முதையாவை சிறைக்கு அனுப்பிய மின்னல் வானொலிக்கு நன்றி!

muthaiyaa ஞாயிறு நக்கீரன். ஆகஸ்ட் 1, 2017.  விரும்பிய வாழ்க்கை அமைய வேண்டுமா? தேடும் வேலை கிடைக்க வேண்டுமா? நாடும் செல்வம் கிட்ட வேண்டுமா? கணவன்-மனைவியிடையே இணக்கம் வேண்டுமா? காதல் நிறைவேற வேண்டுமா? நோய் நீங்க வேண்டுமா? புதிய வீடு வாங்க வேண்டுமா? புதிய வாகனம் வாங்க வேண்டுமா? இவை யாவும் உடனே ஈடேறும். அதற்கெல்லாம் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வழி, அதுவும் எளிய வழி, உங்களின் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

அடுத்த நாளே உங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரலாம். எனவே, என்னை வந்து பாருங்கள் அல்லது என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்று மாய்ந்து மாய்ந்து-விழுந்து விழுந்து-கத்தி கதறி விளம்பரம் செய்த முதையா என்பவருக்கு தன்னுடைய பெயரை மாற்றி வைத்து, கடந்த ஜூலை 20-ஆம் நாள் தங்காக் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியவில்லை.

அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலி தலையில் தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்;  அந்த அளவிற்கு தாஜுதீன் ஜமால் முகம்மது என்னும் இயர்பெயரைக் கொண்ட முதையாவுக்கு ஆதரவு அளித்ததுடன் அன்றி, டாக்டர் என்றும் கணித மேதை முதையா என்றும் மலேசிய இந்திய சமூகத்திற்கு அவரை அறிமுகம் செய்தது, வாரந்தோறும் தொடர்ந்தது.

minnal2இதில் வேடிக்கையும் விநோதமும் என்னவென்றால், அந்த நிகழ்ச்சியைப் படைத்த பெண் அறிவிப்பாளர், “ஏங்க டாக்டர்?”;  “என்னங்க டாக்டர்?”; “எப்படிங்க டாக்டர்?”; “இப்படிங்களா டாக்டர்?”; “அப்படிங்களா டாக்டர்?” என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சுக்கு டாக்டர், டாக்டர் என்று அழைத்து, இந்த மோசடி மனிதரை சமூகத்திற்கு அறிமுகம் செய்ததுதான்.

இதே ஆசாமி ஓர் இளம் பெண்ணை மானபங்கம் செய்துவிட்டதாக கொஞ்ச காலத்திற்கு முன் சபாய் சட்டமன்ற உறுப்பினர் ‘தமிழச்சி’ துரை.காமாட்சி மிகவும் வருத்தம் தெரிவித்தார். இதற்கெல்லாம் ஒரே வழி, மக்களிடையே விழிப்புணர்வும் அறிவுத் தெளிவும் ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அவர் அன்று சொன்னது எத்தனை உண்மையானது என்பது தற்பொழுது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்த உலகில் அனைத்துமே எதிர்வினையைத் தரக்கூடியவை; அன்பு காட்டினால் அதே அன்பு திரும்பக் கிடைக்கும். இன்று பாடுபட்டால் நாலை பலன் கிடைக்கும். அது விவசாயமாக இருந்தாலும் சரி அரசாங்கப் பணியாக இருந்தாலும் சரி. ஆனால், எதுவுமே செய்ய வேண்டாம்; பெற்றோர் வைத்த பெயரை சற்று மாற்றிக் கொண்டு சும்மா இருந்தாலேப் போதும்; யாவும் கைக்கூடும் என்று சமுதாயத்திற்கு தவறான வழியைக் காட்டி, அவர்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி  ஆதாயம் தேட நினைக்கும் இந்த முதையா போன்ற மனிதர்களை சமுதாயம் நம்புவதுதான், அதுவும் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் நம்புவதெல்லாம் வாடிக்கையாக நீடிப்பது வேடிக்கையாக உள்ளது.

முத்தையா என்றால் தமிழில் முத்தான பொருள் உள்ளது; ஆனால், முதையா என்றால் அது பொருளே இல்லாத சொத்தையான சொல். விளம்பரம் தருகிறார்.. பணம் கிடைக்கிறது என்பதற்காக இதுபோன்ற ஏமாற்று மனிதர்களை சமுதாயத்திற்கு அறிமுகம் செய்யும் வேலையை அரசாங்க வானொலியான மின்னல் பண்பலை அலைவரிசை செய்யலாமா?

‘வானொலி தொலைக்காட்சிப் புகழ் எண் கணித மேதை முதையா’ என்று மலேசியத் தமிழ் நேயர்களுக்கு மின்னல் வானொலி அறிமுகம் செய்த இந்த 58 வயதுக்காரர் தற்பொழுது நீதிமன்றக் காவலில் உள்ளார். எண் கணித ஆற்றலின் மூலமாக எதிர்காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று விளம்பரம் செய்த இவர், தன்னுடைய பெயரை மாற்றி அமைத்து அதன்வழி தன்னுடைய எதிர்காலத்தையும் நல்ல முறையில் மாற்றி வைத்துக் கொள்ளாமல், தங்காக் நகரில் உள்ள ஒருவரிடம் 52,000 வெள்ளியை  ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அண்மையில் தங்காக் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்.

இவர் மீது மேலும் 13 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட மோசடி மனிதரை சமூகத்திற்கு அடையாளம் காட்டி, தங்களின் எதிர்கால மேன்மைக்காக இவரை நாடுங்கள் என்று பொதுமக்களைத் தூண்டிய மின்னல் வானொலி இதுவரை மௌனம் காக்கிறது. குறைந்தபட்சம் தன்னுடைய நேயர்களிடம் மன்னிப்பாவது கேட்க வேண்டாமா?

–    ஞாயிறு’ நக்கீரன்