படத்தின் 3 டி டிஜிட்டல் சந்திப்பு. அதாவது இந்தப் படத்தை எப்படி 3டியில் வெளியிட வேண்டும்.. ஏன் 3டியில் மட்டுமே வெளியிட வேண்டும் என்பதை விளக்க நடந்த கூட்டம். முதல் முறையாக ஒரு இந்தியப் படம் 20000 அரங்குகளுக்கும் மேல் வெளியாகவிருப்பதையும் இந்த கூட்டத்தில் சொன்னார்கள்.

சிவாஜி மணி மண்டபம்

சிவாஜிக்கு மணிமண்டம் அமைக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருந்தார் அல்லவா… அந்த வேலைகள் விறுவிறுவென முடிந்து, இதோ திறப்பு விழாவுக்குத் தயாராகிவிட்டது. வரும் அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்போவதாக தமிழக அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது.

கஜோல் விசிட்

பாலிவுட்டின் முன்னணி நாயகியான கஜோல் இன்று சென்னை வந்திருக்கிறார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் புரமோஷன்களுக்காக வந்திருக்கும் அவர் செய்தியாளர்களையும் சந்திக்கிறார்.

சம்பளத்தைக் குறைங்க…

ஹீரோக்களோட சம்பளம்தான் சினிமாவின் மிகப் பெரிய பிரச்சினை. எனவே சம்பளத்தைக் குறைங்க என்ற கோரிக்கை மீண்டும் வலுக்க ஆரம்பித்துள்ளது. சின்ன நடிகர்கள், நடிகைகள் மட்டுமே இதுகுறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் பெரிய நடிகர்கள் கப்சிப்!

tamil.filmibeat.com