ஞாயிறு நக்கீரன், ஜூலை 31, 2017.
ஆலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைக்கும் ஆரிய குருக்கள்களுக்கும் தோதாக இரவு பகல் எந்நேரமும் அடிமை ஊழியம் புரிவதற்காக வல்லடியாக நடைமுறைப் படுத்தப்படும் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த பெண் போராளியான முத்து லெட்சுமி அம்மையார் பிறந்த நாளான ஜூலை முப்பதாம் நாளில் ஆலயக் கருத்தரங்கை மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்தது தெரிந்தோ தெரியாமலோ அமைந்துவிட்ட ஒரு பொருத்தம்.
இந்த நாட்டில் இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், இந்து, சீக்கியம், தாவோயிசம் உள்ளிட்ட அனைத்து சமயங்களையும் இந்த மண்வாழ் மக்கள் பற்றியொழுகுவதற்கான சமய சுதந்திரத்தை மலேசிய அரசியல் சாசனம் வழங்குகிறது. இருந்தபோதும், இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் காலந்தோறும் நெருக்கடியை சந்தித்து வருவதைப் பற்றி நேற்று நடந்து முடிந்த ஆலய தேசியக் கருத்தரங்கில் கனமான விவாதம் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அதைப் பற்றிய விழிப்புணர்வும் ஈடுபாடும், மரத்தின் உச்சியில் உள்ள இலை காற்றில் இலேசாக அசைவதைப் போன்ற அளவில் இருந்தது, இந்து சமயத்திற்கு.. .. குறிப்பாக, மலேசியவாழ் இந்துப் பெருமக்களுக்கு பேரிழப்பாகும்.
இந்து சமய மக்கள், தங்களின் இறைநேச வேட்கையை நிறைவேற்றவும் எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கி தொழவும் உருவாக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்பொழுது திடீர்திடீரென புல்டோசர் இயந்திரங்களுக்கு இறையாவதும் வழிபாட்டு உருவங்களைச் சிதைப்பதும் நடைபெறத்தான் செய்கிறது.
இப்படி நடக்கும்பொழுதெல்லாம் சம்பந்தப்பட்ட ஆலயங்களை நிர்வகிக்கும் தரப்பினர், உடனடியாக செய்யும் வேலை ஒன்றுதான். அது, தமிழ் ஊடகங்களுக்கு உடனே அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வதுதான்.
அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட மற்றத் தரப்பினர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை வஞ்சகமில்லாமல் தொடர்வர். அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர் சற்று தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதுடன் சரி!
ஆலயத்தின்வழி சமய மறுமலர்ச்சிக்கோ அல்லது சமூக மேம்பாட்டிற்கோ ஒரு சிறு துறும்பையும் கிள்ளிப்போடாத சில நிருவாகத் தரப்பினர், பக்தர்களை வசப்படுத்தி பரிகார-பூசை-புனஸ்காரப் பணிகளை மட்டும் தொய்வின்றி செவ்வனே நிறைவேற்றி அதன்வழி ஆதாயம் தேட மட்டும் தவறுவதில்லை. தம்முடைய ஆலயத்திற்கு அடிப்படையான நில உரிமைக்கு, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமே என்று அக்கறைப்படுவதில்லை.
ஏனைய சமயத்தினர் வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தும் முன், முதலில் இடத்தை வாங்குவார்கள். மாறாக, நமது பக்தர்கள் தனியார் இடத்திலும் புறம்போக்கு நிலத்திலும் வசதிக்காகவும் அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்பவும் வழிபாட்டு ஆலயங்களை சிறியதாகவோ பெரியதாகவோ அமைத்துக் கொள்கின்றனர். இதனால் பல சிரமங்கள், அழுத்தங்கள் இவற்றின் தாக்கம் அரசியலாக்கப்படுகிறது.
அந்த இடத்தில் இருந்து அவர்கள் பெறும் ஆதாயம் அதிகம். சமயத் தொண்டு, மக்கள் சேவை என்பதெல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். சொந்த ஆதாயம்தான் முதல் இலக்கு; குறித்த இடம் சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதையும் புறக்கணித்து விடுவார்கள். இதுவெல்லாம் பொதுமக்களுக்குத் தெரியாது.
திடீரென்று ஒருநாள் காலையில் அமலாக்க அதிகாரிகளும் காவலர்களும் புடைசூழ மண்வாரி இயந்திரம் வந்து நின்றதும், “ஐய்யோ.. ஐய்யோ.. நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த சக்திமிக்க ஆலயத்தை அடித்து நொறுக்குகிறார்கள்” என்று படம் பிடித்து புலத்தின்வழி தகவல் பரப்பவும் பத்திரிகை அலுவலகத்திற்கு தொலைபேசி செய்யவும்தான் தெரிகிறது. அடுத்தவரின் இடத்திலோ அல்லது பொது இடத்திலோ ஆலயத்தை அமைத்திருந்தால், அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படும்பொழுது, மாற்று ஏற்பாட்டை செய்யத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு ஆலய நிர்வாகப் பொறுப்பு?” என்று இதுவரை ஒருவரும் கேட்டதில்லை;
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எதிர்காலத்தை கணிக்க முடியாமல் இப்படி ஏதும் செய்திருக்கலாம். ஆனால், நாடு விடுதலை அடைந்து இந்த ஆண்டில் சுதந்திர மணிவிழாவைக் கொண்டாடும் நேரத்திலும் இந்தப் பிரச்சினைத் தொடரலாமா?
வழிபாட்டுத் தலத்தை உருவாக்கும் முன், முதலில் இடத்தை முறைப்படி பெறாமல் இப்படி ஆலயத்தை அமைத்து, கடைசியில் இந்து சமயத்திற்கு இழுக்கைத் தேடித்தரும் ஆலய நிர்வாகத் தரப்பினரைக் கண்டிக்க.., குறைந்தபட்சம் சுட்டிக்காட்ட ஒருபொழுதும் ஒருசாராரும் எத்தனிப்பதில்லை. அதனால்தான் இந்து சமயத்திற்கு நேரும் இந்த அவலம் இன்னும் தொடர்கிறது.
இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மலேசிய இந்து சங்கம் முன் வருமா? அல்லது இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அரசியல் ஆக்கப்பட்டு ஆதாயம் தேடுபவர்களுக்கு துணை போகுமா? உரிமையை கோரவும் அதை நிலைப்படுத்தவும் பாதுகக்கவும் இந்து சங்கம் முயல்கிறது. ஆனால், உரிமையின் மறுபக்கம் பொறுப்புணர்ச்சியாகும். அதைப் பற்றிய தெளிவு இந்து சங்கத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
#அடுத்தவரின் இடத்திலோ அல்லது பொது இடத்திலோ ஆலயத்தை அமைத்திருந்தால், அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படும்பொழுது, மாற்று ஏற்பாட்டை செய்யத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு ஆலய நிர்வாகப் பொறுப்பு? #
இப்படி தமிழர் சிந்திக்க ஆரம்பித்திருந்ததால் நம் சமயம் சிறந்ததாகத் திகழ்திருக்கும்.
இந்து சங்கத்திற்கு குறியும் நெறியும் இல்லை. அதனால் நம்மவர்களுக்கு நல்வழி காட்டிட இயலவில்லை!
நக்கீரரே உமது கேள்வியிலேயே பதில் இருக்கிறதே !! ஆலயங்கள் ப …..
$ விற்குத்தான் !! பக்தியெல்லாம் மலை ஏறி விட்டது !!
“பணத்திற்காக” என்று நினைப்பவர் யார் அப்பன் வீட்டு நிலம் என்றெல்லாம் பார்க்க மாட்டார். “பக்திக்காக” என்று நினைப்பவர் எல்லாம் முறையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். எனக்கு இதில் அனுபவம் உண்டு. பணத்திற்காக என்று நினைப்பவர்களை திருத்த வழியில்லை! கோயில் உடைபடும் போது ஊரையே கூட்டி நியாயம் பேசுவார்கள்! இப்போதும் கூட இந்த நாதாரிகளை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்!
இங்கே எந்தக் கோயில் பக்திக்காக என்று சொல்ல முடியுமா? எந்தக்கோவில் நிர்வாகமாவது நாங்கள் உண்மையிலேயே ஆன்மிகத்தையும் பக்தியையும் வளர்க்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியுமா? அவனவனும் வரும் பக்தர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியும் என்றுதான் அலைகிறானே தவிர எவனும் பக்தியைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. உண்மையிலேயே இங்கே உள்ள இந்து சங்கமாக இருக்கட்டும் அல்லது இந்து மாமன்றமாக இருக்கட்டும் ஏன் உருப்படியாக கோயில்களில் இந்த மந்திரங்களை இப்படித்தான் ஓத வேண்டும் என்றோ வழிபாடுகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றோ திருமணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களுக்கு இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என்றோ ஏன் வறையறுக்கவில்லை அல்லது ஏன் அமைல்படுத்தவில்லை? படித்து பட்டம் பெற்ற டாக்டர்கள், பொறியியல் வல்லுனர்கள் உள்ளிட்ட பட்டதாரிகள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கொள்ளையடிக்கிறார்களே.. இதற்கு ஜி.எஸ்.டி உண்டா? இதை யார் கேட்பது? பென்ஸ், வியோஸ் உபயோகிக்காத புரோகிதனை இங்கே பார்க்க முடியுமா? நாட்டில் உள்ள ‘பெரிய’ கோவில் முதல் சில்லறை கோவில் வரை எவனுமே பக்தியை வளர்க்கவில்லை மாறாக அவனவன் வயிற்றை வளர்க்க எதோ ‘பினாத்தி’ கொள்கிறான் அவ்வளவுதான் விஷயம். இதில் பக்தி எங்கே…அது இங்கே பெரியார் சொன்ன வெங்காயமாகிப் போய்விட்டது.
கோயில்கள் உண்மை பத்தி நெறியை வளர்க்கத் தவறினால் இந்து மதம் மெல்ல மெல்ல இந்நாட்டில் தேய்ந்து விடும். கோயில் இருக்கும். அறிவுத் தெளிவடைந்த இந்துக்கள் கோயிலில் இருக்க மாட்டார்.
1. ஆலயங்கள் பணத்திற்க்காகவா? பக்திக்காகவா? இதுக்கு கூடவா இன்னும் தெரியவில்லை. ஆலயங்களுக்கும் பக்திக்கும் இப்போது என்ன சம்பந்தம்! வங்கியில் போடும் ஒவ்வொருக் காசுக்கும் கணக்கிருக்கின்றது. அரசு வாங்கும் ஒவ்வொருக் காசுக்கும் மக்களிடம் கணக்கு காட்ட வேண்டும். ஆனால் கோயிலில் உண்டியலில் நிரப்படும் பணத்திற்கும், அர்ச்சனைக்கு காசிற்கும், விழாக் காலங்களில் கொட்டும் பணத்திற்கும் ஏதப்பா கணக்கு! பொறுப்பற்றவர்கள் ஆலயங்களில் அறங்காவளென்றப் பொறுப்பிலிருந்துக் கொண்டு வரவுச் செலவுக் கணக்கை ஏற்றுக் கொண்டால் சங்கத் பதிவாதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டு விடுவார். இவ்வளவுப் பணம் எல்லாக் கோயிலில் வசூலாகியும் இன்றைக்கும் மக்களிடம் வேண்டிய அளவிற்கு சமய விழிப்புணர்ச்சியில்லை; மத மாற்றமென்ற கொடூர நோயாலும் நாம் இன்னும் பாதிக்கப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். நல்ல சமய விழிப்புணர்ச்சியிருந்தால் இதுவெல்லாம் நடக்குமா? இதுநாள் வரை எந்த நல்ல மாற்றங்களுமில்லை. என்ன நினைத்து ஒருக் கோயிற் றலைவன் முருகன் சொத்து என் சொத்தென்றுச் சொல்லும் தைரியம் அவருக்கு வந்தது. நம் மக்கள் இந்தளவிற்கா மிகக் கேவலமாகப் போய் விட்டார்கள்! இந்த வுலகைப் படைத்த, இந்தவுலகமென்றச் சொத்து முருகக் கடவுளுக்குத்தான் சொந்தம்; இதுதான் நம் சமயக் கோட்ப்பாடு. முருகன் சொத்து என் சொத்தென்றால் இந்தவுலகமே நம் சொத்தா? ஒன்னும் புரியவில்லை. எல்லாமே குழப்பமாகவுள்ளது! இதுநாள் வரைக்கும் கோயிலில் மக்கள் கொட்டிய பணத்தை மக்கள் நலனுக்கே திருப்பி விட்டிருந்தாள், நம் மக்களிடையே நல்ல மாற்றங்கள் உருவாகியிருக்கும். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லையே. நாளுக்கு நாள் நம் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டேப் போகின்றதே. இனிமேலாவது நம் மக்களிடம் சமய விழிப்புணர்ச்சி மலரவேண்டும்; வலுப் பெற வேண்டும்; வளரட்டும்! நல்ல மாற்றங்கள் உருவாகட்டும்.
முதலில் வாயில் வடை சுடுவதை நிறுத்துங்கல் ! 18000 தில் இருந்து இன்று 5000 மாக கோயில்கள் ஆகிவிட்டதென்றுதான் HINDRAF போராட துவங்கியது. இப்பொழுது இந்த 5000 கோயில்களையும் பாதுகாக்க சட்டம் வேண்டும் . ஒரு கோயிலுக்கு பூசாரியின் சம்பளம் , இரண்டு பணியாள் , இரண்டு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்த்வான் என்று 5 சம்பளம் தரவேண்டும் . கரண்டு பில்லு தண்ணி பில்லு மற்றும் வேண்டிய பொருட்கள் என்று மாதம் குறைந்தது 5 ஆயிரம் தேவை ! 5000 கோவில்களுக்கு , 25 மில்லியன் தேவை இருக்கிறது ! வருடத்திற்கு 300 மில்லியன் தேவை இருக்கிறது ! சரி ஒரு ஆயிரம் கோயில்கள் மட்டும் தந்தாலும் கூட , 5 மில்லியன் தேவை இருக்கிறது மாதம் . இதை மக்கள் தலையில் கடடாமல் , அரசாங்கம் பராமரித்தல் நன்று .ஆனால் மானகெடட மா இ கா பிடுங்கி தின்னும் ! நம் வரிப்பணம் எங்கே என்று கேட்ட்டால், நாடே விட்டு வெளியேறு என்று பதில் வரும் ! மானகெடட மா இ கா திருடர்களின் கையை முத்தமிடும் ! மா இ கா வை ஒளிக்காமல் எந்த ஒரு நன்மையையும் இந்தியர்களுக்கு செய்யமுடியாது ! எனவே , வரும் பொது தேர்தலில் , மாயி கா நிற்கும் எல்லா தொகுதியிலும் , இந்திய மக்களுக்கு வீடு வீடாக சென்று, விளக்கி, திருடர்களை வெளியேற்றுங்கள் ! நான் என் தொகுதியில் இதை ஆரம்பித்து விட்டேன் !
வாயால் வடை சுடுகிறனோ இல்லை சு்்்ல் சுடுகிறான் இந்த தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெற்றால் நல்ல அறுவடை தான் Dilip2்். ம இ கா சுருட்டினான்் இப்பொது நீங்க.
நான் எதிர்கட்சியிலும் இல்லை , வாயாலே வடை சுடும் சங்கத்திலும் இல்லை ! ஆனால் ஒரு நாள் நான் இறப்பேன் ! அன்று இந்த உலகத்திற்கு நான் ஜனநாயக வழியில் என் கடமையாட்ரி விடடேன் என்று நிம்மதியாக பெருமூச்சு விடுவேன் . எனவே , நான் கடவுளின் படைப்பான மக்களின் வாழ்வாதாரத்தில் அக்கறை கொள்கிறேன் . இதில் வென்றாலும் எனக்கு லாபமில்லை ; தோற்றாலும் எனக்கு நட்ட மில்லை !