நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று மதியம் 2 மணியளவில், லாரிகளை வழிமறித்த கட்கோ குடியிருப்பாளர்களைச் சுமார் 60 பேர் அடங்கிய காவல்துறை குழுவினர் கைது செய்ததாக, மலேசிய சோசலிசக் கட்சியின் ஆர்.காந்தி தெரிவித்தார்.
“நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தாமரை நிறுவனத்திற்கு அந்த நிலத்தில் எந்தவொரு உரிமையும் இல்லாதபட்சத்தில், மரங்களை அவர்கள் வெட்டி, வெளியேற்றுவது சட்டத்திற்குப் புறம்பானாது. ஆக, அவர்களைத் தடுத்து நிறுத்திய குடியிருப்பாளர்கள் எப்படி குற்றவாளிகள் ஆவர்,” என ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார்.
“மேல்முறையீட்டு விசாரணை எதிர்வரும் 25 ஜூலையில் நடைபெறவுள்ளது. அதுவரை யாரும் அங்குள்ள ரப்பர் மரங்களை வெட்ட காவல்துறை அனுமதிக்கக் கூடாது. அந்த மரங்களை நட்டு, பாதுகாத்து வந்தது நாங்கள், இப்போது அம்மரங்களை வெட்டி வெளியேற்ற அனுமதி கொடுத்தது யார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும்,” என குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜோன் கேட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில், 22 பேர் 50-லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்கள், 13 பேர் பெண்கள். அவர்களின் பாதுகாப்பு குறித்து காந்தி கவலை தெரிவித்தார். ‘போராட்டத்தைத் தொடர்ந்தால், இன்னும் அதிகமானோர் கைது செய்யப்படுவீர்கள்’ எனக் காவல்துறையினர் அவர்களை இதற்கு முன் எச்சரித்துள்ளதை ஆர். காந்தி நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையே, ஆயீர் ஈத்தாம் காவல் நிலையத் தலைவர் நோர்ஷைனி முகமட் நோர் கைது குறித்து மலேசியா கினியிடம் உறுதிபடுத்தியதோடு; குற்றப்பிரிவு 339-ன் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.
அப்பிரிவின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு மாதத்திற்கு மேற்போகாத சிறை தண்டனை அல்லது 1000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
“லாரிகளைத் தடுத்து நிறுத்தியது குற்றமாகும். ஒரு லாரி ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரிலேயே நாங்கள் எங்கள் கடமையைச் செய்தோம். நாங்கள் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக செயல்படவில்லை.”
“இதற்கு முன்னமே, லாரிகளை வழி மறிக்க வேண்டாம் என, நாங்கள் அவர்களை எச்சரித்துள்ளோம்,” எனவும் நோர்ஷைனி முகமட் நோர் தெரிவித்தார்.
கைதானவர்கள் இன்று இரவு, ஜெம்பூல் மாவட்ட போலிஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, நாளை காவல் உத்தரவு பெற விண்ணப்பம் செய்யப்படுவர் எனவும் அவர் கூறினார்.
ஆனால், அவர்களில் 14 பேர் மட்டுமே ஜெம்பூல் மாவட்டப் போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பெண்கள் 13 பேரும் பஹாவ் காவல் நிலையத்தில் உள்ளதாக ஆர்.காந்தி தெரிவித்தார்.
கட்கோ நிலத்தை தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனம் , குடியிருப்பாளர்களின் அனுமதியின்றி ‘கிரேட் ஆலோனியர்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் பெர்ஹாட்’ நிறுவனத்திடமிருந்து வாங்கி, மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிலத்தைக் காலி செய்யச்சொல்லி அம்மக்களை கட்டாயப்படுத்தி வருகிறது. இந்த நில விற்பனை குறித்து ஏதும் அறிந்திராத குடியிருப்பாளர்கள் தாமரை நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளனர். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பட்சத்தில், தாமரை நிறுவனம் அங்குள்ள மரங்களை வெட்டி வெளியேற்றுவதைக் குடியிருப்பாளர்கள் தடுத்து வருகின்றனர்.
இப்படி ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு உலை வைத்து அவர்களின் வயிற்றில் அடித்து சுருட்டும் பணத்தை எங்கே கொண்டு போகப் போகிறார்கள் இந்த தாமரை பிரதர்ஸ்? அவங்க பெரியப்பன் பட்ட பாடு தெரியாதோ…முறையாக வரி செலுத்தியிருப்பதை வருமான வரி இலாகா உறுதி செய்யுமா?
எல்லாம் மாயயான இந்த உலகில் காதறுந்த ஊசியும் கூட வராது என்பதை மறந்து அலைகிறார்கள் என்பதற்கு இந்த நாதாரிகளே நல்ல சான்று.
தாமரை பிரதர்ஸ் இந்தியரிடம் சுருட்ட வில்லை ! இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஒரு சில இந்திய தொழில் அதிபர்கள் மேற்கொள்ளும் திட்டங்களையும் குறை கூறாதீர்கள் ! முதலில் இந்த GATCO யாரால் எப்போது தொடக்க பட்டது !! ஏன் இங்கு அனைவரும் இந்தியர்கள் ! யார் இவர்களை கை விட்டது என்ற பின்னணியை ஆராய்ந்து பாருங்கள் ! தோட்ட தொழிற் சங்கத்தை கேளுங்கள் ஏன் இதெல்லாம் ஏற்பட்டது என்று !! பிபின் ஹாஸ்டல் ! தோட்ட மாளிகை ! ஒரு சில தோட்டங்கள் எல்லாம் எங்கே போனது என்று கேளுங்கள் !! PPN பின்னால் அண்ணா !! அண்ணா !! என்று கோசம் போட்ட தோட்ட தொழிலாள தமிழனை கேளுங்கள் !! தொழிளார்களின் வயிட்ட்ரில் அடித்தது யார் என்று அவர்களை கேளுங்கள் !! எய்தவன் எங்கோ இருக்கிறான் !!