ஞாயிறு நக்கீரன்- 16.7.2017 – “சிறுத்தை தன் உடலில் உள்ள வரியை இழந்தாலும் இழக்கும்; குள்ளநரி அதன் பாரம்பரிய குணமான தந்திரத்தை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால், அரசியலில் இருக்கும் ஒரு பார்ப்பனரின் மனதைக் கீறிப் பார்த்தால் அங்கே ஒளிந்திருக்கும் ‘வஞ்சகம்’ என்ற தன்மை மட்டும் அவர்களைவிட்டு அகலவே அகலாது” என்று நீதிக் கட்சியில் வீறுகொண்டத் தலைவராகத் திகழ்ந்த டாக்டர் டி.எம்.நாயர், இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் முழங்கியது வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
1918-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 2-ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போதுதான் நாயர் அவ்வாறு முழங்கினார். இந்தியாவில் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நடைபெற்ற வரும் கொடுமைகளை விளக்கி, பார்ப்பனரல்லாதாருக்குச் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று உரிமைக் குரல் எழுப்பினார்.
“நீதிக் கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களை மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்பது அல்ல. எங்களுக்கு சமூகநீதி வேண்டும். அதனை நிறைவேற்றுதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டீஷ் அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தர வேண்டும். நீதிக் கட்சி இருந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக் கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும்” என்றும் ஓங்கி முழங்கினார் டாக்டர் நாயர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் நீதிக்கட்சியைக் கட்டமைத்தவர்களில் ஒருவராகவும் விளங்கிய டி.எம்.நாயர்(டாக்டர் தரவத் மாதவன் நாயர்) மிகச் சிறந்த பத்திரிகையாளர் ஆவார். ‘சர்’ ஏ.டி.பன்னீர்செல்வம், ‘வெள்ளுடை வேந்தர்’ தியாகராயர் ஆகியோரெல்லாம் சேர்ந்து நிறுவிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பில் ‘ஜஸ்டிஸ்’ என்னும் இதழ் ஆங்கில மொழியில் நடத்தப்பட்டது. அதனால்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று சென்னை மாகாண மக்களால் அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் தமிழில் நீதிக் கட்சி என்று புது வடிவம் பூண்டது. அத்தகைய அரசியல் பாரம்பரியமிக்க ஜஸ்டிஸ் ஏட்டை நடத்தியவர் இதே டி.எம்.நாயர்தான்.
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட எங்கும் எதிலும் பிராமணமயமாகவே இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் நீதிக் கட்சி தோற்றுவிக்கப்பட்டு ஆட்சியையும் கைப்பற்றியது.
1920 இல் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி தனியாகப் போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை-யும் கைப்பற்றியது. 1936 வரை 16 ஆண்டுகள் தொடர்ந்து நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில்தான், பார்ப்பனரல்லாதார் பல சலுகை-களையும் உரிமைகளையும் பெற்றனர். குறிப்பாக 1921, செப்டம்பர் 16-இல் நீதிக்கட்சி அரசு முதல் முறையாக வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை நிறைவேற்றியது. இதுவே இந்தியாவின் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டமாகும். இதன்வழி, தாழ்த்தப்பட்டோர் என அழைக்கபட்ட மக்களுக்குப் பல உரிமைகள் கிடைத்தன. கல்வி, வேலைவாய்ப்பு, ஆன்மிக உரிமை என பல திட்டங்களை நீதிக்கட்சி நிறைவேற்றினாலும் இதற்காகவே பாடுபட்ட டாக்டர் டி.எம். நாயர் இவைகளைப் பார்க்க முடியாமல் எந்த மக்களுக்காகப் போராடவும் குரல் கொடுக்கவும் லண்டன் சென்றாரோ, அங்கேயே 1919 ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 17 ஆம் நாள் தனது 51ஆவது வயதில் தம் வாழ்க்கை என்னும் நூலுக்கு முடிவுரை எழுதினார்.
- கல்விக் கூடங்களில் கல்வி பயில உரிமை
- வேலை வாய்ப்பில் உரிமை
- தெருவில் நடக்க உரிமை
- கோவிலில் நுழைய உரிமை
- பேருந்தில் பயணம் செய்ய உரிமை
- நாடக அரங்குகளில் நுழைய உரிமை
- பெண்கள் தேர்தலில் போட்டியிட உரிமை
நகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கெல்லாம் குரல் கொடுத்த நாயர், நீதிக் கட்சி ஆட்சியில் இவை யாவும் நிறைவேற்றப்பட்டபோது அவற்றைக் கண்ணாரக் கண்டு உள்ளம் இன்புற காலமகள் வாய்ப்பளிக்க-வில்லை என்பது பெருஞ்சோகம்.
1919 இல் பிரிட்டிஷ் அரசுஇந்தியாவிற்கான அரசியல் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க மண்டேகு-செம்ஸ்ஃபோர்டு குழுவை ஏற்படுத்தியது. நீதிக்கட்சி சார்பில் அக்குழுவின் முன்தோன்றி பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டுமென நாயர் வாதிட்டார். இதற்காக லண்டன் சென்றிருந்த போது அங்கு உடல்நிலை மோசமாகி மரணமடைந்தார்.
டி.எம்.நாயர், 1868 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15 ஆம் நாளில் அப்போதைய சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் பிறந்தார். சென்னையில் கல்லூரிப் படிப்பிற்குப்பின் மருத்துவப் பட்டப் படிப்பை இங்கிலாந்தில் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும், காது, மூக்கு, தொண்டை (ENT) நோய் தொடர்பான ஆய்வுப் பட்டத்தை பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசிலும் பெற்றார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் தாயகம் திரும்பிய இவர், தன்னுடைய அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்துடன் தொடங்கினார். காங்கிரஸ் கட்சி பேச்சாளர்களில் தலைசிறந்த ஒருவராகத் திகழ்ந்த இவர், சென்னை மாநகராட்சி உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என்றெல்லாம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு டாக்டர் நாயரை இந்தியத் தொழிலாளர் நல ஆணைய உறுப்பினராக நியமித்தது. நாயர் இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையைப் பட்டியல் போட்டுத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்திடவும் பரிந்துரைத்தார்.
டாக்டர் டி.எம். நாயரும் சர்.பி. தியாகநாயரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தாலும் பார்ப்பனரல்லாத மக்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களின் மனப்போக்கை நன்கு அறிந்த டாக்டர் சி. நடேசனார், அவர்களை அணுகித் தாம் நிறுவிய திராவிடச் சங்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை விளக்கி அவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களும் காங்கிரசுக் கட்சியை விட்டுவிலகி. 1917 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்னும் அரசியல் அமைப்பைத் தொடங்கினர். இப்படி உருவான நீதிக் கட்சிக்கு அடித்தளம் அமைத்தவர் டாக்டர் சி. நடேசனார் என்றாலும், நீதிக் கட்சியை வழிநடத்தியவர் டாக்டர் டி.எம். நாயர் என்றால் அது மிகையாகாது.
1917 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் டி.எம். நாயரைப் பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில், “அவர்(நாயர்) காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம். நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்” என்றார். நாயர் நீதிக்கட்சியில் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் 24 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வழி நடத்தினார் என்பது வரலாறு.
டாக்டர் நாயர் அவர்களின் பேச்சும், எழுத்தும் காங்கிரசுக் கட்சிக்காரர்களையும், அன்னிபெசன்ட் அம்மையாரின் ‘சுயாட்சி’(ஹோம் ரூல்)’ கூட்டத்தாரையும் கதி கலங்க வைத்தது. அதோடு காந்தி, ராஜாஜி, பாரதியார் போன்றோரும் நாயரின் சமூக நீதிக்கான கேள்விக் கணைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். சிறந்த மக்கள் நலத் தொண்டராக விளங்கிய டி.எம்.நாயர், தன் வாழ்வை ஏறக்குறைய அரை நூற்றாண்டோடு முடித்துக் கொண்டது திராவிட இயக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஜூலை 17, டாக்டர் டி.எம்.நாயருக்கு நினைவு நாளாகும்.
அய்யா நாயர் அவர்களே, “மனுஷனாகப் பிறந்தால் மனுஷனாக வாழவேண்டுமென்று” நீங்கள் மக்களுக்குப் போதித்துள்ளீர்கள்; இறைவனின் திருவருள் உங்களுக்கு என்றென்றும் இருக்கட்டும். நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க!