தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 1100 தியேட்டர்களில் 90% ம் தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன.
கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கள் ரீலீஸ் ஆகின. குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் டிக்கட் விற்பனையானது. பாகுபலி திரையிட்ட தியேட்டர்கள் மட்டும் இவ்வருடத்தில் பெரும் லாபம் சம்பாதித்த தியேட்டர்கள். பிற தியேட்டர்கள் குறைந்தபட்ச ஆடியன்சை (ஒரு காட்சிக்கு 25 பேர்) வைத்து தியேட்டர்களை நடத்தி வந்தனர். ஜிஎஸ்டி வரி, அத்துடன் 30% மாநில அரசின் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்ற நிலை கடந்த ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த போது திரையரங்குகள் நிலை குலைந்தன.
தொடர்ந்து நான்கு நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டன. தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்போது கேளிக்கை வரி இல்லை. ஜிஎஸ்டி மட்டும் செலுத்துமாறு அரசு உத்திரவாதம் கொடுத்ததால் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. படம் பார்க்க ஆடியன்ஸ் வருகை இரட்டை இலக்க எண்களை கடப்பதே போராட்டமானது. தியேட்டர் தொழில் இனி எடுபடாது, ஊத்தி மூடவேண்டியதுதான் என்ற மனோ நிலைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்தனர். சினிமாவில் எல்லாருடைய சம்பளமும், தயாரிப்பு செலவும் கூடுகிறது. படங்களின் விலையும் அதிகரித்து தியேட்டர் எம்.ஜி, அட்வான்ஸ் தொகை கூடியுள்ளது. கடந்த 15 வருடங்களாக டிக்கட் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆனால் டிக்கட் கட்டணம் அதிகம் என எல்லோரும் குரல் கொடுப்பதுதான் புரியாத புதிராக உள்ளது என தியேட்டர் வட்டாரங்களில் புலம்பல் ஏற்பட்டது.
ஜூன் 15க்கு பின் வந்த ஒரு டஜன் படங்களும் வந்த வேகத்திலேயே பெட்டிக்குத் திரும்பின. நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததால் படம் பார்க்க வரும் ரசிகன் வேறு பொழுதுபோக்கு நாடிப் போய்விட்டான். இனி தியேட்டர் பக்கம் வர மாட்டான் என பயமுறுத்தினர்.
கடந்த 21 அன்று வெளியான விக்ரம் வேதா, மீசைய முறுக்கு இரு படங்களுக்கும் இளைஞர், மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். மக்களை கவரும் படங்கள் பார்க்க பார்வையாளன் தியேட்டருக்கு மட்டுமே வருவான், டிக்கட் கட்டண உயர்வு இது போன்ற படங்களின் கலெக்க்ஷனை கட்டுப்படுத்த முடியாது என்பதை இரு படங்களும் உறுதிப் படுத்தியுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக தியேட்டர் டிக்கட் விற்பனை, கேண்டின் ஆகிய வற்றில் கூட்டம் அலைமோதுகிறது. மூன்று நாட்களில் விக்ரம் வேதா, மீசையமுறுக்கு என 2 படங்களும் தமிழ்நாட்டில் சுமார் 9 கோடியை வசூலாக பெற்று உள்ளன. அந்தப் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, அவை இப்போதே லாபத்தைத் தொட்டுவிட்டன. இந்த வாரம் வருவதெல்லாம் போனஸ்தான்!
ஆனால் இந்த நிலை தொடருமா? தொடர்ந்து தரமான படங்கள் வருமா?