-ஞாயிறு நக்கீரன், ஜூலை 26, 2017.
கணியன் என்ற அன்பரின் அண்மைய சிந்தனை வெளியீடு, இந்த அறிக்கையை எழுதும்படி என்னைத் தூண்டிவிட்டது. மொழிக் கொலையும் தமிழ்ச் சிதைவும் அன்றாடம் இடம்பெறும் மின்னல் பண்பலை வானொலியைக் கட்டிக் காப்பது, அதன் செய்திப் பிரிவுதான்.
குறிப்பாக, அரச வானொலியான இதில், தினமும் காலையில் இடம்பெறும் காலைக்கதிர் நிகழ்ச்சி, சமுதாயத்திற்கு நல்ல தகவலையும் விழிப்புணர்வையும் அன்றாடம் ஏற்படுத்தினாலும், அந்த நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் வாயாடித்தனத்திற்கும் அடிக்கும் அரட்டைக்கும் வரம்பில்லாமல் போய்விட்டது. அதன் நிருவாகியான குமரன், காலைக் கதிரை தினமும் செவிமடுக்கிறாரா இல்லையா என்பதும் தெரியவில்லை. குறிப்பாக, சுகன்யமான ஓர் அறிவிப்பாளர் ‘சதா’ கொஞ்சுவதிலும் குலாவுவதிலும் வல்லவர். ஆனாலும், காலைக்கதிர் அங்கத்தில் வாரத்தில் ஒருமுறை வலம் வந்தாலும் மாலை நிகழ்ச்சிகளில் 5 மணிக்குப் பின் அந்த வேலையை குறை வைக்காமல் தொடர்கிறார்.
அரசாங்கம் வழிநடத்தும் பண்பலை வானொலியில் பண்பாடு காத்தும், மொழி வளர்த்தும் நிகழ்ச்சி படைக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு மாறாக, மொழிச் சிதைவும் கொச்சை மொழியும் வகைதொகை இல்லாமல் இடம்பெறுகின்றன. இவற்றையெல்லாம் செப்பம் செய்யும் விதமாக, இந்த வானொலியின் செய்திப் பிரிவினர் விளங்குகின்றனர்.
‘ஆர்டிஎம்’ என்னும் மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவு, ஒரு நாளில் இரவும் பகலும் மணிக்கொரு முறையென இடைவிடாமல் 24 செய்தி அறிக்கைகளை அளித்துவிட்டு, தற்பொழுது காலை 6:00 மணி முதல் பின்னிரவு 11:00 வரையென 18 தமிழ்ச் செய்தி அறிக்கைகளை வழங்கி, இந்த மலையகத் தமிழ் நேயர்களின் தகவல் முனையமாக விளங்குகிறது. இப்படிப்பட்ட வானொலி, இந்த உலகில் அநேகமாக இந்த வானொலியாகத்தான் இருக்கும். அதற்காக மலேசிய அரசிற்கு தமிழ் நேயர்கள் நன்றி பாராட்ட வேண்டும். காலை பதினோரு மணி செய்தி அறிக்கையை கேட்கும்பொழுது, அந்த பத்து நிமிடங்களுக்கு இந்த உலகை அப்படியே படம் பிடித்து நம் மனக்கண் முன்னால் நிறுத்தி விடுவார்கள்.
அதைப் போலத்தான் இரவு பதினோரு மணிச் செய்தித் தொகுப்பும்; மலேசிய தேசிய-வட்டார அரசியல், சமூக, கல்வி, பொருளாதார நிலையைஎல்லாம் கனிச்சாற்றைப் பிழிந்து தருவதைப் போல செய்தியாகத் திரட்டி நேயர்களுக்கு அளிப்பதில் மின்னல் தமிழ்ச் செய்திப் பிரிவிற்கு இணை மின்னல் தமிழ்ச் செய்திப் பிரிவுதான். செய்தித் தாளைப் புரட்ட வாய்ப்பில்லாமல் போனவர்கள் இரவு பதினோரு மணிச் செய்தியைக் கேட்டாலே போதும் நாட்டு நடப்பையும் உலகப் போக்கையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். காலை முதல் இரவு வரை வாசிக்கப்பட்ட செய்தி அறிக்கைகளின் தொகுப்பாக, இரவு பதினோரு மணி செய்தித் தொகுப்பும் ஒரு நாளின் நிறைவு செய்தி அறிக்கையுமாக அது இருக்கும்.
காலை ஏழு மணி, ஒன்பது மணி, பகல் ஒரு மணி, மாலை ஏழு மணி, ஒன்பது மணிச் செய்தி அறிக்கை எல்லாம் மிகவும் வலுவாக இருக்கும். முக்கியமான செய்திகளை திரும்பத் திரும்ப ஒலிபரப்புவது, அதேவேலை நேயர்களுக்கு சளிப்பு ஏற்படாத வண்ணம் ஒருசில முக்கியமான பழைய செய்திகளுக்கு ‘புது வண்ணம் பூசுவதைப் போல’ மெருகேற்றிச் சொல்வது; எல்லாவற்றுக்கும் மேலாக மாலை 7.00 மணிச் செய்தியை வர்த்தக செய்தி அறிக்கை என்ற பெயரில் தொழில்-வர்த்தக-நிதியக செய்தியாக மின்னல் வானொலி அளிக்கும் பாங்கெல்லாம் மிகவும் போற்றுதற்குரியது. அதில் அந்நிய நாணய பரிவர்த்தனை, உலோகங்களின் மொத்த(சந்தை) விலை குறித்த தகவல் எல்லாம் இடம் பெற்றிருக்கும். இதில், குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் பொழுதெல்லாம் அது ஏற்றமாக இருந்தாலும் சரி, இறக்கமாக இருந்தாலும் சரி, உலக சந்தை நிலவரப்படி பீப்பாய்க்கு இன்ன விலை என்பதை அறிந்து அதை நேயர்களுக்கு அறிவிப்பதிலும் மின்னல் எப்பொழுதும் மின்னல் வேகம்தான். இருந்தாலும், எரி எண்ணெய்யான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தற்பொழுது, வாரந்தோறும் மாற்றி அமைக்கப்படுவதால், இதைப் பற்றிய தகவலை தற்பொழுது மின்னல் செய்திப் பிரிவினர் குறைத்துக் கொண்டனர்.
மாலை 5.00 மணிச் செய்தியென்றால் அதில் இலக்கிய மணம் இடம் பெறும். அந்தந்த நாளில் தோன்றிய அல்லது மறைந்த இலக்கியப் பெருமக்களைப் பற்றிய செய்தி, அத்துடன் சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி மற்றவர்களின் செவ்வி(கருத்தும்)யும் சில வேளைகளில் இடம் பெறும்.
பொதுவாக செய்திகளைக் கவர்வதில், வானில் வட்டமிடும் பருந்துகள், கடற்புறாக்கள் ஆகியவற்றின் கூரிய கண்களைப் போல ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினரின் கவனமும் எந்நேரமும் விழிப்பாக இருக்கும் என்பதை எத்தனையோ தடவை அறிந்திருக்கிறேன். கடல் நீரின் மேல் மட்டம் எந்நேரமும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். நடுக்கடலில் கூட, நீர் மட்டம் ததும்பிக் கொண்டுதான் இருக்கும். அந்த நிலையில்கூட தப்பித் தவறி ஏதோ ஓரோர் மீன் மேல் மட்டத்திற்கு வந்துவிட்டால் போதும், அடுத்த சில வினாடிகளில் அம்மீன் அங்கே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பறவையின் கூரிய அலகில் துடித்துக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு அப்பறவைகளின் பார்வையில் கூர்மையும் செயலில் வேகமும் குடிகொண்டிருக்கும். அதைப் போலத்தான், ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப் பிரிவினரும்.
உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் சரி, அதை பற்றிய விவரத்தை அடுத்த செய்தி அறிக்கையில் இணைத்துக் கொள்ளும் விவேகம் மிக்கவர்கள் தமிழ்ச் செய்தி ஆசிரியர்கள்.
ஒருமுறை நள்ளிரவு 12.50 மணி அளவில் பத்துமலை சிவானந்த ஆசிரமத்தின் அந்நாளையத் தலைவர் ‘நினைவில் வாழும்’ அருள்மிகு குகபக்தானந்த சுவாமிகள் என்னைத் தொடர்பு கொண்டு, “தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் தலைமைச் சாமியார் இமயமலை அடிவாரத்தில் சமாதியாகி விட்டார். நாளையப் பத்திரிகையில் செய்தி போட முடியுங்களா” என்று வினவினார்.
ஐயா, நாளைய ஏடுகள் எல்லாம் அச்சாகி, வண்டியில் ஏற்றப்பட்டு அந்தந்த ஊருக்கானப் பயணத்தில் பாதி வழியில் உள்ளன. எனவே, நாளைய மறுநாள் ஏட்டில்தான் இதைப் பற்றியச் செய்தியை இடம்பெறச் செய்ய முடியும். எதற்கும் உங்களின் தலைமைச் சாமியாரைப் பற்றியத் தகவலைச் சொல்லுங்கள். மின்னல் வானொலிச் செய்தியில் இடம்பெறச் செய்வோம் என்று அவசர அவசரமாக அவரிடமிருந்து தகவலைப் பெற்றுக் கொண்டு அடுத்த வினாடியே மின்னல் வானொலி செய்திப் பிரிவிற்கு தகவல் சொன்னேன். நான் சொல்லி முடித்த பொழுது நள்ளிரவு 12.56 மணி. அடுத்த நான்கு நிமிடங்களில் இடம்பெற்ற ஒரு மணிச் செய்தியில் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் தலைமைச் சாமியார் இறப்பு பற்றி இடம் பெற்றது. அந்த அளவிற்கு தேனீயைப் போல தேடல் மிக்கவர்கள் அரச வானொலியின் தமிழ்ச் செய்திப் பிரிவினர்; தற்பொழுது நள்ளிரவில் செய்தி அறிக்கைகள் இடம் பெருவதில்லை.
அத்துடன் நல்ல சொற்களைப் பயன் படுத்த வேண்டும் என்ற மொழியார்வமும் இவர்களிடம் உண்டு. குறிப்பாக, மாது என்ற சொல்லிற்குப் பதிலாக இல்லத்தரசி, சுனாமி என்ற சொல்லிற்குப் பதிலாக ஆழிப் பேரலை; பூஜியத்திற்குப் பதில் சுழியம், மனு பாரத்திற்குப் பதிலாக விண்ணப்பப் படிவம் என்றெல்லாம் தன்னைத் தானே செப்பம் செய்து கொள்கிற ஆர்டிஎம் தமிழ்ச் செய்திப்பிரிவினரை சமுதாயம் பாராட்ட வேண்டும்.
காலமெல்லாம் ‘துள்ளிதம்’, ‘துள்ளிதம்’ என்று தவறாகவே உச்சரிக்கப்பட்ட மின்னல் வானொலி தமிழ்ச் செய்திப் பிரிவில், முதல் முறையாக இன்றுதான்(25-07-2017) துல்லியம் என்று சரியாக உச்சரிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக தமிழக மக்கள் தொலைக்காட்சியில் பலுக்கப்படும் சில நல்ல தமிழ்ச் சொற்காளான வட்டகை (டயர்), தண்டம் (அபராதம்) போன்ற சொற்களை அறிமுகம் செய்யும் மின்னல் வானொலியின் தமிழ்ப் பணியைப் பாராட்ட வேண்டும். இன்னும் குறிப்பாக, இரகசிய கேமரா என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் மறைகாணி என்னும் சொல்லையும் இறுதி அல்லது கடைசி என்பதற்குப் பதிலாக நிறைவு என்று உச்சரிக்கப்படும் சொற்களைக் கேட்க உள்ளம் இனிக்கிறது.
இருந்தபோதும், இந்த நடைமுறை யெல்லாம் ஒருங்கிணைக்கப்படவில்லை. விண்ணப்பப் படிவம் என்னும் சொற்றொடரை ஒரு செய்தி ஆசிரியர் விண்ணப்பப் பாரம் என்கிறார்; இன்னுமொருவர் மனு பாரம் என்கிறார்; அதைப்போல விளையாட்டுப் போட்டியை போட்டி விளையாட்டு என்கின்றனர்; அதைப்போல, பத்து மணி என்பதும் இரண்டு மணி என்பதும்தான் தமிழ் மரபு; மாறாக ‘மணி பத்து’, என்றும் ‘மணி இரண்டு’ என்பதும் பிழையான உச்சரிப்பாகும். அதைப்போல ‘மூலமாக’ என்பதற்குப் பதிலாக ‘மூலியமாக’ என்று தவறாக சொல்லும் போக்கு நேயர்களிடமும் அறிவிப்பாளர்களிடமும் நீடிப்பது தமிழுக்கு நல்லதல்ல.
மொத்தத்தில் மின்னல் பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் செய்யும் மொழி குளறுபடிக்கு ஈடுகட்டும் விதமாக, அதன் செய்திப் பிரிவினர் விளங்குகின்றனர்.
– ஞாயிறு நக்கீரன்
ஐயா உங்கள் கட்டுரைக்கு அடுத்த முறை மறுமொழி தருவேன். அதற்கு முன்பாக உங்கள் காதுகளுக்கு மட்டும் ஒரு ரகசியம் இப்போதைக்கு:- நம்ம மின்னலில் கால் பந்தாட்டம் என்றும் நாள்கள் என்றும் உச்சரிக்கிறார்கள். இது குறித்து மேலும் தகவல் பெற தொலைபேசி வழி தொடர்பு கொண்டபோது, அந்த இரண்டு சொற்களையும் அவர்கள் மிகச் சரியாகவே உச்சரிப்பதாக (அதாவது கால்பந்து மற்றும் நாள்கள்) வாதிட்டார்கள். மேலும், அது காலால் உதக்கப்படும் பந்து மாறாக காற்றால் உதைபடும் பந்து அல்ல என்றார்கள். நானோ உங்கள் வாதம் அது என்றால் ‘காற்பந்து’ தான் சரி காரணம் அது காற்று நிரப்பப்பட்ட பந்து அல்லவா? என்றேன். மறுமொழி இல்லை. அதே போல ‘நாட்கள்’ தானே ஏன் நாள்கள் என்கிறீர்கள் என்றேன். அதற்கு நாட்கள் என்றால் நாள் பட்ட ‘கள்’ என்று அர்த்தம் என்றார்கள்.(நாம் ‘குடி’ மக்கள் அல்லவா? ‘கள்’ளை மறக்க முடியவில்லை போலும்) அதற்கு நான் அப்படியானால் ‘பழங்கள்’ என்பது பழமையான கள் என்றல்லவா அர்த்தம் ஏன் அதற்கு மாற்றாக பழவகைகள் என்று சொல்லக்கூடாது என்றேன். மறுமொழி இல்லை. நான் சொன்னது சரியா அல்லது மின்னலின் வாதம் சரியா? இதற்கு தங்கள் பதில் என்ன ஐயா? இதற்கான உங்கள் பதிலுக்குப் பிறகு மேற்படி உங்கள் கட்டுரையை ஒட்டி (வெட்டி அல்ல) சிறு விவாதம் செய்யலாமா?
திரு குமரனா? அவர் மின்னல் எப் எம் அலை வரிசையை கேட்பது இல்லை ? மாதம் சம்பளம் தங்கு தடையின்றி பெறப்படுவதால் ,,,,, கவலையின்றி தூக்கத்தில் உள்ளார் பல நாட்களாக ?