நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

Slide1மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார்.

வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும்.

“இத்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’ , மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல் திட்டம் இதுவாகும். சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்க எம்.ஐ.பி. ஒரு சிறந்த தளமாகும்,” என நஜிப் கூறினார்.

நேற்று மாலை, தாமான் பெர்மாத்தா தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியில், ‘மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க்கல்வி’ சிறப்பு மலர் வெளியீடு மற்றும் நினைவு தகடு திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, நஜிப் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமரோடு, கல்வி அமைச்சர் மாஹ்ட்சீர் காலிட், ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், நகர்ப்புற நல்வாழ்வு, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் நோ ஓமார் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“2013 இல், 6 புதியத் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டி, நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை 530ஆக உயர்த்தப்போவதாக வாக்களித்திருந்தோம். அதன் அடிப்படையில், தற்போது 4 தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பில் உள்ளன, ஒரு பள்ளி அடுத்த மாதமும், இன்னொன்று இவ்வாண்டு இறுதியிலும் திறப்பு விழாக் காணவுள்ளன. ஆக, நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்”, என அவர் சொன்னார்.

அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க விரும்புவதாக Slide2பிரதமர் கூறினார். இவ்வாண்டு, கூடுதலாக 50 பாலர் பள்ளிகள் நிர்மாணிப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நஜிப் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 23 இல், இந்திய சமூக வளர்ச்சி திட்டமாக எம்.ஐ.பி.-யை நஜிப் அறிமுகப்படுத்தினார். அரசின் அதிகாரப் பூர்வ ஆவணமான இத்திட்டவரைவு, அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றம் காணும் எனவும் நஜிப் உறுதியளித்தார்.

“நீங்கள் ஒன்றுபட்டுவிட்டால், உங்களை ஒன்றுபடுத்தும் தலைவர் உங்களுக்கு வாய்த்துவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் பலமான சமூகமாக உருவாவீர்கள் என நான் நம்புகிறேன். ஆக, உங்களை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் தேவை”, என அவர் கூறினார்.

தொடர்ந்து, கல்வியிலும் இந்தியர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கல்வி ஒன்றே ஒரு சமூகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்லும் ஆயுதமாகும், ஆகவே, கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளியுங்கள் எனவும் பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார்.