தமிழக அரசு பதவி விலகட்டும்: கமல்ஹாசன் மீண்டும் காட்டம்

kamal-hassanடெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியவில்லையென்றால் பதவி விலகட்டும் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துக்களைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமல்ஹாசன் இன்றைய தனது டுவிட்டர் பதிவில் “பள்ளிப் படிப்பை முடிக்காத எனக்கு நீட்டின் கொடுமை புரியவில்லை.

ஆனால் டெங்கு காய்ச்சல் என் மகளுக்கு வந்ததால் அதுகுறித்து புரியும். டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியவில்லையென்றால் விலகிக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு அமைச்சர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. “கமல்ஹாசன் நடிகர்தான். அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியலுக்கு வந்து விட்டு எங்களைப் பற்றி பேசட்டும்” என்று அமைச்சர்கள் கூறினார்கள்.

இதனையடுத்து டுவிட்டரில் அறிக்கை வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்தித் திணிப்புக்கு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழக அமைச்சர்களின் இலாகாக்களில் நடக்கும் ஊழல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் என தனது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்றும் ஒரு டுவீட்டை வெளியிட்டுள்ளார்.

-lankasri.com