பள்ளி ஆசிரியர்களுக்கு பிரம்படி கொடுக்க வேண்டும்

 

-ஜீவி காத்தையா, ஆகஸ்ட் 11, 2017.Chong-Sin-Woon-3

இந்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குண்டர்தனம் படைத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த இரகசியம்.

மாணவர்களைக் காலணியால் அடிப்பது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, நெற்றியிலிடப்பட்டுள்ள பொட்டை அழிப்பது, கழிவறைப் பகுதியில் உணவு உண்ணச் செய்வது, பாலே தொங்சான் என்று பாதை காட்டுவது போன்ற பலவற்றை குண்டர்கள் போல் செய்வது ஆசிரியர்கள் பலரின் நடவடிக்கைகளாக இருக்கின்றன என்பது தெரிந்ததே.

இப்போது ஆசிரியர்களில் சிலர் தலிபான்களாகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர். குடிநீர் குவளைகளில் அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பள்ளிக்குள்ளேயே “இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியரல்லாத” வகுப்பறைகள், நடைபாதைகள், கழிவறைகள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள். இறுதியில், இஸ்லாமியரல்லாத மாணவர்களுக்கு பள்ளியில் இடமில்லை என்பார்கள்.

இது போன்ற செயல்களுக்கு எதிர்ப்பு கிளம்பினால் அமைச்சர்கள், குறிப்பாக துணை அமைச்சர்கள், சமாதானம் சொல்லுவார்கள். எல்லாம் அடங்கிவிடும், அடுத்த சம்பவம் தலைதூக்கும் வரையில்.

பள்ளி ஆசிரியர்களின் அடாவடிதனத்தைக் கண்டித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அவற்றை ஆசிரியர்கள் பொருட்படுவத்தில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

மனிதன் தானாகவும் திருந்த மாட்டான், சொன்னாலும் திருந்த மாட்டான். கிருஷ்ணர், புத்தர், ஏசுநாதர், முகமட் போன்ற பலர் தோன்றினர், நன்னெறிகளைப் போதித்தனர். மனிதன் மாறவில்லை. இப்போதெல்லாம் அவர்களின் பெயரைச் சொல்லியே மனிதன் அட்டகாசம் செய்கிறான். அதில் ஆசிரியர்களும் அடங்குவர்.

ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை நடுங்க வைக்கிறார்களோ அப்படியே ஆசிரியர்கள் நடுங்க வைக்கப்பட வேண்டும்: குற்றம் புரிந்த ஆசிரியருக்கு பிரம்படி!

அந்தப் பிரம்படியை பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது அம்மாணவரின் பெற்றோர்  கொடுக்க வகை செய்ய வேண்டும், அதுவும் பகிரங்கமாக செய்யப்பட வேண்டும். ஆசிரியருக்கு கொடுக்கும் பிரம்படி கல்வி அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டதாகவும் கருதப்ப வேண்டும்.

ஓர் ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் பிரம்படியால் ஆசிரியர் உலகம் மாறிவிடப் போவதில்லை. ஆனால், பிரம்படி கிடைக்கும் என்ற அச்சம் அவர்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும்.